BREAKING NEWS
Search

பிரபாகரனின் ‘வீரமரணம்’… இந்தியாவின் ‘போர் நிறுத்த முயற்சி’… – கேபி சொல்லும் புதிய ‘உண்மைகள்’!

இறுதி வரை போரிட்டு ‘வீரமரணம்’ அடைந்தார் பிரபாகரன்! – சொல்கிறார் கேபி

கொழும்பு: இலங்கை ராணுவத்திடம் பிரபாகரன் சரணடையவில்லை. அவர் தனது படையுடன் இறுதிவரை தீரமாகப் போரிட்டு ‘வீரமரணம்’ அடைந்தார், என்று கூறியுள்ளார் கேபி எனும் குமரன் பத்மநாதன்.

இறுதிப் போரில் புலிகள் தோற்று, தலைவர் பிரபாகரனும் களத்தில் ‘இல்லை’ என்றான சூழலில், புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர் கேபி. ஆனால் அடுத்த சில தினங்களில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். இலங்கை கொண்டு வரப்பட்டு ரகசிய விசாரணை செய்யப்பட்டார். கொஞ்ச காலம் அவரைப் பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது.

ஆனால் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக தன்னை மாற்றிக் கொண்ட பிறகு, அவரைப் பற்றிய செய்திகளும், அவர் அளிக்கும் பேட்டிகளும் இலங்கை ஊடகங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இப்போது வடக்கு கிழக்கு புணரமைப்பு அமைப்பின் செயலராக உள்ள கேபி, உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் நிதி பெற்று அதனை, வடக்கு கிழக்கு புணரமைப்புக்காக செலவிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு விரைவில் இலங்கை அரசு பிரிகேடியர் அந்தஸ்து வழங்கி ஊர்க்காவல் படைக்குத் தலைவராக்கவும் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு அவர் மிக நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதில் பிரபாகரன் எப்படி ‘கொல்லப்பட்டார்’, தொலைக்காட்சியில் காட்டப்பட்டது அவர் உடல்தானா? அந்தஉடலைப் பெற்றுக் கொள்ள ஏன் உறவினர் யாரும் முன்வரவில்லை? என்றெல்லாம் மிக விரிவாகக் கூறியுள்ளார்.

ஆனால் இந்தப் பேட்டியில் அவர் முக்கியமான ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது களத்தில் இருந்த சூழலை வைத்தே பிரபாகரன் வீரமரணம் அடைந்திருக்கலாம் என்று தான் நம்புவதாகவும், தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடல் அவருடையதைப் போலத்தான் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். அங்கே என்ன நடந்தது என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தனது அனுமானங்களை அவர் இறுதி கருத்தாக இந்தப் பேட்டியில் முன் வைத்துள்ளார்.

கூடவே, வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களைக் கடுமையாக சாடியுள்ள அவர், முதல்வர் கருணாநிதி, ப சிதம்பரம் போன்றவர்களை போர் நிறுத்தத்துக்கு முயன்றவர்களாகக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக போர்நிறுத்த முயற்சியை வைகோ தடுத்ததாகக் கூறியுள்ளார் கேபி.

ஆனால் அந்த நேரத்தில் தமிழகத்தில் அனைவருமே போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரித்தான் பல போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது முக்கியமானது.

இவற்றில் பல்வேறு பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஆனாலும், கேபி இன்று இலங்கை அரசின் ஊதுகுழலாக மாறி, பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்த படாத பாடுபடுவதைக் காட்டவும், ஈழ ஆதரவுத் தலைவர்களை முடிந்தவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அவர் முயற்சிப்பதையும், திடீரென்று திமுக-காங்கிரஸின் போர் நிறுத்த முயற்சிகளைப் பற்றி புதிதாக பிரலாபிப்பதையும் காட்டவே அவரது பேட்டியை இங்கே தருகிறோம்.

கேபி பேட்டி (கேபிக்கு வாகாக ‘எடுத்துக் கொடுக்கும்’ செய்தியாளரின் கேள்விகளைத் தவிர்த்துள்ளோம்):

“பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நான் காப்பாற்ற முயன்றேன். ஆனால் நெடியவனும் காஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை.

ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிரபாகரனை நான் காப்பாற்ற திட்டமிட்டேன். இதற்காக எனக்கு 10.5 மில்லியன் டாலர் பணம் தேவைபப்ட்டது. இதை தருவதாக காஸ்ட்ரோ தெரிவித்திருந்தார். இந்தப் பணத்தை நார்வேயிலிருந்து நெடியவன் அனுப்பி வைப்பார் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் நெடியவன் பணத்தை அனுப்பவில்லை. எனது திட்டத்தைக் கேட்டு பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். தந்தை, தாயார் மற்றும் சகோதரன், சகோதரி ஆகியோரை எப்படியாவது வெளியில் அனுப்பி வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனால் நெடியவனால் அந்தத் திட்டம் நிறைவேற முடியாமல் போய் விட்டது.

எனது திட்டம் என்னவென்றால், ஒரு ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு, அதை வான் புலிகள் அமைப்பின் தலைவரான அச்சுதன் வன்னிப் பகுதிக்கு செல்வது, ஹெலிகாப்டர் மூலம் பிரபாகரன் உள்ளிட்டோரை மீட்டு கடலில் தயாராக நிறுத்தி வைக்கப்படும் கப்பலுக்குக் கொண்டு சென்று காப்பாற்றுவது என்பது.

ஆனால் நெடியவன் பணத்தைத் தராததோடு மட்டுமல்லாமல், அச்சுதனையும் தடுத்து விட்டார். இதனால் அச்சுதன் என்னுடன் வைத்திருந்த தொடர்புகளை அப்படியே துண்டித்துக் கொண்டார்.

தலைவரைக் காப்பாற்றி அந்தப் பெருமை எனக்கு வருவதை நெடியவனும், காஸ்ட்ரோவும் விரும்பாததே இதற்குக் காரணம்.

இப்படி அனைத்தும் தாமதாமாகியதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் முற்றுகையிட்டு விட்டது. இதனால் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை. இதனால் பெரும் துயரத்துடன் எனது மீட்புத் திட்டங்களை கைவிடும் முடிவை எடுத்தேன்.

சூசை சொன்னது…

இறுதிப் போரின் போது கடைசி நிமிடம் வரை நான் சூசையுடன் தொடர்பில் இருந்தேன். அவர்தான் பிரபாகரனும் பொட்டு அம்மானும் தனி குழுவாகச் சென்று ராணுவத்தை ஊடறுத்து வெளியேறிவிட்டதாக கடைசி நிமிடத்தில் தகவல் கொடுத்தார். அதை நம்பித்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் அறிவித்தேன். ஆனால் மீண்டும் சூசையுடன் தொடர்பு கொண்ட போது, பிரபாகரனின் ஊடறுப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அவர் மட்டும் திரும்பி வந்துவி்ட்டதாகவும் கூறினார். உடன் சென்ற பொட்டு திரும்பவே இல்லையாம்.

அதன் பிறகு சூசையுடன் எனது தொடர்பு அறுந்துவிட்டது.

பிரபாகரன், பொட்டு அம்மன் உள்பட 60 பேர் இலங்கை பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். பிரபாகரன் கிட்டத்தட்ட தப்பி விட்டார். ஆனால் பொட்டு அம்மனால் வர முடியவில்லை. கொல்லப்பட்டு விட்டார். இதையடுத்து ராணுவத்தின் கைக்கு பொட்டுவின் உடல் போய் விடக் கூடாது என்பதற்காக பிரபாகரனே, பொட்டு அம்மான் உடலை தீயிட்டு எரித்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த நாள் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப் பார்த்தேன். பார்த்ததும் அது பிரபாகரன் உடல்தான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. தனிமையில் அமர்ந்து ஓவென கதறி அழுதேன்.

எனக்கும் தெரியாது…

ஆனால் நிச்சயமாக என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. அந்த இடத்தில் நான் இல்லை. கடைசி நேரத் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன. ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது தலைவர் பிரபாகரனின் உடல்தான்.

அவர் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், பொன்சேகா முன் மண்டியிட்ட நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாகவும் சிலர் கூறி வருவது அப்பட்டமான பொய். குறிப்பாக தமிழ் தலைவர் ஒருவரே இப்படிக் கூறியிருப்பது துரோகமானது. வேதனை தருகிறது.

ராணுவத்தின் மிக உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் பிரபாகரனின் இறுதி நேர போரைப் பற்றி மிக பெருமையாகக் கூறினார். அந்த அதிகாரி யார் என்பதை நான் சொல்ல மாட்டேன். கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரிந்தவர்தான்.

நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனும் அவருடன் இருந்தவர்களும் மிக வீரமாகவும் கடுமையாகவும் சண்டையிட்டார்களாம். இதில் இறுதி நேரம் வரை சற்றும் பின்வாங்காமல் பிரபாகரன் சண்டையிட்டே வீர மரணம் அடைந்துள்ளார். இதை ராணுவம் உறுதிப்படுத்தியது.

பிரபாகரனின் குடும்பத்தினர் மொத்தமாக இந்த சண்டையில் இறந்துவிட்டதும் உண்மையே. சாள்ஸ் ஆண்டனி அவர்களைக் காக்க கடைசி வரை முயன்றார்.

பிரபாகரனின் மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் போரில் இறந்தனர். துவாரகாவும் புலிகள் இயக்கத்தில் போராளியாகவே இருந்தார். பிரபாகரன் மனைவி மதிவதனியும் இறந்துவிட்டார் என்பதே உண்மை.

பிரபாகரன் தனது மகனையும் மகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார் என்று சிலர் கூறுவதில் உண்மையில்லை. பிரபாகரன் தனது பிள்ளைகள் வெளிநாடு செல்வதை அனுமதிக்கவில்லை. அவரது குடும்பம் முழுவதும் இயக்கத்தில்தான் இருந்தது.

பிரகபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மீது எனக்கு பாசம் அதிகம். அவனது மரணம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. அவனிடம் அடிக்கடி நான் போனில் பேசியிருக்கிறேன். கடைசி நேரத்தில் கேபி மாமாவுடன் நான் போகப் போகிறேன் என்று ஒரு சிறு பையை எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தானாம். அதை நினைக்கும்போது கஷ்டமாக இருந்தது…

பிரபாகரன் உடலை ஏன் பெற்றுக் கொள்ளவில்லை?

பிரபாகரன் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும், நான் இயக்கத்தை உயிர்ப்புடன் வைக்க தீவிர முயற்சிகள் எடுத்தேன். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றேன். பின்னர் தலைவரின் உடலுக்கு முறைப்படி உரிமை கோருமாறு அவரது குடும்பத்தினரை கேட்டுக் கொண்டேன்.

பிரபாகரனின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரைத் தொடர்பு கொண்டு உடலைப் பெற உரிமை கோருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர்.

குறிப்பாக, பிரபாகரன் சகோதரியின் கணவர் தனது மனைவியிடமிருந்து போனை வாங்கி என்னிடம் கோபமாகப் பேசினார். இனிமேல் போன் செய்ய வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி வைத்து விட்டார்.

இதனால் தலைவரின் உடலை யாரும் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதையடுத்து ராணுவமே உடலை எரித்து சாம்பலை கடலில் வீசி விட்டது.

குலுங்கி அழுத வைகோ…

தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதுதான் இப்போதைய உண்மை. ஆனால் தலைவர் இருப்பதாக பிரசாரம் செய்து வருவோர் புலிகள் இயக்கத்துப் பணத்தை மனதில் கொண்டுதான் அவ்வாறு பேசி வருகின்றனர்.

தலைவர் இருந்தபோது வசூலிக்கப்பட்ட பணமும், தலைவர் இறந்த பின்னர், இருக்கிறார் என்று கூறி வசூலிக்கப்பட்ட பணமும் பெருமளவில் குவிந்திருக்கிறது. இந்தப் பணம் எல்லாம் நெடியவனிடம்தான் உள்ளது.

தலைவர் இறந்து விட்டது வைகோவுக்கு நன்றாகத் தெரியும். நான் அவரது மரணச் செய்தியை வைகோவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தபோது வைகோ குலுங்கி அழுதார். ஆனால் மேடைகளில் தலைவர் இருக்கிறார் என்று பொய்யாகப் பேசி வருகிறார்.

திமுகவுக்கு பெயர் போய்விடக் கூடாது என்று தடுத்தாராம் வைகோ!

உண்மையில் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டு வர நான் மேற்கொண்ட முயற்சிகளைத் தடுத்தவர் வைகோதான். இதற்குக் காரணம், திமுகவுக்கு நல்ல பெயர் போய் விடக் கூடாதே என்பதற்காக இவ்வாறு செய்தார் வைகோ.

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் பல்வேறு இந்தியத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார்.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஆகியோருடன் அவர் தொடர்பு கொண்டார். அவர்கள் மூலம் மத்திய அரசை சமாதானப்படுத்தி, இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி போரை நிறுத்த முயற்சித்து வந்தார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும் மற்றவர்களையும் உயிருடன் காக்க நினைத்து முயற்சித்தார் நடேசன்.

இந்த முயற்சிக்கு டெல்லியும் இணங்கி வந்தது. காரணம், அப்போது நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு பெரும் அடி விழுந்து விடுமோ என்று அவர்கள் பயந்தனர். ஜெயலலிதா வேறு புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்ததால் அவர்களது பயம் அதிகரித்தது.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைத்து வந்தார். போரை நிறுத்துவதாகவும், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைவதாகவும், ஈழத்திற்கு மாற்றான அரசியல் தீர்வுக்கு சம்மதிப்பதாகவும் அறிவிக்குமாறு புலிகள் இயக்கத்திற்கு ப.சிதம்பரம் யோசனை தெரிவித்தார்.

மேலும் புலிகள் இயக்கத்திற்காக தானே ஒரு அறிக்கையையும் அவர் தயார் செய்தார். இப்படி அறிவிப்பு வெளியான பின்னர் இலங்கையை நிர்ப்பந்தித்து போரை நிறுத்த இந்தியா தீவிர முயற்சிகள் எடுக்கும் என்பது பேச்சுவார்த்தையின் முடிவாகும்.

இந்தத் திட்டத்தை நெடுமாறனிடமோ அல்லது வைகோவிடமோ தெரிவிக்கக் கூடாது என்றும் நடேசன் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் நடேசனோ, இந்தத் திட்டம் குறித்து சிபிஎம் எம்.எல்.ஏ கே.மகேந்திரனுடன் ஆலோசித்துள்ளார். இதையடுத்து மகேந்திரன் இந்த தகவலை வைகோவிடம் கொண்டு சென்று விட்டார்.

இதைக் கேட்ட வைகோ அதிர்ச்சி அடைந்தார். எங்கே போர் நிறுத்தம் நடந்து விட்டால், அந்தப் பெருமை திமுக, காங்கிரஸுக்குப் போய் விடுமோ என அவர் அஞ்சினார். இதையடுத்து ஈழத்திற்கு மாற்றான தீர்வுக்கு புலிகள் சம்மதித்தால், தமிழகத்தில் எங்களுடைய ஆதரவை நீங்கள் இழக்க நேரிடும் என்று நடேசனை எச்சரித்தார்.

இதைக் கேட்டதும், எங்கே அதிமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையலாம் என்று நம்பிய நடேசன் தனது திட்டத்தைக் கைவிட்டு விட்டார்…,” என்று கூறியுள்ளார் கேபி.
7 thoughts on “பிரபாகரனின் ‘வீரமரணம்’… இந்தியாவின் ‘போர் நிறுத்த முயற்சி’… – கேபி சொல்லும் புதிய ‘உண்மைகள்’!

 1. raj.s

  இதை எப்படி நம்புவது. இலங்கை யில் இருந்து அவர் எதை வேண்டும் என்றாலும் கூறலாம் .ஹ்ம்ம் .

 2. Gokul

  வினோ ,
  நீங்கள் என்ன நினைகிறிர்கள் இவரின் கூற்று உண்மையா?

 3. Muthu

  கருங்காலி பத்மநாதன் தமிழ் இன அரக்கன் ராஜபக்சேயின் ஊதுகுழலாக மாறி, தான் ஆட்டு வைப்பதற்கு ஏற்ப ஆடி கொண்டி இருக்கிறான். இந்த தமிழ் இனத்தின் மற்றொமொரு எட்டப்பன் சொல்லும் உளறல்கள் எல்லாம் இந்த மானமிகு தமிழரிடத்தில் எடுபடாது. இந்த சதி பேச்சிற்கு பின்னால், முன்பு வைகோவின் மேல் பழி சொல்லி வெளியேற்றிய தமிழ் நாட்டு கருணாவின் பங்கும் இருக்கலாம். இத்தகைய எட்டப்பன்களின் பாவ செயல்களுக்கு வரலாற்றில் மன்னிப்பே கிடையாது…

 4. thamil ealem...

  பணம் என்றால் பிணமும் வாயைய் திறக்கும் …. இப்ப கே பீ க்கு பணமும் அவரின் உயிர் பயமும் சேர்ந்து தமிழ் இன அரக்கன் ராஜபக்சேயின் ஊதுகுழலாக மாறி விட்டான்…. துரோகி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *