BREAKING NEWS
Search

பாமகவுடன் கூட்டணி.. ஆனால் 2011-ல்தான் எம்பி சீட்!: திமுக அறிவிப்பு

பாமகவுடன் கூட்டணி.. ஆனால் 2011-ல்தான் எம்பி சீட்!: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் மீண்டும் பாமக இடம்பெறுவதாகவும், 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு நடைபெறும் மேல்-சபை தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரு எம்.பி. சீட் வழங்கப்படும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 6.45 மணி வரை நடைபெற்றது.

தி.மு.க. தலைவர் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, கவிஞர் கனிமொழி எம்.பி., மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன், ஆ.ராசா, துணை பொதுச் செயலாளர்கள் பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமதாஸ் எழுதிய கடிதம்

கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் 26-4-2010 தேதியிட்டும், அதைத் தொடர்ந்து 14-5-2010 தேதியிட்டும், முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதங்கள் இந்தக் குழுவின் பார்வைக்கும், ஆய்வுக்கும் வைக்கப்பட்டன.

அந்தக் கடிதங்களில் டாக்டர் ராமதாஸ், “2006ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று பா.ம.க. போட்டியிட்டது. அந்தத் தேர்தலுக்குப் பின்னர் தங்களது தலைமையில் தி.மு.க. தனித்து ஆட்சி அமைப்பதற்கு பா.ம.க. தனது நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்ததுடன், அதற்கான தனது ஆதரவு கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தது. அன்று முதல் இன்றுவரையில் எந்தவொரு நிலையிலும் தி.மு.க. அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பா.ம.க. மாற்றிக் கொள்ளவே இல்லை.

இடையில் நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களை நாங்கள் மறந்து விட்டோம். நீங்களும் மறந்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். முன்பு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரும் தங்களின் இப்போதைய முயற்சிக்கு பா.ம.க. முழு ஆதரவு அளித்து, சட்டப் பேரவையில் நடைபெற்ற மேலவை அமைப்பது குறித்த வாக்கெடுப்பில் தி.மு.க.வுடன் இணைந்து வாக்களித்தது. இத்தகைய இணக்கம் மீண்டும் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அந்த வகையில் அடுத்த ஆண்டில் (2011ல்) நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட விரும்புகிறோம் என்று பா.ம.க. சார்பில் உறுதி கூறுகிறோம்.

2006ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 6 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளித்தீர்கள். 2008ம் ஆண்டில் 9 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்போது நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

டாக்டர் அவரது கடிதத்திலே குறிப்பிட்டுள்ளதைப் போல; 2006 மற்றும் 2008ம் ஆண்டில் மாநிலங்களவை தேர்தலுக்குத் தேவையான எம்.எல்.ஏ.க்களைப் பெற்றிராத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தி.மு.க. தனது வாக்குகளை வழங்கி, அடுத்தடுத்து, இரண்டு பேரை மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாக்கி தோழமைக் கட்சிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்ற பண்பாட்டைப் பெற்றிருந்ததை யாரும் மறப்பதற்கில்லை.

அந்தப் பண்பாட்டின் அடிப்படையில்தான், அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக; 1997ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில்; தி.மு.க. தோழமையை மதிக்கும் என்பதற்கு உச்சகட்டமாக, முதலில் அளித்த வாக்குறுதி மாறாமல் – தன் கட்சி வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தாமல் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ், என்.ஆர்.அப்துல் காதர் – ஆகிய மூவருக்கும் ஆதரவளித்து, அந்த மூவரையும் வெற்றி பெறச் செய்து, தோழமைக் கட்சிக்கான நல்லுணர்வு இலக்கணத்தை நிலைநாட்டிய பெருமையும் தி.மு.க.வுக்கு உண்டு என்பதை நாடறியும்.

2004ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகத்திற்கு சட்டமன்றத்தில் 30 இடங்கள் இருந்த போதிலும், மற்ற தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமென்ற நிலையிருந்தும், 23-1-2004 அன்று பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் தி.மு.கழகம் பா.ம.க.விற்கு கொடுத்த உறுதி மொழிப்படி – தி.மு.க. அந்த ஒரு இடத்தில் போட்டியிடாமல், 19 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பா.ம.க.விற்கும், 25 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசுக்கும் தனது 30 வாக்குகளைப் பங்கிட்டு அளித்து அன்புமணியையும், சுதர்சன நாச்சியப்பனையும் அந்த மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெறச் செய்தது.

தொடர்ந்து சந்திப்பு…  வேண்டுகோள்

அது நிற்க; டாக்டர் ராமதாஸ் எழுதிய இந்த இரண்டு கடிதங்களுக்கு இடையே; தமிழக முதல்வர் கருணாநிதியையும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் மற்றும் கழக முன்னணியினரையும்; பா.ம.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.க.மணியும், அந்தக் கட்சியின் கொறடா வேல்முருகனும் பலமுறை சந்தித்து – தி.மு.க., பா.ம.க. கூட்டணி உறவு மீண்டும் தொடரவேண்டும் என்று தெரிவித்த விருப்பத்தின் அடிப்படையில் 17-6-2010 அன்று நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரு இடம் வழங்கி ஆதரவு தரவேண்டும் என்று வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கிடையே உறவு முறிவு ஏற்பட வேண்டிய நிலை ஏன் உருவானது என்பதைப் பற்றியும், அதற்கு தி.மு.க. காரணம் அல்ல என்பதைப் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கசப்பை மறந்து விடுவோம்

அண்மையில் பென்னாகரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட நிலைமைகளைப் பற்றியும் – ‘தி.மு.க. தான் தன் முதல் எதிரி’ என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் தி.மு.க. குறித்து அறிவித்த கடுமையான பிரகடனம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

எனினும் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்ற அடிப்படையில்; டாக்டர் ராமதாஸ் தனது கடிதத்தில் எழுதியுள்ளதைப் போல; மீண்டும் இரு இயக்கங்களும் உறவைப் புதுப்பித்துக் கொண்டு – அடுத்து வரவிருக்கும் 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களிலும், விரைவில் வரவிருக்கின்ற சட்டமன்ற மேலவைத் தேர்தல்களிலும், இரண்டு கட்சிகளும் உடன்பாடு கொண்டு போட்டியிடுவது என்பதை தி.மு.க.வும் ஏற்றுக் கொள்வது என்று முடிவெடுக்கப்படுகின்றது.

2011 தேர்தலுக்கு பின்னர்தான் எம்பி சீட்

அடுத்து, பா.ம.க.விற்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் வழங்குவது பற்றியும் விரிவாக விவாதித்து – 2011ல் வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு அடுத்து நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் பா.ம.க.விற்கு ஒரு இடத்தை வழங்குவதென்றும் உறுதிப்பட தீர்மானிக்கின்றது.

அதற்கான இணக்கமான நிலைமைகளை இவ்விரு இயக்கங்களும் இப்போது முதலே கடைப்பிடிப்பது என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதி பெறுவதற்கான பாதுகாப்பு அரணாக அமையும் என்பதையும் தி.மு.க.வின் இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளது.

எனவே, 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு அடுத்து வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.விற்கு ஒரு இடத்தினை தி.மு.க. அளிக்கும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழுவில் எடுத்துள்ள முடிவினையும், அதன் அடிப்படையில் அளித்துள்ள உறுதியினையும் வெளிப்படையாக அறிவித்து, இதனை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம்…”

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
2 thoughts on “பாமகவுடன் கூட்டணி.. ஆனால் 2011-ல்தான் எம்பி சீட்!: திமுக அறிவிப்பு

  1. anandhu

    //இடையில் நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களை நாங்கள் மறந்து விட்டோம். நீங்களும் மறந்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்//.
    மக்களும் மறந்து விட்டார்கள் என்று கண்டிப்பாக நீங்கள் நம்பலாம். என்ன கொடும காடுவெட்டி குரு சார்.

  2. Muthu

    கேவலமான அரசியல் வாதிகள். இனம் இனத்துடன் தான் சேரும் என்பார்கள் இரண்டு ஜென்மங்களும் தன் குடும்பத்திற்காக தானே கட்சி நடத்துகிறார்கள் பாவம் மறதிற்கு சொந்தகாரர்களான தமிழ் மக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *