BREAKING NEWS
Search

பன்றிக் காய்ச்சல்: ஒரே நாளில் சென்னை சிறுவன், புனே டாக்டர் பலி!

பன்றிக் காய்ச்சல்: ஒரே நாளில் சென்னை சிறுவன், புனே டாக்டர் பலி!

சென்னை: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 10-swine-flu1-200தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 4 வயது சென்னை சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான். அதேபோல புனேவைச் சேர்ந்த டாக்டர் ஒருவரும் உயிரிழந்தார். இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் இறந்தவார்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மருத்துவமனைகள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கயுடன், சுகாதாரமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மெக்ஸிகோவில் துவங்கிய பன்றிக் காய்ச்சல் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில்தான் இதன் பாதிப்பு அதிகம் இருந்தது. இப்போது தமிழகத்திலும் உயிர்ப்பலி அளவுக்கு பரவிவிட்டது இந்த நோய்.

இதற்கு முக்கிய காரணம் மக்களின் அலட்சியம் மற்றும் சுகாதாரமின்மையே. இந்த அலட்சியத்துக்கு ஒரு பள்ளிச் சிறுவன் பலியாகிவிட்டதுதான் கொடூரம்.

சென்னையில் சஞ்சய் என்ற 4 வயது சிறுவன் சில தினங்களுக்கு முன் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான்.

வேளச்சேரி எல்.ஐ.சி காலனியில் வசித்து வந்தான். முதலில் வடபழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் அவனுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. சிறுநீர் வெளியேறுவதும் குறைந்து விட்டது. உடல் நிலை மோசமாகி வருவதால் வந்ததால் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவன் சேர்க்கப்பட்டான்.

சிறுநீரகம் செயல் இழந்து, கல்லீரலும் பாதிக்கப்பட்டது. மூச்சுவிட திணறினான்.

அதனால் உடனடியாக தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை சிறுவன் சஞ்சய் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவன் சஞ்சய் மரணத்தால் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளது, பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

புனே டாக்டரும் பலி!

அதே போல் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட புனே டாக்டர் பாபாசாகிப் மானே என்பவரும் இன்று மரணமடைந்தார். இதையடுத்து இந்தியாவில், பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இருமல், காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்..

முன்னதாக குழந்தைகளுக்கு தும்மல், இருமலுடன் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்பவேண்டாம் என்றும் உடனடியாக அருகில் உள்ள டாக்டரிடம் காண்பித்து தொண்டை சளியில் பரிசோதனை செய்யவேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சலுக்கு இப்போது 7 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் கோவையிலும், 4 பேர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் சஞ்சய்க்கு நோய் எப்படி வந்தது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சஞ்சயின் தந்தை குமார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூர் சென்று வந்துள்ளார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் இல்லை. ஆனால் அவர் மூலம் வர வாய்ப்பு உள்ளது.

அதாவது பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் அவரை அறியாமல் பல வருடங்களாக டைபாய்டு காய்ச்சலை பிறருக்கு பரப்பி வந்தார். ஆனால் அந்த நோய் அவரை தாக்கியது இல்லை. எனவே சஞ்சய்க்கு எப்படி வந்தது என்று பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகிறோம்.

பன்றிக்காய்ச்சலால் இறந்த மாணவர் சஞ்சய் வீடு வேளச்சேரி எல்.ஐ.சி. காலனியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது. அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்களில் யாருக்காவது தும்மல் இருமல் உள்ளதா? காய்ச்சல் உள்ளதா? என்பதை கண்டறிய சுகாதாரக் குழுவினர் நேற்று நேரில் சென்றனர்.

அதேப்போல சஞ்சய் படித்த அக்ஷயா மெட்ரிகுலேசன் பள்ளியில் தும்மல் இருமல் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கி உள்ளோம்.

ஒரு வாரம் விடுமுறை…

அதுமட்டுமல்ல பன்றிக்காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவுவதால் பல பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள் என்னை அணுகி பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடட்டுமா என்று கேட்டனர். அவ்வாறு விடுமுறை விடுவது சரி அல்ல.

மாணவர் சஞ்சய் படித்த வகுப்பிற்கு மட்டும் ஒரு வாரம் விடுமுறை அளிக்கலாம் என்று கூறியிருக்கிறேன். மற்ற பள்ளிகளை சேர்ந்த முதல்வர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இருமல் சளி இருப்பது வழக்கம் தான். ஆனால் தும்மல், இருமலுடன் காய்ச்சல் இருந்தால் பள்ளிக் குழந்தைகள் அல்லது மாணவர்களை ஒருவாரம் பள்ளிக்கு அனுப்பவேண்டாம்.

அதுமட்டுமல்ல அந்த குழந்தைகளை அருகில் உள்ள குழந்தைகள் நல டாக்டரிடம் பரிசோதியுங்கள். தேவைப்பட்டால் அவருடைய ஆலோசனையின்படி தொண்டை, மூக்கில் சளி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக ஒட்டுமொத்த பள்ளிக்கு விடுமுறை தேவையில்லை.

வகுப்பிற்கு வந்தபிறகு காய்ச்சலுடன் இருமிக்கொண்டே குழந்தைகள் இருந்தால் உடனே பெற்றோரை அழைத்து டாக்டரிடம் காண்பிக்கும்படி அறிவுரை கூறுங்கள். இருமிய குழந்தைகளுக்கெல்லாம் பன்றிக் காய்ச்சல் என்று நினைத்து பயப்பட வேண்டாம்.

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க முன் எச்சரிக்கையாக, முடிந்தவரை குழந்தைகளை, மாணவர்களை சுற்றுலா அனுப்ப வேண்டாம். தேவை இன்றி மருத்துவமனைகள், ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றார்.

திருச்சியில் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல்?

இந்த நிலையில், திருச்சியில் ரயில்வே போலீஸ்காரர் உள்பட 2 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று மாலை கடுமையான காய்ச்சல், சளி, இருமல் ஆகிய நோய்களுடன் 2 ஆண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ரயில்வே ஆஸ்பத்திரியில் முதலில் சிகிச்சை பெற்று விட்டு அங்கிருந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒருவரது பெயர் பதம்சிங். இன்னொருவது பெயர் விஜயன்.

அவர்களுக்கு பன்றி காய்ச்சல் நோயின் அறிகுறிகள் அதிகமாக தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள், நர்சுகள், மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அனைவரும் முகத்தில் நோய் தடுப்பு முகமூடி அணிந்து கொண்டனர். அதன் பின்னரே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கியது.

பன்றி காய்ச்சல் நோய் அறிகுறியுடன் வந்த 2 நோயாளிகளும் உடனடியாக அதற்கென்று ஏற்கனவே அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தனி வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரத்தம், சளி போன்றவை மாதிரி எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பதம் சிங் ரயில்வே போலீஸ்காரர். அலுவலக வேலையாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக புனேக்கு சென்று இருக்கிறார். அதனால் அவர் பன்றி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இருக்கலாமோ என்ற கேள்வி எழுந்து உள்ளது. விஜயன் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் ஆவார்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவ கல்லூரி டீன் பாலசுப்பிரமணியன் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே பன்றி காய்ச்சல் நோய் தடுப்பிற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ள 2 பேருக்கும் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உறுதியாக சொல்ல முடியும். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் இருவரும் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

2 பள்ளிகளுக்கு விடுமுறை..

இதற்கிடையே, சஞ்சய் படித்து வந்த அக்ஷயா பள்ளிக்கு ஏற்கனவே ஒரு வார விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல அடையாரில் உள்ள இன்னொரு பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சஞ்சய்யின் அண்ணனுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இதையடுத்து அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் 22 பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்லியில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதுவரை 22 பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மறுதிறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
2 thoughts on “பன்றிக் காய்ச்சல்: ஒரே நாளில் சென்னை சிறுவன், புனே டாக்டர் பலி!

  1. anand

    இறைவா போதும் இந்த கொடுமை … பச்சிளம் குழந்தைகளுக்கு வேண்டாம் இந்த பெரும் தண்டனை !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *