BREAKING NEWS
Search

பயணிகள் உயிரோடு விளையாடும் ஏர் இந்தியா… அலட்சியம் தொடர்கிறது!

டாய்லெட்டில் விமானி: 7,000 அடி கீழே பாய்ந்த துபாய்-புனே ஏர் இந்தியா விமானம்

புனே: பெரும்பாலான விமான விபத்துக்கள் நேர்வது அலட்சியங்கள் மற்றும் கவனக்குறைவுகளால்தான்.

சில தினங்களுக்கு முன் மங்களூரில் 160 பேரைக் கொன்ற கொடிய விமான விபத்து கூட விமானியின் அலட்சியத்தால்தான் நடந்துள்ளது என்ற உண்மை தெரியவந்துள்ளது.

ஆனாலும் யாரும் திருந்துகிற மாதிரி தெரியவில்லை. இதோ மீண்டும் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட செய்தி…

துபாயில் இருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென 7,000 அடி கீழே தாவி, எதிரே வந்த விமானத்துடன் மோத இருந்தது. கடைசி நேரத்தில் இந்த மாபெரும் விபத்து தவி்ர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 26ம் தேதி, மங்களூர் விமான விபத்து நடந்த 4 நாட்களில், மஸ்கட் வான் வெளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

துபாயிலிருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை ‘ஆட்டோ பைலட்’ கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, விமானி அனுபம் திவாரி சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். காக்பிட்டில் துணை விமானி இருந்தார்.

அப்போது அந்த விமானம் மஸ்கட் மீது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந் நிலையில் வானில் வெற்றிடத்தில் (air pocket) நுழைந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தை ஆட்டோ பைலட் சிஸ்டமும் தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துவிட்டது.

இதையடுத்து அந்த விமானம் 5,000 அடி சரேலென்று பாய்ந்தது. விமானத்தை துணை விமானி கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.

இதையடுத்து டாய்லெட்டில் இருந்து ஓடிவந்த பைலட், பாஸ்வேர்டைப் போட்டு காக்பிட்டின் கதவைத் திறக்கவே 2 நிமிடங்களாகியுள்ளது. அதற்குள் விமானம் நிலைதடுமாற ஆரம்பித்துள்ளது. பயணிகள் அதிர்ச்சியிலும் பயத்திலும் அலற ஆரம்பித்துள்ளனர்.

ஒரு வழியாக கதவைத் திறந்து தனது சீட்டுக்குத் தாவிய விமானி, விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அதற்குள் 3 நிமிடங்கள் ஆகிவிட்டன. இந்த நேரத்துக்குள் விமானம் மேலும் 2,000 அடி கீழே பாய்ந்துள்ளது.

அது போயிங் 737 ரக விமானமாகும். 118 பயணிகள் இருந்தனர். இந்த சம்பவத்தால் யாரும் காயமடையவி்ல்லை என்றாலும் மரண பயத்தில் உறைந்து போயிருந்தனர்.

இந்த விமானம்தான் பறக்க வேண்டிய உயரத்திலிருந்து கீழே இறங்கியதால், எதிரே வந்த ஒரு விமானத்துடன் மோதும் அபாயம் ஏற்பட்டது. பின்னர் இரு விமானங்களின் விமானிகளும் அதைத் தவிர்த்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட்டும், துணை பைலட்டும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆட்டோ பைலட் சரியாக செயல்படவில்லை என்று இரு விமானிகளும் குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.

சில தினங்களுக்கு முன் விஐபிக்களுக்காக டெல்லி விமான நிலையத்தை மூடியதால், மூன்று விமானங்கள் எரிபொருள் தீரும் நிலையில் தரையிறக்கப்பட்டு 500 பயணிகள் உயிர் தப்பித்தது நினைவிருக்கலாம்.




2 thoughts on “பயணிகள் உயிரோடு விளையாடும் ஏர் இந்தியா… அலட்சியம் தொடர்கிறது!

  1. Manoharan

    முதலில் இந்தியாவில் ஜனாதிபதி என்கிற பதவியே தேவையில்லை. வெட்டிச் செலவு. வெட்டி பதவி.அதுவும் பிரதீபா போன்றவர்களை கண்டால் எங்கெங்கோ எரிகிறது.

  2. ss

    வினோ,

    இந்த செய்தியில், ஏர் இந்தியா நிறுவனத்தின் அலட்சியம் இருப்பதாக தெரியவில்லை.

    தொலை தூர விமானங்கள் முப்பதாயிரம் அடிக்கு உயரே பறந்து செல்லும் பொது காற்று வெற்றிடங்களில் நுழைந்து விட அதிக வாய்புகள் உள்ளது. சென்னையில் இருந்து அமெரிக்க செல்லும் வழியில் குறைந்தது ஓரிடத்திலாவது air pocket என்ற வெற்றிடத்தில் விமானம் இறங்கும். வெற்றிடத்தின் அளவை பொறுத்து விமானம் உடனடியாக கீழே இறங்கும். இந்த மாதிரி சவால்களை சமாளிக்கவும், எரிபொருளை சேமிப்பதற்கும் தான் விமானம் அவ்வளவு உயரே பறக்கிறது.

    இந்த சம்பவத்தில், எதிர்பாரத விதமாக இன்னொனொரு விமானமும் அதே பாதையில் வந்தது தான்.

    உண்மையில், தகவல் கட்டுபாட்டு மையம், மற்றும் இரண்டு விமானங்களின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்க பட்டிருகிறது என்றே நினைக்கிறன்.

    விமானி டாய்லெட்டில் இருந்தது, அவசரத்தில் கதவு திறக்காதது எல்லாம், எதிர்பாராமல் நடக்க கூடியது தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *