BREAKING NEWS
Search

பிரபு தேவா – நயன்தாராவுக்கெதிராக சட்டப் போரில் இறங்கிய ரம்லத்

பிரபு தேவா – நயன்தாராவுக்கெதிராக சட்டப் போரில் இறங்கிய ரம்லத்

சென்னை: நயன்தாராவுடன் கள்ள உறவில் ஈடுபட்டுள்ள கணவர் பிரபு தேவாவை மீண்டும் தன்னுட் சேர்த்து வைக்குமாறு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனைவி ரம்லத் வழக்கு தொடர்ந்தார்.

சினிமா நடனக் குழுவில் இருந்த ரம்லத்தை காதலித்து மணந்தார் பிரபு தேவா. இந்த திருமணத்துக்கு அவர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே சூப்பர் ஸ்டார் ரஜினி, அவர் மனைவி லதா உள்ளிட்ட திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் ஆதரவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர் பிரபு தேவாவும் ரம்லத்தும். முஸ்லிம் பெண்ணான ரம்லத் தனது பெயரை லதா என மாற்றிக் கொண்டு பிரபுதேவாவுக்காக இந்து மதத்தைத் தழுவினார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மூத்தமகன் சமீபத்தில் இறந்துவிட, அப்போது ஆறுதல் சொல்ல வந்த நயன்தாராவை காதலியாக்கிக் கொண்டார் பிரபு தேவா.

இரு ஆண்டுகளுக்குமேல் நீடித்த தங்களது கள்ளக் காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பிரபு தேவா, நயன்தாராவையே திருமணம் செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு ரம்லத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக வீட்டுக்கு வராமல் நயன்தாராவுடனேயே பிரபுதேவா தங்கி இருப்பதால் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார். பிரபு தேவா தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரம்லத் சார்பில் வக்கீல் ஆனந்த் இன்று பகல் 12 மணிக்கு இந்த மனுவை தாக்கல் செய்தார். ரம்லத்தும் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சினிமா தயாரிப்பாளர் ஜெயந்தி ஏ.எல்.எஸ். கண்ணப்பனும் வந்திருந்தார்.

தனது மனுவில் ரம்லத் கூறியிருப்பதாவது:

“நானும் எனது கணவர் பிரபுதேவாவும் திருமணத்துக்கு முன்பு சினிமா தொழிலில் ஈடுபட்டு வந்தோம். அப்போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. எங்கள் காதலை இருவர் பெற்றோருக்கும் தெரிவித்தோம். ஆனால் பிரபுதேவாவின் தந்தை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனாலும் 8.9.1995 அன்று எங்கள் திருமணம் அசோக்நகரில் உள்ள எனது வீட்டில் வைத்து இந்து முறைப்படி நடந்தது.

அதன்பிறகு அசோக் நகரில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டில் நாங்கள் குடும்பம் நடத்தினோம். 1996-ல் அண்ணாநகரில் உள்ள வீட்டுக்கு சென்றோம். அடுத்து ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு மாறினோம்.

நாங்கள் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு பசவராஜு, ரிஷிராகவேந்திரா, ஆதித்யதேவா ஆகிய 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. எங்கள் வாழ்க்கை அமைதியாகச் சென்றது.

2007-ல் எங்கள் குடும்ப வாழ்க்கை சம்பந்தமாக பிரபுதேவா ஒரு பத்திரிகைக்கும் பேட்டி கொடுத்தார். அதில் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்வது பற்றி குறிப்பிட்டு இருந்தார்.

சினிமா வாழ்க்கையில் ஹீரோவாக உயர்ந்த அவர் பின்னர் இயக்குநராகவும் மாறினார். அப்போது அவருடைய நடவடிக்கைகளிலும் நடத்தைகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன.

2008-ம் ஆண்டு அவர் வில்லு என்ற படத்தை இயக்கினார். அப்போது அதில் நடித்த நடிகை நயன்தாராவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக உருவெடுத்தது. இருவரும் ஒன்றாக சுற்றினார்கள். தொழில் ரீதியாக சுற்றுவதாக காட்டிக் கொண்டு கடந்த 2 வருடமாக ஒன்றாக இருக்கின்றனர்.

அவர்கள் தொடர்பைப் பற்றி தெரிந்ததும் இந்த உறவை துண்டிக்க முயற்சித்தேன். இதுபற்றி பத்திரிகையிலும் செய்தி வந்தது.

ரஜினி அறிவுரை…

இதை அறிந்து எங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் பிரபுதேவாவிடம் பேசினார்கள். நடிகர் ரஜினிகாந்தும் பிரபுதேவாவிடம் மனைவி- குழந்தைகளுடன் சேர்ந்து வாழுங்கள் என்று சமாதானம் பேசி, அறிவுரை சொன்னார்.

ஆனால் பிரபுதேவா நயன்தாராவுடன் உள்ள தொடர்பை நீடித்து வந்தார்.

இதற்கிடையே பிரபுதேவாவும், நயன்தாராவும் ஐதராபாத்தில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்தன.

என் கணவர் எப்போது எங்கள் வீட்டுக்கு வந்தாலும் உடனே நயன்தாரா போன் செய்து உடனே அவரை திரும்ப வரச் சொல்வார். பிரபு தேவா சரியாக வீட்டுக்கு வராமல் இருந்ததால் எனது மூத்த மகன் அழுவான். அவன் இறந்த போது மறுநாளே பிரபுதேவா வீட்டிலிருந்து சென்றுவிட்டார்.

திருமணத்துக்கு முன்பு நான் சினிமாவில் நடித்தேன். திருமணம் முடிந்ததும் நடிப்பதை நிறுத்திவிட்டு நல்ல மனைவியாக குடும்பம் நடத்தி வந்தேன்.

நயன்தாரா எப்போது சென்னை வந்தாரோ அதன் பிறகு என் கணவரை தன்னோடு அழைத்துச் சென்று விட்டார். இருவரும் பார்க் ஓட்டலில்தான் தங்கினார்கள்.

இருவருக்கும் உள்ள தொடர்பு பற்றி பத்திரிகைகளிலும், டி.வி.க்களிலும் செய்தி வந்தன. அவர்களின் படங்களும் வெளிவந்தன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பத்திரிகையில் அவர்கள் ஒன்றாக இருக்கும் படம் ஒன்று வெளி வந்தது அதில் புதிதாக திருமணம் ஆன பெண் போல நயன்தாரா எனது கணவருடன் இருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நான் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தேன். அதில் எங்கள் குடும்ப வாழ்க்கையில் யாரும் குறுக்கிட முடியாது என்று கூறி இருந்தேன். ஆனால் பிரபுதேவா இந்த பேட்டிக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 13.9.2010 அன்று இணைய தளம் ஒன்றுக்கு பிரபுதேவா பேட்டி அளித்து இருந்தார். அதில் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அறிவித்துள்ளார்.

இதனால் நான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன். என் வாழ்க்கை நாசமாகிவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

நயன்தாரா பேரம்…

 

இந்த நிலையில் நயன்தாராவே என்னிடம் இதுபற்றி பேசினார். அவர்களின் உறவை ஏற்றுக்கொள்ளும்படியும், எனது கணவரை அவர் 2-வது திருமணம் செய்ய அனுமதிக்கும்படியும் என்னிடம் கேட்டார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

தமிழ் கலாச்சாரத்தில் பிறந்த எந்த ஒரு பெண்ணுமே இந்த மாதிரி செயல்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

இது எனக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினையாக கருதவில்லை. இது ஒட்டு மொத்த தமிழ் பெண்களுக்கும் நமது கலாச்சாரத்துக்கும் ஏற்பட்ட பிரச்சினையாக கருதுகிறேன்.

அது மட்டுமல்ல இது சமூகத்தையே பாதிக்கும் பிரச்சினையாகவும் நான் கருதுகிறேன். பிரபுதேவா சினிமா உலகில் முன்னணி இடத்தில் இருக்கிறார். அவருக்கென்று ஏராளமான ரசிகர்களும், ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். சினிமா சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது. இந்த நிலையில் இருக்கும் பிரபுதேவா சட்ட விரோத செயலை செய்தால் அது ஒட்டு மொத்த சமூகத்தையும் நமது உயர்ந்த பாரம்பரியத்தையும் பாதிக்கும். பொது மக்களும் அவரை பின்பற்ற ஆரம்பித்தால் சமூகமே சீரழிந்து விடும்.

இந்த நேரத்தில் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல நயன் தாரா சில வதந்திகளை பரப்பி வருகிறார். அவர் எனக்கு ரூ.3 கோடி, 180 பவுன் தங்க நகை, ரூ.85 லட்சம் மதிப்புள்ள நெக்லஸ் ஆகியவற்றை கொடுத்து பிரபுதேவாவுடன் 2-வது திருமணத்துக்கு சம்மதம் வாங்கி விட்டதாகவும் அவர் கூறி வருகிறார். இது என்னை அவமதிப்பதாகவும், கெட்டப் பெயரை எற்படுத்து வதாகவும் உள்ளது.

பிரபுதேவாவின் செயலுக்கு அவருடைய பெற்றோரும் ஆதரவாக உள்ளனர். எங்கள் திருமணத்தை அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்தார்கள். நான் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவள் இல்லை என்று சொன்னார்கள்.

எனவே பிரபுதேவா நயன்தாரா சட்ட விரோத உறவுக்கு அவர்களும் உடந்தையாக இருந்து எனக்கு துன்பத்தைக் கொடுக்கிறார்கள்.

கள்ளக் காதலுக்கு சிறந்த தம்பதி விருதா…

தற்போது வெளி வந்த ஒரு பத்திரிகையில் பிரபுதேவாவும் நயன்தாராவும் சிறந்த தம்பதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. திருமணமாகாத ஒரு ஜோடியை எப்படி சிறந்த தம்பதியாக தேர்ந்தெடுக்க முடியும். சட்ட விரோதமாக வாழும் அவர்களை எப்படி தம்பதியாக அறிவிக்கலாம்?

இது எனக்கு மிகுந்த வேதனையை தருவதுடன் என்னை கொடுமைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

நானும் எனது குழந்தைகளும் பிரபுதேவாவை நம்பித்தான் இருக்கிறோம். வீட்டு மாதாந்திர செலவு, குழந்தைகளுக்கான செலவு அனைத்துக்கும் அவரைத்தான் நம்புகிறோம். ஆனால் நயன்தாராவுடன் உறவை எற்படுத்திக் கொண்ட பிறகு அவர் எங்களுக்கு பணம் தருவது இல்லை. எங்களுக்கு பணம் தரவிடாமல் நயன்தாரா தடுக்கிறார். இதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

நயன்தாராவுடன் எற்படுத்திக் கொண்ட தவறான உறவு மூலம் பிரபுதேவா தனது பொறுப்பை தட்டிக் கழிக்கப் பார்க்கிறார். கணவருக்குரிய கடமையை விட்டு விலக பார்க்கிறார்.

எனவே நீதிமன்றம் இதில் தலையிட்டு அவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் மறுபடியும் எங்கள் குடும்ப வாழ்க்கை நீடிக்க நீதிமன்றம் கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..”

-இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.




3 thoughts on “பிரபு தேவா – நயன்தாராவுக்கெதிராக சட்டப் போரில் இறங்கிய ரம்லத்

  1. JB

    இவங்க எல்லாம் divorce பற்றி கேள்வி பட்டது இல்லையா? முடியலை இந்த தொல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *