BREAKING NEWS
Search

புள்ளி விவரங்களில் மட்டும் விலை குறையும் அதிசயம்!!

புள்ளி விவரங்களில் மட்டும் விலை குறையும் அதிசயம்!!

து என்னமோ தெரியவில்லை… இந்தியாவில் மட்டும் விலைகுறைவு என்பது புள்ளிவிவரங்களில் மட்டுமே சாத்தியமாகிறது.

நடைமுறையில் ஏக விலை உயர்வும், குறியீட்டெண்களில் மளமள வீழ்ச்சியும் தொடரும் முரண்பாடுகளாகவே மாறிவிட்டன.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பொருளியலின் அடிப்படை விதிகளே இந்தியப் பொருளாதாரத்துக்கு மட்டும் பொருந்தாத நிலை உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்:

இந்தியாவின் உணவுப் பணவீக்கம் தொடர்ந்து 7 வது வாரமாகக் குறைந்துள்ளது. நவம்பர் 20-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.6 சதவீதமாக இருந்தது உணவுப் பணவீக்கம். இதற்கு முந்தைய வாரத்தில் இது 10.15 சதவீதமாக இருந்துள்ளது.

அதாவது கடந்த 7 வாரங்களாக நாட்டில் உணவுப் பொருள்களின் விலை குறைந்துள்ளது என்று அர்த்தம். கரீப் பருவ விளைச்சல் சந்தைக்கு வரத் துவங்கியுள்ளதால் இந்த விலைக் குறைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த வாரத்தில் மட்டும் உணவு தானியங்களின் விலை 10 சதவீதம் குறைந்துவிட்டதாகவும், காய்கறிகள் மிகவும் மலிவாகிவிட்டதாக மத்திய புள்ளி விவரத்துறை கூறுகிறது.

உண்மை இதுதானா? சந்தையில் நிலவரம் என்ன?

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்கறிகளின் விலை உயர்வு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சில்லறை விலைக் கடைகளில் காய்கறி வாங்க குறைந்தது ரூ 100 எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு காய்கறியிலும் குறைந்தது கால்கிலோவாவது வாங்க முடியும் என்ற நிலை. வெங்காயம் விலை 50 ரூபாய்க்கும் அதிகமாகவும், பூண்டு ரூ 220 வரையிலும், இதர காய்கறிகள் இரண்டு மடங்கு அதிக விலையிலும் விற்கப்பட்டு வருகிறது. முருங்கைக்காய் விலை இன்றும் கிலோ ரூ 60 வரை விற்கப்படுகிறது. எனில், இதில் எங்கே வந்தது பணவீக்கக் குறைவு?

காய்கறிகள் விலை மட்டும்தான் என்றில்லை… உணவு தானியம், உணவுப் பொருள் அல்லாத பிறவற்றின் விலை, சிமெண்ட், கம்பி போன்ற கட்டுமானப் பொருள்களின் விலை… எதில் விலைக் குறைவு ஏற்பட்டுள்ளது?

யாரை ஏமாற்ற இந்த புள்ளி விவரங்கள்?

அப்படியானால் பணவீக்கம் – விலை நிலைக்கான தொடர்பே சும்மாவா? என்றால்…இல்லை. உலக நாடுகள் இந்த இரு விஷயங்களையும் வெகு அழகாக பேலன்ஸ் செய்கின்றன.

பணவீக்கம் என்பது விலை நிலையைக் காட்டும் தெர்மா மீட்டர் மாதிரி. அதில் உயர்வான நிலை காணப்பட்டால், உடனடியாக அதைக் குறைப்பதற்கான வைத்தியத்தை ஆரம்பித்துவிடுகிறார்கள் வெளிநாடுகளில்.

சமீபத்திய உதாரணம் சீனா.

நவம்பர் மாத ஆரம்பத்தில் சீனாவில் பணவீக்கம் 4.4 சதவீதத்தைத் தொட்டது. மாத இறுதியில் 5 சதவீதத்தைத் தொடும் என பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்தனர். அதாவது சாதாரண நிலையிலிருந்து விலைவாசி சற்றே உயரும் நிலை தோன்றியது.

அவ்வளவுதான், அடித்துப் பிடித்துக் கொண்டு அந்த நாடு எடுத்த நடவடிக்கைகளைப் பாருங்கள்…

நவம்பர் இரண்டாவது வாரத்திலேயே, மின்சாரம், எரிவாயு, உரங்கள் போன்றவற்றின் விலையைக் குறைக்குமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டது சீன அரசு. ரயில் கட்டணத்தை ஒரே நாளில் 20 சதவீதம் குறைத்தது.

தொடர்ந்து மின்சாரம் கிடைக்க, நிலக்கரி மற்றும் டீஸல் சப்ளையை தடையின்றி வழங்க அனைத்து நிறுவனங்களிடமும் உறுதிமொழி பெற்றுக் கொண்டது. மீறினால் உரிமம் ரத்தாகும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

முக்கியமாக அனைத்து சாலைகளிலும் லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது (இந்தியாவில் இன்று இதுதான் முக்கியப் பிரச்சினை. இதற்காகத்தான் இன்று லாரி ஸ்ட்ரைக்கும் ஆரம்பமாகியுள்ளது!).

உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த, குளிர் பருவ காய்கறிகள் மற்றும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இவற்றை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாய விலையில் வழங்கும்.

கள்ள மார்க்கெட்டில் பொருள்கள் விற்பதை அடியோடு தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் நம் நாட்டில் ஒருமுறையாவது அரசு இத்தனை சீரியஸாக நடவடிக்கை மேற்கொண்டதுண்டா… ம்ஹூம்!

பணவீக்கம் என்ற பேச்சு கிளம்பியதும் ரிசர்வ் வங்கி வட்டிகளை ஏற்றும் அல்லது இறக்கும். உடனே அனைத்து வணிக வங்கிகளும் இஷ்டத்துக்கு வட்டியை உயர்த்தும். அதாவது வட்டியை உயர்த்தினால், நாடடில் உள்ள உபரிப் பணமெல்லாம் வற்றிவிடுமாம். பணப்புழக்கம் குறைந்து, பணவீக்கம் குறைந்துவிடுமாம். வட்டி வீதத்தை உயர்த்துதல் என்பது ஒரு அவசர கால ஆயுதம் மாதிரி. ஆனால் இவர்களுக்கோ அது ஒன்று மட்டும்தான் தெரிகிறது… அல்லது சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு கொழுத்த லாபம் போய்ச் சேருவது தடைபடக் கூடாது என்பதற்காக இந்த உச்சகட்ட  மூடத்தனத்தைத் தொடர்கிறார்களா தெரியவில்லை…

பிரதமரின் பொருளாதார ஆலோசகர்களும் புள்ளி விவரத்துறைக்குமே இது வெளிச்சம்!

மொத்தவிலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பொதுப் பணவீக்க கணக்கெடுப்பு முறை சரியான நிலவரத்தைக் காட்டுவதில்லை என்பதற்காகவே, இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து உணவுப் பணவீக்க முறையை கணக்கில் எடுத்துக் கொள்வதாக அறிவித்தது மத்திய அரசு.

ஆனால் இதிலும் நடைமுறைக்கும் புள்ளி விவரத்துக்கும் சம்பந்தமே இல்லாத நிலை தொடர்கிறது.

புள்ளிவிவரத்தில் எண்கள் மாறுகின்றன… ஆனால் அன்றாட வாழ்க்கையில் விலைவாசியோடு மல்லுக்கட்டும் நிலை இன்னும் இறுக்கமாகவே உள்ளது!

-எஸ்எஸ்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *