BREAKING NEWS
Search

புதிய தமிழீழ அரசு: சட்டப் பின்னணி, ஆலோசனைக் குழு விவரம்!


புதிய தமிழீழ  அரசாங்கம்:   தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு பற்றிய விவரம் அறிவிப்பு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அவசியம் மற்றும் அதன் uru_1செயல்பாடு, சட்டதிட்டம் குறித்த விவரங்களை,  இந்த ‘அரசி’ன் செயற்குழு தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்கள் யார் யார் என்ற விவரங்களையும் அறிவித்துள்ளார்.

அமெரிக்க பேராசிரியர் பிரான்ஸிஸ் பாய்ல் உள்ளிட்ட பலர் இந்தக் குழுவில் இடம்பெற முன்வந்துள்ளனர்.

அந்த அறிக்கை விவரம்:

வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக  தடைசெய்யப்பட்ட கனரகப் போர் ஆயுதங்களினாலும்,  தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக் குண்டுகளினாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சர்வதேச சட்ட விதிகளை மீறி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்களும், அனைத்துலக அரச நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப் பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ். தீபகற்பம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாக உள்ளது.

இலங்கையின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் தினசரி நிகழ்வாக உள்ளது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறி வைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணாமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச் சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இன அடையாளம் சிதைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளை எடுத்துரைக்கும் அரசுரிமை வெளியும் அழிந்து போய் உள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர்.  ஜோசப் பரராசசிங்கம் (2005), நடராசா ரவிராஜ் (2006),  க.ந.சிவநேசன் (2008) ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர்கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறுகச் செய்துள்ளது.

இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கி உள்ளது.

இந்நிலையில் இலங்கையின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஆக்கபூர்வமான, பயன்தரு வகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்  களமும் இலங்கையில் இல்லை.

இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமே இல்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்காலிகமான  ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிக முக்கிய பணியெனக் கருதுகின்றார்கள்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும் சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க் குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும், அடிப்படை சட்டநெறித்தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.

இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

1. 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003 இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய

– தமிழர் ஓர் தேசிய இனம்
– வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்
– ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை

போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது.

2. 2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

4. உலகு அனைத்தும் பரவி வாழும் ஈழத் தமிழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

5. ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

6. அரசுகளுடனும், பல அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

7. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.

8. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக அனைத்துலக அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற அனைத்துலக நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்படுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத் தமிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திரவதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற்கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று லட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.

தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அமைப்புக்களுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச்செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவிய ரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உப குழுக்களை கொண்டு இயங்கும்.

நிபுணர் குழு அமைப்பு

இச் செயற்பாட்டுக் குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சொர்ணராஜா (பிரிட்டன்)

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)

பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா)

பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்)

கலாநிதி முருகர் குணசிங்கம் (ஆஸ்திரேலியா)

மருத்துவ கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (ஆஸ்திரேலியா)

கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா)

சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)

செல்வா சிவராசா (ஆஸ்திரேலியா)

போல் வில்லியம்ஸ் (நெதர்லாந்து)

பேராசிரியர் பீட்டர் சால்க் (சுவீடன்)

ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற் திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

இக்குழு 2009 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் நாள் வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத் தேதி வரையிலான செயற்பாடுகளை இக்குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும்.

இத்திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம், என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பு: நாடு கடந்த அரசாங்கம் என்பது என்ன, அதன் அதிகாரம், சட்ட அங்கீகாரம் போன்றவை குறித்து விரைவில் விரிவாகப் பார்ப்போம்...
2 thoughts on “புதிய தமிழீழ அரசு: சட்டப் பின்னணி, ஆலோசனைக் குழு விவரம்!

  1. Manoharan

    நாடு கடந்த அரசாங்கம் என்பது என்ன, அதன் அதிகாரம், சட்ட அங்கீகாரம் போன்றவை குறித்து விரைவில் விரிவாகப் பார்ப்போம்…

    உண்மையில் நாடு கடந்த அரசாங்கம் என்பது என்னவென்று புரிந்தால்தான்,அதில் நாமும் பங்கு கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்.இதன் மூலமாவது எதையாவது உருப்படியாக செய்யமுடியுமா என்று பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *