BREAKING NEWS
Search

‘பாலாறு ஒற்றுமை’ காவிரியிலும் தொடருமா?

இந்த ஒற்றுமை எப்போதும் வேண்டும்!

மிழகத்தின் வட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் திமுக, அதிமுக இரு கட்சி உறுப்பினர்களும் ஒருமித்து குரல் கொடுத்திருப்பது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

jayalalithaa-karunanidhi

நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்தை ஒரு பொருட்டாகவே நினைக்காத தன்மை அண்டை மாநிலங்களில் ஏற்பட்டதற்குக் காரணமே, காவிரி பிரச்னை தொடங்கிய நாள் முதலாக, திமுக அதிமுக இரு கட்சிகளும் எதிர் எதிராக நின்றதுதான்.

அப்போதே இந்தப் பிரச்னையில் அரசியல் வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் திமுக அதிமுக இரு கட்சிகளும் ஆட்சியில் யார் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் ஒன்றாக நின்று ஒருமித்த குரலில் மக்களவையிலும், வெளியிலும் பேசியிருப்பார்களேயானால், காவிரி, பெரியாறு, பாலாறு எந்த நதியாக இருந்தாலும் இன்று தமிழகம் அண்டை மாநிலங்களிடம் எதிர்கொள்ளும் அவமதிப்புகளை சந்திக்கும் அவசியமே ஏற்பட்டிருக்காது.

1974-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் காவிரிப் பிரச்னையில் ஒருவிதமான தீர்வு எட்டப்பட்டிருந்தது.

ஆனால், அடுத்து வந்த பொதுத்தேர்தலில் எம்ஜிஆர் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், கருணாநிதி முயற்சியில் காணப்பட்ட ஒப்பந்தத்தில் அவர் திருப்தி அடையவில்லை. அதனால் மறுபடியும் பேச்சு வார்த்தை தொடங்கியது. இந்தப் பேச்சின் முடிவில் ஒரு சாதகமான ஒப்பந்தம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் இருவரும் இரு துருவங்களாக இருப்பதை கர்நாடக அரசியல் தலைவர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

காவிரி நடுவர் மன்றம் 2007, பிப்ரவரி மாதம் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டபோதிலும்கூட அந்தத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படாமல் இருப்பது கவலை தரும் விஷயம்.

அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற விவசாயக் கருத்தரங்கில், காவிரி டெல்டா விவசாயிகள் நல சங்கச் செயலர் எஸ். ரங்கநாதன் பேசும்போது, “இப்போதாவது அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் ஒன்றிணைந்து நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்ய வேண்டும்”, என்று கோரிக்கை வைத்திருப்பதில் நியாயம் இருக்கிறது.

அரசிதழில் இந்தத் தீர்ப்பு இடம்பெறாத வரை, இதற்கு சட்டத்தின் பலம் கிடைக்காது. இத்தனை ஆண்டுகள் போராடிப் பெற்ற நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெறும் எழுத்தாக மட்டுமே இருக்கும்.

நடுவர் மன்றத் தீர்ப்பில் மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர் கருணாநிதிக்கு, எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரின் கடுமையான எதிர்ப்பினால் மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்யும் அரசியல் நிர்பந்தம் ஏற்பட்டது. இல்லையானால் இந்த மனுவை செய்திருக்க மாட்டார்.

இப்போது பாலாற்றுப் பிரச்னையில் திமுக அதிமுக ஒருமித்த குரல் கொடுப்பதைப் போலவே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிலும் ஒருமித்த குரல் கொடுக்க முன்வந்தால், தமிழகம் தன் மறுபரிசீலனை மனுவை திரும்பப் பெறும்.

நடுவர்மன்றத்தின் முன்னும், மக்களவையிலும் தமிழகம் தனது குரலை ஒங்கி ஒலிக்கச் செய்ய முடியும். கர்நாடகம் மட்டும் தனித்து மறுஆய்வு மனுவை தொடர்ந்து முன்வைத்தாலும் அதைத் தள்ளுபடி செய்யும் வாய்ப்புகள் அதிகமாகும்.

மேலும், நடுவர் மன்றத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. தீர்ப்பை மாற்றி எழுதும் வாய்ப்பு இல்லை.

சில கடுமையான விஷயங்களை சற்று தளர்த்தும்படியாக வேண்டுகோள் மட்டுமே வைக்க முடியும். ஆகவே தமிழகம் தனது மனுவை விலக்கிக் கொள்வதன் மூலமும், மத்திய அரசில் அரசியல் நெருக்குதல் தருவதன் மூலமும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு அதற்கு சட்டத்தின் பலத்தைத் தர முடியும்.

திமுக அரசுக்கு மத்திய அரசில் தற்போது எதையும் சாதிக்கும் வலிமை உள்ளதால் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெசட்டில் வெளியிடச் செய்வது கடினமல்ல.

தமிழகத்திற்கு நடுவர் மன்றத் தீர்ப்பின்படி 419 டிஎம்சி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. நாம் கேட்டதைவிட 150 டிஎம்சி குறைவுதான் என்றாலும், இதையே ஏற்று, சட்டவடிவம் பெறுவதுதான் தமிழக விவசாயிகளுக்கு வருங்காலத்தில் நன்மையாக அமையும்.

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, பாலாற்று பிரச்னையில் ஒருமித்த குரல் கொடுப்பதைப் போல, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிலும் ஒருமித்து குரல் கொடுக்க முன்வர வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த ஞானம் வந்தால் பின்பு நமக்கெது வேண்டும்.

-தினமணி
2 thoughts on “‘பாலாறு ஒற்றுமை’ காவிரியிலும் தொடருமா?

  1. r.v.saravanan

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே

    idhai unarndhu seyalpattal mattumay

    தமிழக விவசாயிகளுக்கு வருங்காலத்தில் நன்மையாக அமையும்.

  2. கிரி

    ஒருமையா இருந்தா நல்லா தான் இருக்கும்..ஆனா இருக்கனுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *