BREAKING NEWS
Search

‘பாலிவுட்டை விட உயர்ந்தவர் ரஜினி!’

‘பாலிவுட்டை விட உயர்ந்தவர் ரஜினி!’

மும்பையில் வைக்கப்பட்ட 70 அடி உயர கட்அவுட்!

ஒரே நேரத்தில் நம்மைச் சுற்றி பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும் போது, அவற்றைப் பதிவு செய்வதை விட, அந்த நேரத்தில் ரசித்துப் பார்ப்பதையே மனம் விரும்புகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் ரிலீஸான தருணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர்கள், ரசிகரல்லாதவர்கள், மீடியாக்காரர்கள், அறிவு ஜீவிகள் எனும் பெயரில் ‘சில அரைவேக்காடுகள்’ என அனைத்துத் தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் எந்திரனைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

நாம் அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் அவற்றைப் பற்றி எழுதுவதைவிட, ரசிப்பதே சுகமாக இருந்தது.

இந்த நிகழ்வுகள் அரங்கேறி 50 நாட்களுக்குப் பிறகு அவற்றின் வீடியோக்களை மீண்டும் பார்த்தபோது மிகப் பெருமையாக இருந்தது. தமிழ் நடிகர் ஒருவர், அனைத்து இலக்கணங்களையும் தடைகளையும் உடைத்து, பாலிவுட்டில் கோலோச்சுவது எத்தனை பெரிய விஷயம்… இந்திக்காரர்கள் ஒதுக்குகிறார்கள்… வாய்ப்பு தருவதில்லை என்றெல்லாம் இதே சென்னையிலிருந்து போன நடிகர்கள் புலம்பிக் கொண்டு திரும்பி வந்ததெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் அதே பாலிவுட் ரஜினியையும், ஒரு டப்பிங் படம் என்ற பேதமில்லாமல் அவரது ரோபோவையும் கொண்டாடி மகிழ்கிறது.

குறிப்பாக வட இந்திய சேனல்கள் ஒளிபரப்பிய ரஜினி சிறப்பு நிகழ்ச்சிகள், ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவு எந்திரன் / ரோபோ விமர்சனத்தையே ஒருமணி நேரம் ஒளிபரப்பின என்டிடிவி, டைம்ஸ் நவ் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சிகள்.

ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், குடும்பத் தலைவி, வர்த்தகர்கள் இப்படி எல்லோரிடமும் ரஜினியைப் பற்றி கேட்டு ஒளிபரப்பி வந்தனர்.

அப்படி ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியின் தலைப்பு… ‘பாலிவுட்டை விட உயர்ந்தவர் ரஜினி’!  ஹெட்லைன்ஸ் டுடே வழங்கிய நிகழ்ச்சி இது. ரசிகர்கள் நிறையப் பேர் பார்த்திருக்கக் கூடும்.

1 மணி நேரம் ஒளிபரப்பான இந்த ரஜினி ஸ்பெஷல் நிகழ்ச்சியில், ஒரு பெண் உள்பட நான்கு பத்திரிகையாளர்களும் பங்கேற்றனர். இவர்கள் நால்வருமே ஒருமித்த குரலில் தங்களுக்கு ரஜினியைப் பிடிக்கும் என்று சொன்னதுதான் விசேஷம்.

இதில் ரஜினி பாலிவுட்டை விட உயர்ந்தவரா? என்ற ஒரு கேள்விக்கு பதிலளித்த இந்த பத்திரிகையாளர்கள், “நிச்சயமாக… காரணம் ரஜினிக்கு நிகரான மாஸ் உள்ள நடிகர்கள் யாரும் பாலிவுட்டில் கிடையாது” என்றனர்.

“பாலிவுட்டில் எந்தப் படத்துக்காவது அல்லது நடிகருக்காவது ரசிகர்கள் தங்கள் பணத்தைச் செலவழித்து அபிஷேகம் செய்தோ, பூஜைகள் செய்தோ, ஊர்வலம், பேரணி மற்றும் பிரார்த்தனைகள் நடத்தியோ பார்த்திருக்கிறீர்களா… ஆனால் இதே மும்பையில் ரஜியின் ரசிகர்கள் அவருக்காக எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளனர்.

பாலிவுட்டில் ஒரு படம் வெளியாகிறதென்றால், சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் அதனை புரமோட் செய்ய மிகுந்த முயற்சி எடுக்கிறார்கள். பிரஸ் மீட், தனிப் பேட்டிகள், சாட் ஷோக்கள், நடன நிகழ்ச்சிகள் என எத்தனையோ பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் ரஜினி இப்படி எதையுமே செய்வதில்லை. அவர் எந்த மீடியாவிடமும் பேசுவது கூட கிடையாது. ஆனால் எல்லா மீடியாவும் அவரைப் பற்றியே பேசுகின்றன. அவர் படம் வெளியாகும் நாள் தீபாவளிக்கு நிகரான முக்கியத்துவம் பெறுகிறது. கோடையில் வெளியானால் கூட அன்றுதான் தீபாவளி மாதிரி கொண்டாட்டங்கள் தூள் பறக்கின்றன..” என்றார் நிகழ்ச்சி நடத்துனர்.

ரஜினியின் எளிமை, நடிப்பில் அவர் காட்டும் வித்தியாசம், மனதைக் கொள்ளையடிக்கும் அவரது ஸ்டைல்கள், வயதை வென்ற அவரது இளமை – சுறுசுறுப்பு… இவற்றை ஒரு ரஜினி ரசிகனை விட அதிக லயிப்புடன் விவரித்தார் நிகழ்ச்சி நடத்துநர்.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட், கடைசியில் நடத்தப்பட்ட ஒரு குறுந்தகவல் வழி வாக்களிப்பு நிகழ்ச்சிதான்.

அதில் கேட்கப்பட்ட கேள்வி:

இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் யார்?

1. ரஜினிகாந்த்

2. ஷாரூக்கான்

3. அமிதாப்

4. சல்மான்கான்

இவர்களில் அதிக ஓட்டு யாருக்கு விழுந்திருக்கும் என்பது தெரிந்த சமாச்சாரமே. 86.41 சதவீத வாக்குகள் பெற்று இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக மக்களால் அறிவிக்கப்பட்டார் ரஜினி. ஷாரூக்கானுக்கு 7.16 சதவீதமும், அமிதாப்புக்கு 3.69 சதவீதமும், சல்மான்கானுக்கு 2.74 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன.

கவனிக்க, ஹெட்லைன்ஸ் டுடே சேனல் இந்தியா டுடே குழுமத்துக்கு சொந்தமானது. வடக்கில்தான் பிரபலம். ஆக வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் வடக்கு வாழ் ரசிகர்களே.

ஹெட்லைன்ஸ் டுடேக்காரர்கள் கேட்ட இன்னொரு கேள்வி…

மனதைக் கவரும் ஸ்டைல், மிகப் பெரிய ரசிகர் கூட்டம், நிகரற்ற நடிப்பு… இந்த அடிப்படையில் பாலிவுட்டின் அடுத்த ரஜினிகாந்த் யார்?

அதாவது, பாலிவுட் ஹீரோக்களின் பலம், செல்வாக்கைக் கணிக்கும் அளவுகோலே தமிழக ரசிகர்களின் ‘முடிசூடா மன்னன்’ ரஜினிகாந்த்தான்! இதைவிட ஒரு பெருமை வேண்டுமா என்ன..? கலைத்துறையில் இதற்கு மேல் சாதனை என எதுவுமே இல்லை என நெஞ்சு நிமிர்த்திச் சொல்லலாம்.

இந்த கேள்விக்கான விடையாக  ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் அல்லது அக்ஷய் குமார்… என வரிசைப்படுத்தி வாசகர்களிடம் ட்விட்டரில் கருத்து கேட்டிருந்தது அந்த சேனல்.

இதற்கு ஒரு ரசிகர் இப்படிக் கூறியிருந்தார்:

“ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு ரஜினிகாந்த்தான். வேறு ‘கான்கள்’ யாரும் அவரை நெருங்கக்கூட முடியாது. வேறு யாருக்கும் அவரளவுக்கு செல்வாக்கும் கிடையாது!!”

-என்வழி ஸ்பெஷல்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *