BREAKING NEWS
Search

புதினம் குழுவினர் துவங்கியுள்ள புதினப்பலகை!

புதினம் குழுவினர் துவங்கியுள்ள புதினப்பலகை!

வன்னி: தமிழீழச் செய்திகளைத் தருவதில் பிரபலமாகத் திகழ்ந்த puthinam.comபுதினம் இணைய தளம் புதினப்பலகை எனும் பெயரில் புதிய நிர்வாகத்தின் கீழ் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளதாக அதில் முன்பு பணியாற்றியவர்கள் அறிவித்துள்ளனர்.

வன்னிப் போர்க்களச் செய்திகளை தங்கள் சிறப்புச் செய்தி யாளர் மூலம் உடனுக்குடன் வெளியிட்டு வந்தது புதினம்.  ஆனால் முள்ளிவாய்க்காய் துயரங்களுக்குப் பின் பல மாறுபாடுகளும் குழப்பங்களும் நீடித்ததால் புதினம் பரவலான விமர்சனத்துக்குள்ளானது. ‘முன்னாலே சென்றோரின் பின்னாலே சென்றோரின் பின்னாலே…’ என்று புதினத்தின் குரலில் மாறுதல் தொனிக்கத் துவங்கியதுமே கடும் விமர்சனங்கள் கிளம்பின.

அதன் பிறகும் தொடர்ந்து இயங்கி வந்த இந்தத் தளம், திடீரென்று முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் புதினம் என்ற பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி ஒரு இணையத்தளம் வெளியானது. ஆனால் அது ஒரிஜினல் புதினம் அல்ல என்றும், மலிவான நோக்கத்தில் சிலர் செய்யும் வேலை என்றும் புலம் பெயர் தமிழர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக

நமது தளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது.

இந் நிலையில் புதினம் தற்போது, புதிய நிர்வாகத்தின் கீழ், புதினப்பலகை என்ற பெயரில் செயல்படத் துவங்கிவிட்டதாக, அந்த தளத்தில் பணியாற்றியவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக புதினப்பலகை தளத்தில் வெளியாகியுள்ள ‘வாக்குமூல’த்தின் முக்கிய பகுதியை மட்டும் இங்கே தருகிறோம்:

இணைய ஊடகங்களான “புதினம்” மற்றும் “தமிழ்நாதம்” ஆகியன நிறுத்த வைக்கப்பட்ட நிகழ்வு- ஒரு வரலாற்றுத் துயரம்தான்.

ஈழத் தமிழரின் போராட்ட வாழ்வில் இதுவும் ஒரு பரிமாணத்தில் பின்னடைவுதான்.

புதினம் தளம் மூட வைக்கப்பட்டது என்பது, தமிழர்களுக்குள் குருட்டு நம்பிக்கைகளை வளர்த்து, நடைமுறைச் சாத்தியமற்ற கனவுகளைக் காணவைத்து, தமிழினத்தைத் தொடர்ந்தும் ஒரு மாயைக்குள் வைத்திருக்க முயலுகின்ற நேர்மையற்றவர்களின் சதி.

தமிழர்களிடம் உண்மை சென்றடைவதைத் தடுக்க முயல்வோர் புரிந்து வரும் தொடர் அடாவடித்தனத்தின் உச்சம்தான் இது.

ஆனால் இந்த சலசலப்புக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.

“புதினம்” தளத்தின் பல்துறை பங்காளர்களாகிய நாங்கள்- அதன் செய்தியாளர்கள் மற்றும் அதன் ஆர்வலர்களின் துணையுடன், சமூக அக்கறை கொண்டவர்கள் பலரின் ஒத்துழைப்புடன் “புதினப்பலகை” www.puthinappalakai.com, www.TamilNewsBoard.com ஆகிய தளத்தைத் தொடங்கியுள்ளோம்.

சுருக்கமாக- புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்கத் தொடங்கும் தளத்தின் புதிய பெயர் தான் “புதினப்பலகை.”

செய்திகளில் நம்பகத்தன்மையையும், அவற்றை வெளியிடுவதில் தனித்துவத்தையும், ஊடகவியலில் ஒரு தரத்தையும் “புதினம்” தளத்தில் பேணிய நாங்கள்- அதே நம்பகத்தன்மையையும், தனித்துவத்தையும், தரத்தையும் “புதினப்பலகை”யிலும் தொடர்ந்தும் பேணுவோம்.

ஆனால்- மே 2009 வரையான காலத்தில் தமிழ் பேசும் மக்களின் “நலனும்” தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புற்று இருந்ததால்- “புதினம்” தளமானது- விடுதலைப் புலிகளின் “ஊதுகுழல்” என ஒரு சாராராலும், அவர்களது “அதிகாரபூர்வத் தளம்” என இன்னொரு சாராராலும் கருதப்பட்டு வந்தது.

மே 2009க்குப் பின்னான காலத்தில்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாகவே செயலிழக்கச் செய்யப்பட்ட போதும்- “புதினம்’, எப்போதும் போல, தமிழ் பேசும் மக்களின் “நலன்” என்ற இலக்கு நோக்கியே தொடர்ந்தும் இயங்கி வந்தது.

மே 2009க்குப் பின்னான அந்தக் காலத்தில்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருந்த பகுதி தன்னை ஒரு சுய மீளாய்வுக்கு உட்படுத்திய போது- “புதினம்”, எப்போதும் போல, தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களின் “நலனை” மட்டுமே முன்னிறுத்தி அவர்களிடம் உண்மையைக் கொண்டு சென்றது.

ஆனால்- அதுவே பின்பு பெரும் சர்ச்சையாகி, ஒரு வகையில் “துரோகம்” எனவும் ஆகி, பழிச்சொல்லுக்கும் உள்ளாகி- கடைசியில், ஆயுதங்களற்ற வன்முறைக்கும் இலக்காகியபோது- “தனிப்பட்ட காரணங்களினால்” என அறிவித்து விட்டு “புதினம்’ தளத்தின் பழைய நிர்வாகம் அதனை இழுத்து மூடும் நிலைக்கும் வந்தது.

“புதினம்” தளத்தை மீண்டும் இயக்குவதற்கு நாங்கள் எடுத்த எந்த முயற்சியும் கைகூடாது போன பின்னணியில்- அதன் பெயரிலும் அதே வடிவத்திலும் புதுத் தளம் தொடங்கி அதன் நற்பெயரையும், நம்பகத் தன்மையையும், உயர் தரத்தையும் மாசுபடுத்த சிலர் முயன்றுள்ள சூழ்நிலையில்- புதிய நிர்வாகத்தின் கீழ்- “புதினப்பலகை” என்ற புதிய பெயரின் கீழ் இயங்கத் தொடங்குவதற்கு “புதினம் குழுமம்” ஆகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

“புதினப்பலகை” தமிழ் பேசும் மக்களுடன் என்றென்றும் இணைந்திருந்து- உண்மையை மட்டுமே அவர்களிடம் எடுத்துச் செல்லும் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்..”என நீண்டதொரு விளக்கத்தினை அளித்துள்ளது.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *