BREAKING NEWS
Search

பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் கூறவே இல்லை! – முதல்வர்

பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் கூறவே இல்லை! – முதல்வர்

Karu-newசென்னை: ‘பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் கூறவே இல்லை’ என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று இரவு விடுத்துள்ள புதிய கேள்வி – பதில் அறிக்கை:

‘என் மீது பாய்ந்து குதறும் ஆனந்த விகடன்’

ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில் (வைகோ அளித்துள்ள சிறப்புப் பேட்டி)- “இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மவுனமாக அழுவது யாருக்கு தெரியும்?” என்கிறாரே கருணாநிதி?- என்ற கேள்வி கேட்கப்பட்டு- அதற்கு வேக வேகமாக பதில் சொல்லப்பட்டிருக்கிறதே?

நான் எனது கடிதத்தில், “இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டத” என்று எந்த இடத்திலும் எழுதவே இல்லை. ஆனால் நான் எழுதாததை, நான் கூறாததை கூறியதாக ஒரு கேள்வியைக் கேட்கச் செய்து, அதற்கு என்னைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது.

நான் என்னுடைய கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறேன். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டோம். முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறினோம்.

இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து- தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக்கொண்டு போய்விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை நான் எழுத நேரிட்டது.

இப்படியெல்லாம் பொதுவாக என்னுடைய வேதனையை வெளிப்படுத்தினேன். அதையெல்லாம் மறைத்துவிட்டு இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என்று நான் சொன்னதாக கற்பனையாக ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்காக என்மீது பாய்ந்து விழுந்து குதறி பதில் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த இதழ் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது! அந்த இதழின் சிறப்பு செய்தியாளர் ஒருவர் நான் எழுதாததை எழுதியதாகச் சொல்லி கேள்வி கேட்டு- அப்படி நான் எழுதினேனா இல்லையா என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னைத் தாக்கி பதில் சொல்லியிருப்பது; என் மீது வசை பாடுவதற்காகவே இருவரும் சேர்ந்து ஜோடித்த நாடகமேயாகும்.

மாத்தையா மாவீரனா?

“சகோதர யுத்தம் நடத்தியதால் தான் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?” என்று ஒரு கேள்வியும் அந்த இதழில் கேட்கப்பட்டு, அதற்கும் உங்களைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளதே?

இதுவும் நான் சொல்லாததுதான். சகோதர யுத்தம் நடந்தது என்று சொல்லியிருக்கிறேன். அதனால் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதிலே என்ன தவறு என்று தெரியவில்லை.

‘மாவீரன் மாத்தையா’ என்று நீங்கள் ஒரு துரோகியை அழைத்து விட்டதாக அந்த இதழுக்கு பேட்டி அளித்தவர் (வைகோ) சொல்லியிருக்கிறாரே?

மாத்தையாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே அவர்தான்! அப்போது அவரை மாவீரன் மாத்தையா என்று தான் அறிமுகம் செய்துவைத்தார்.

அந்த இதழில் வந்த பேட்டியில்- “வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டது என்று வேதனைப்படுகிறாரே கருணாநிதி?” என்ற ஒரு கேள்வியும் இடம் பெற்று, அதற்கும் பேட்டி அளித்தவர் எந்த அளவிற்கு உங்களைத் தாக்க முடியுமோ அந்த அளவிற்கு தாக்கி பதில் அளித்திருக்கிறாரே?

இந்த கருத்து நான் எழுதியதுதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதிலே என்ன தவறு? “விடுதலைப்படை முகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு- தளபதிகளுக்கு- தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு; இது போன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள” என்று நான் எழுதியது உண்மைதான். இதிலே எந்தப் பிழையும் இருப்பதாக நான் இப்போதும் உணரவில்லை.

நாம் கூறியதை அலட்சியப்படுத்தி- இப்போது நம்மைத் தாக்கி மிக வேகமாக பதில் சொல்லியிருப்பவர்கள் சொன்ன யோசனைகளையெல்லாம் கேட்ட காரணத்தினால்தான் இன்று இலங்கை தமிழினம் அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகி தவிக்கின்றது என்பதுதான் ஆதாரபூர்வமான உண்மை!

வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்!

வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு என்று நான் கூறியிருப்பதில் இருந்தே, அவர்களின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு நம்மைத் தாக்க வேண்டுமென்ற வெறி கொண்டவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்கத் தோன்றும். வீரத்தையும், விவேகத்தையும் பற்றி நான் இப்போது கூறவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ‘சாக்ரடீஸ’ ஓரங்க நாடகத்திலேயே ‘வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்!’ என எழுதியிருக்கிறேன். அந்த வசனத்தை பல மேடைகளில் பேசிக் காட்டியவர்கள்தான் இப்போது அதனை இழித்துரைக்கிறார்கள். எனக்கு அப்போது பேசியதுதான் மனதிலே நிற்கிறது

ஏன் புலம்ப வேண்டும்?

ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக 2 பேரை கைது செய்து விட்டு- ஒருவரை வழக்கிலிருந்து விடுதலை செய்து விட்டு, தன் மீது மட்டும் வழக்கு போட்டிருப்பதாக உங்கள் மீது குற்றம் சொல்லியிருக்கிறார்களே?

ஒரே நிகழ்ச்சியில் இரண்டு பேர் பேசியதற்காக முதலில் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் இருவரும் என்னென்ன பேசினார்கள் என்ற விவரங்களை அறிந்து, தவறாகப் பேசாதவரை வழக்கிலிருந்து விடுவித்து விட்டு தவறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறைதானே? இதிலே சட்டத்தை வளைப்பதற்கு என்ன இருக்கிறது? சண்டித்தனமாகப் பேசி சவால் விட்டு விட்டு, பிறகு குற்றப்பத்திரிகை, நடவடிக்கை என்று எதற்காகப் புலம்ப வேண்டும்?

எனக்கு உரிமை இல்லையா?

“பிரபாகரனால் தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என்று கருணாநிதி சொல்கிறார் என்றால், அவர் சிங்கள அரசாங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறிவிட்டதையே காட்டுகிறது” என்று பேட்டியாளர் சாடியிருக்கிறாரே?

பிரபாகரனால் தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என்று நான் கூறவில்லை. 24-11-2009-ந் தேதி நான் ஒரு கேள்விக்கு எழுதிய பதிலிலே கூட- ‘ஈழ விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன- அதே நேரத்தில் இளந்தலைவர் ராஜீவ் காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்தினமும், பத்மநாபாவும் கொல்லப்பட்டபோது அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?” என்றே எழுதியிருந்தேன்.

நான் இலங்கை தமிழர்களுக்காகத்தான் கண்ணீர் வடிக்கிறேன். அதிலே விடுதலைப்புலிகளும் இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், எந்தப் போராளிக் குழுவிலும் சேராத அப்பாவி ஈழத் தமிழ் மக்களும் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை.

இலங்கைத் தமிழர்களுக்காக பதவியை இழந்தவன்…

புலிகளுக்கு தோல்வியும், பின்னடைவும் ஏற்பட்டதை நினைத்து மவுனமாக குதூகலித்தவர் நீங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?

மனச்சாட்சியை விற்று விட்டவர்கள் தான் அப்படி கூறுவார்கள். புலிகளும் உள்ளடங்கிய ஈழத் தமிழர்களுக்காக 1956-ம் ஆண்டு முதல் நான் குரல் கொடுத்தவன். அவர்களுக்காக சிறை சென்றவன். நான் சிறைபட்டேன் என்பதற்காகவே தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் தீ வைத்துக்கொண்டு தங்கள் இன்னுயிரைப் போக்கிக்கொண்டார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியையே நானும், பேராசிரியரும் இலங்கை தமிழர்களுக்காக ராஜினாமா செய்திருக்கிறோம். விடுதலைப்புலிகளுக்கு செய்தி கொடுத்தேன் என்று பிரதமர் சந்திரசேகரால் காரணம் கூறப்பட்டு தி.மு.க. ஆட்சியே கலைக்கப்பட்டது, ஒரு முறை அல்ல, இரண்டு முறை. விடுதலைப்புலிகளுக்கும் சேர்த்து என் பிறந்த நாளின் போது உண்டியலில் நிதி வசூலித்து பகிர்ந்து கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர்கள் வாங்கிக்கொள்ளவில்லை.

இன்னும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். ஆனால் அவர்களின் தோல்வி கண்டு நான் குதூகலித்ததாக இவர் சொல்கிறார். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுமென்று சட்டமன்றத்திலே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதாவை இவர் நேற்றைய தினம் கூட சந்தித்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளைப் பற்றி ஜெயலலிதா பேசாதா பேச்சா? அவரின் இனிய சகோதரர் இவர்! அவர் கூறுகிறார், இலங்கைப் புலிகளுக்கும் தோல்வி ஏற்பட்டதைக் கண்டு நான் குதூகலித்ததாக! விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்த போது 4-11-2007 தேதிய ஏடுகளில் நான் கண்ணீர் விட்டு கவிதை ஒன்றை எழுதினேன். ஆனால் அதனைக் கண்டித்து அறிக்கை விட்டவர் ஜெயலலிதா.

எலிகளாயிருந்தவர்கள்… இன்று புலிகளாக மாறியுள்ளோம்!

ஏன், அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது, ஈழத்தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசனையும், விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தையும், சத்தியேந்திராவையும் நாடு கடத்த உத்தரவிட்டு, தமிழகக் காவல் துறை அவர்களை கைது செய்து நாடு கடத்தியபோது, அந்த காரியம் நிறுத்தப்படாவிட்டால், பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று தி.மு.க. அறிவித்து போராட்டம் நடத்தியது. அதன் காரணமாக அவர்களை நாடு கடத்தும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

அப்படிப்பட்ட என்னைப் பார்த்துத்தான் நான் விடுதலைப்புலிகள் படுகின்ற துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக பேட்டி கொடுக்கிறார். அந்த இதழும் அதை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது; பாவம்! அதன் போக்கு கண்டு எனக்கோர் விதத்தில் மகிழ்ச்சி!

நாம் பிரிவினை கேட்டு ‘தமிழ்நாடு தமிழருக்கே- திராவிட நாடு திராவிடருக்கே!’ என முழங்கிய போது, ‘எலி வளை எலிகளுக்கே’ என்று கேலிச் சித்திரம் வரைந்து நம்மை அந்த பத்திரிகை கேலி செய்த காலம் மாறி; இன்று எலிகள் அல்ல, புலிகள் என்று ஏற்றுக்கொண்டிருப்பது மகத்தான மாறுதல் அல்லவா? தமிழ் ஈழம் கேட்கிற அளவுக்கு மாறியிருப்பது மகிழ்ச்சிக்குரியதல்லவா?

இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.
5 thoughts on “பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் கூறவே இல்லை! – முதல்வர்

 1. fullmoon

  கிழட்டு நரி விரிக்கிறான் விரிக்கிறான் வலைய விரிக்கிறான்,
  வாயப்புடுங்குறான் வாயப்புடுங்குறான்
  வாயில புன்னோட போகப்போரியடியோவ்….

 2. Rudra

  ஐயா எதையோ அறிந்துவிட்டார்? அதுதான் தாளம் மாறுது

 3. Kannaiah

  ஐயா கலைஞரே!

  வேணாம்! விட்ருங்க! அழுதுடுவோம்!

  (ஏற்கனேவே அழுதுகிட்டு தான் இருக்கோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *