BREAKING NEWS
Search

பொட்டு அம்மான் பத்திரம்… தலைவர் ரகசியம்!

பொட்டு அம்மான் ‘பத்திரம்’… தலைவர் ‘ரகசியம்’!

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர், கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாகத் தேடப் பட்டு… கடந்த ஜூன் மாதம் தமிழக உளவுத் துறையால் வளைக்கப்பட்டார்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டர், சில தினங்களுக்கு முன் பூந்தமல்லி சிறப்பு முகாமுக்குக் கொண்டு வரப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகளின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு மற்றும் சில வழக்கறிஞர்கள் மூலமாக சிரஞ்சீவி மாஸ்டரிடம் ஜூனியர் விகடன் பத்திரிகை எடுத்துள்ள பேட்டி:

‘உங்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச் சாட்டுகள் உண்மைதானா?’

‘என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கி இருந்தாலும், இதுகாலம் வரை எவ்விதத் தவறான செயல் பாடுகளிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைதுசெய்து இருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை!’

‘பிரபாகரனுக்கு எதிரான வரதராஜ பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப் பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டு இருந்தார்களே..?’

(சிரிக்கிறார்…) ”எனக்கு அப்படி எல்லாம் எவ்வித அஸைன்மென்டும் கொடுக்கப் படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்… அவர்களின் வல்லமை என்ன? என்பது போலீஸாருக்கே தெரியும். அவர்கள் மூலமாக வரதராஜ பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கையானது.

பிடிபட்டவர்கள் அப்படி ஒரு வாக்கு மூலத்தைக் கொடுத்தார்களா..? இல்லை, வேண்டுமென்றே அப்படி ஒரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா..? என்பது தெரியவில்லை. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதை எல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.’

‘ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்களா? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?’

‘சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருசேர அழிக்கப்பட்டனர். ‘பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம்’ என்கிற செய்தியை தினசரிகளில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் மனது பதறுகிறது.

ஆனால், ஈழத்தில் கொத்துக் கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலகம் முன்வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை!’

‘பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை?’

‘எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.’

‘சரி… உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்…?’

(பலமாக சிரிக்கிறார்) ”மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.’

‘கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறதே?’

‘சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய் கிறது. போர்க் காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’

‘ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா?’

‘முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? எத்தகைய அடக்குமுறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்!’ -உறுதியோடு சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்!

நன்றி: ஜூனியர் விகடன்
7 thoughts on “பொட்டு அம்மான் பத்திரம்… தலைவர் ரகசியம்!

 1. niyayam

  இப்படி பேசி பேசியே வர்ற பணத்த காப்பாத்திக்க வேண்டியதுதான்

 2. Thendral MANI

  நன்றி என்வழி இணையதளம் ,,ரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் மனம் இளைப்பாற ஒரு செய்தி சொன்னிர்கள் ,, மிகவும் மகிழ்ச்சி ,தலைவரும் தளபதியும் வர காதிற்குறோம்

 3. Juu

  நிச்சயம் இருள் நீங்கி ஒளி வரும் என்ற நம்பிக்கையோடு….
  விடியும் வரை காத்திருப்போம்!!

 4. மோகன் மலேசியா

  மனம் குளிர செய்தி தந்தீர்.. நன்றி. தளபதியும் தலைவரும் வரட்டும்..நாம் திருப்பி அடிக்கும் போது, உலகம் இதேபோல வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *