BREAKING NEWS
Search

பிரபல திரைப்பட பின்னணி பாடகி சொர்ணலதா மரணம்

பிரபல திரைப்பட பின்னணி பாடகி சொர்ணலதா மரணம்

சென்னை: நுரையீரல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகி சொர்ணலதா ஞாயிற்றுக்கிழமை காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா. கடந்த 1989ம் ஆண்டு முதல் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார். தாய் மொழியான மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, உருது, படகா ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதனால் நீதிக்கு தண்டனை (‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…’) படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சொர்ணலதாவுக்கு, அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகளை வழங்கியவர் இளையராஜா. பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களிலும் நிறையப் பாடல்களைப் பாடியுள்ளார்.

1989-லிருந்து மேடைகளில் பாடி வந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டமா தேரோட்டமா…’ ஒரே பாடல் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’ என்ற பாடலைப் பாடியதன் மூலம் இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம்பெற்றார் சொர்ணலதா.

அதன் பிறகு சின்னத்தம்பி, சின்னவர், சின்ன ஜமீன், குருசிஷ்யன், தளபதி, வள்ளி, வீரா, என் மன வானில் என ஏராளமான படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய ‘போறாளே பொன்னுத்தாயி…’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

பாடல் பாடுவது தவிர கீ போர்ட், ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் சொர்ணலதா.

சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு திரையுலகப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரைப்பட பின்னணி பாடுவதில் புகழின் உச்சியிலிருந்த சொர்ணலதா, இத்தனை இளம் வயதில் மரணத்தைத் தழுவியது திரையுலகையும், இசை ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
4 thoughts on “பிரபல திரைப்பட பின்னணி பாடகி சொர்ணலதா மரணம்

 1. தனுசுராசி

  அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

 2. Manoharan

  நான் கேட்டதிலேயே மிக சிறந்த குரல் சொர்ணலதாவுடையது தான் .37 வயதில் அவரின் மரணம் மிகவும் கொடுமையானது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

 3. SVR

  எங்கள் அன்பு சகோதரி ஸ்வர்ணலதா உங்கள் பிரிவு “குழந்தைக்கு தாலாட்டு பாடிய தாய் பாதியில் பாட்டை நிறுத்தி பிரிந்து சென்றதை போல உள்ளது ” மீண்டும் உங்களது தேன் குரலால் ஒலிக்கும் புது புது பாடல்களை எப்படி கேட்போம்.
  போராளே பொன்னுதாயி என்று எங்களை புலம்ப வைத்துவிட்டாயே…
  புல்லாங்குழல்… போல அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே…

 4. raja

  இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் என்று அவர் பாடிய வரிகள் உண்மை தான் நான் தினமும் இரவு துங்கும் போது எவனோ ஒருவன் வாசிக்கிறான் இந்த மெலடி பாட்டை கேட்காமல் துங்குவதே இல்லை அந்த படலை கேட்கும் பொழுது ஸ்வர்ணலதா அம்மா வை நினைத்து நான் எனை அறியாமலே அழுது விடுவேன் அவ ஆத்மா சாந்தி அடைய நான் கடவுளிடம் எபோழுதும் ப்ரதிபேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *