BREAKING NEWS
Search

படைப்புலகில் சில பத்தாம்பசலிகள்!

கதை அல்ல… திரைக்கதை!

சிறுகதை, நாவல் போன்ற எழுத்திலக்கியத்தை வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் தருவது நடை என்று சொல்லப்படும் கதை சொல்லும் உத்தி. அது போலவே, திரைப்படத்தை சுவாரஸ்யப்படுத்துவது திரைக்கதை என்கிற சினிமா மொழி. ராம் படத்தின் மூலம் மிகச் சிறந்த திரைக்கதை நிபுணராகவே வெளிப்பட்டிருக் கிறார் இயக்குநர் அமீர்.ameer

ஒரு திரைப்படப் பத்திரிகையாளனாய் திரைத்துறையில் தொடர்புக் கொண்டிருக்கும் என் அனுபவத்தில், திரைக்கதையின் அர்த்தத்தையும், வலிமையையும் மிகச்சரியாய் புரிந்து கொண்ட இயக்குநராக நான் உணர்ந்தவர்களில் ஒருவராக இருக்கிறார் அமீர்.

திரைப்படத் தயாரிப்பில் தவிர்க்க முடியாத சம்பிரதாயமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று. பத்திரிகையாளர் சந்திப்பு. பிரஸ்மீட் என்று சொல்லப்படும் இந்தச் சந்திப்பில், படம் எடுப்பவர்கள் தங்கள் படத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். பெரும்பாலும் பொய்யாய், மிகையாய்.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர் களிடமிருந்து தவறாமல் எழுப்பப்படும் கேள்வி: ‘படத்தோட கதை என்னங்க?’ அப்போது கெட்ட வார்த்தையைக் கேட்டது போல் துள்ளிக் குதிப்பார்கள், துடித்துப் போவார்கள் சினிமாக்காரர்கள். இதற்கு கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களும் கூட விதிவிலக்கில்லை.

‘கதையைச் சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிடும் ஸார். அதை மட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்!’ என்று கதை ரகசியத்தைக் கட்டிக் காப்பார்கள் (ரீமேக் படத்துக்கும் கூட!). எனக்கு அவர்களைப் பார்க்கும்போது கோபத்தை விட, அவர்களின் அறியாமையை நினைத்து சிரிப்பு வருவதை தவிர்க்க முடிந்ததில்லை.

சினிமாவின் வெற்றிக்குக் காரணமே கதைதான் என்று நினைக்கும் இந்த பத்தாம்பசலிகளுக்கு, திரைப்படத்தில் திரைக்கதையின் பங்கு என்னவென்பதே புரியவில்லையே என்று வருத்தப்பட்ட நாட்களும் உண்டு.

சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லியாக வேண்டும். சினிமாக்கார்கள் கட்டிக் காக்கும் கதை ரகசியத்தை உடைத்த பாவத்தை செய்ததால் நான் சந்தித்த அனுபவம் இது.

Raam

வித்தியாசமான இயக்குநராக தன்னை வெளிப்படுத்தி வரும் இயக்குநர் சேரன் பாரசீக ரோஜா என்ற பெயரில் புதிய படம் தொடங்கும் முயற்சியில் இருந்தார் அப்போது. அப்படம் தொடங்கப்படுவதற்கு முன்பு, அவரது படத்தின் கதையைப்பற்றி, இதுதான் கதை என்று ஒரு பத்திரிகையில் எழுதிவிட்டேன். அந்தச் செய்தி வெளியான அன்று கோபத்தின் உச்சிக்கேப் போய்விட்டார் சேரன்.

நான் எழுதிய செய்தியை வெளியிட்ட அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு, சில பல சண்டியர்களை திரட்டிக் கொண்டு சென்ற இயக்குநர் சேரன் அங்கே மிகப்பெரிய கலாட்டாவே செய்தார். அதோடு அடங்கவில்லை அவரது ஆத்திரம். நான் தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகை அலுவலகங்களை எல்லாம் தொடர்பு கொண்டு,

‘பிஸ்மிக்கு உங்கள் பத்திரிகையில் எழுத வாய்ப்புக் கொடுக்கக் கூடாது’ என்று கேட்டுக் கொண்டதன் மூலம் என் பத்திரிகை வாழ்க்கைக்கே முடிவுரை எழுதும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

அதற்கு சில பத்திரிகையாளர்களும் உதவி செய்தார்கள் என்பது வேறுவிஷயம். ஆனாலும், அது அத்தனை சுலபமல்ல என்று உடனடியாகவே சேரனுக்குத் தெரிய வந்தது. அடுத்தக் கட்டமாக, அவரது உதவியாளர் மூலம் என் வீட்டுக்கு தினமும் மலர்க்கொத்து அனுப்பி பின்குறிப்பாய் நன்றி என்று வஞ்சப்புகழ்ச்சி செய்தார்.

இந்த சம்பவத்துக்குப் பின் எனக்கும் அவருக்குமான நட்பு விரிசல் அடைந்ததும், சில வருடங்கள் இருவரும் பகையாளியாய் இருந்து, பின்னர் கைக்குலுக்கிக் கொண்டதெல்லாம் தனிக்கதை.

இதை இங்கே நினைவு கூரக் காரணம் திரைப்படத்தின் வெற்றிக்கு கதை கதை மட்டுமே காரணம் என்று சினிமாக்காரர்கள் எவ்வளவு அழுத்தமாக, அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கோடிட்டுக் காட்டவே!

சரி.. திரைப்படத்தின் வெற்றிக்குக் கதை மட்டும்தான் காரணமா? ஆம் என்றால், எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன. பட வெளியீட்டுக்கு முன் என்னதான் பொத்திப் பொத்தி வைத்தாலும், படம் வெளியான முதல் நாளில், முதல் காட்சியிலேயே படத்தின் கதை இதுதான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. போதாக்குறைக்கு தினப் பத்திரிகைகள் விமர்சனம் என்ற பெயரில், இடைவேளை, வணக்கம் டைட்டில் கார்ட் தவிர படத்தின் மொத்தக் கதையையும் பத்திப்பத்தியாய் எழுதித் தள்ளிவிடுகின்றன (இப்போது வலைப்பதிவர்கள் வேறு களத்தில் குதித்துவிட்டனர்…)

தனியார் டி.வி. சேனல்களின் திரை விமர்சனங்களிலும், கவுண்டவுன் நிகழ்ச்சிகளிலும் கூட படக்கதையை பகிரங்கப்படுத்திவிடு கிறார்கள். அதற்கு மேல், க்ளிப்பிங்ஸ் என்ற துண்டுக் காட்சிகள் மூலம் படத்தின் முக்கால்வாசி, மற்றும் முக்கியமானக் காட்சிகள், வெவ்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களைச் சென்றடைந்து விடுகின்றன.

இத்தனைக்குப் பிறகும் படங்கள் வெற்றியடைகின்றனவே எப்படி? ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணம் கதைதான் என்றால், அந்தக் கதை வெளியே தெரிந்ததும், படத்தின் வெற்றி பாதிக்கப்பட வேண்டுமே? ஏன் அப்படி நடப்பதில்லை?

எஸ்.ஜே. சூர்யா இயக்கிய குஷி படத்தை மறந்திருக்க மாட்டோம். படத்தின் முதல் காட்சியிலேயே, கதாநாயகன் கதாநாயகி இருவரும் கடைசியில் சேரப் போகிறார் என்ற விஷயத்தை சொல்லிவிட்டுத்தான் கதையே தொடங்கும். அந்தப்படம் அடைந்த வெற்றியை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அ ஆ படத்திலும் இதே உத்தியில்தான் கதை சொன்னார் எஸ்.ஜே.சூர்யா! என்ன குடி முழுகிவிட்டது?

இன்னொரு விஷயம்! காதல்கதை அம்சம் கொண்ட படம் என்று வைத்துக் கொள்வோம். என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் கடைசியில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்பது ரசிகர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்த விஷயம்தான். அடிதடிப்படம் என்றால் கடைசியில் ஹீரோ வில்லனை ஜெயித்துவிடுவான் என்பதும்..அப்புறமும் எப்படி இந்தப்படங்கள் வெற்றியடைகின்றன?

திரைப்பட விளம்பரங்களின் மூலமும், அது காதல் படமா? அடிதடிப் படமா, குடும்பப் படமா என்பதை, அதாவது படத்தின் கதையை ஓரளவு எளிதில் விளங்கிக் கொண்டுவிட முடியும். அதைப்பார்க்கும் பார்வையாளன், இது இன்ன மாதிரியான படம் என்ற முன் தீர்மானத்தோடுதான் திரையரங்குக்கு வருகிறான். அதற்கு மாறாய் படம் இருக்கும் போதுதான் ஏமாற்றமடைகிறான்.

ஆக, திரைப்படங்களின் வெற்றிக்குக் கதை முக்கியம்தான். ஆனால், கதை மட்டுமே முக்கியமில்லை. எனில் எது முக்கியம்? சந்தேகமில்லாமல் திரைக்கதைதான். கதையைச் சொல்லும் உத்தியிலேயே எந்தவொரு படமும் போற்றப்படுகிறது, அல்லது தூற்றப்படுகிறது.

ராம் படத்தின் கதையைப் பார்ப்போம். அம்மாவைக் கொலை செய்தவனை மகன் பழி வாங்குகிறான் என்பதே ராம் படத்தின் ஒரு வரிக்கதை. இந்த ஸ்டோரி லைனைக் கேட்கும்போது ராம் படத்தின் மீது என்ன நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருக்கும்? வழக்கமான பழிவாங்கும் கதைதானே என்ற அலட்சியமான எண்ணமே ஏற்படும். காரணம்.. அம்மாவைக் கொன்றவனை மகன் பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட எத்தனையோ திரைப் படங்களைத் திகட்டத் திகட்டப் பார்த்திருக்கிறோம்.

yogi-preview-sep13-2009

அப்படி ஒரு கதை அம்சத்தைக் கொண்ட ராம் படம் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டதோடு, இந்தியன் பனோரமா விழாவில் திரையிட தேர்வு பெற்றது என்றால்..காரணம் என்ன? புதுசாக சொல்லப்பட்ட விதம்தான்! அதாவது அமீர் கதையைச் சொன்ன உத்தியே ராம் படத்துக்கு புதிய நிறத்தைக் கொடுத்தது.

சுருக்கமாகச் சொன்னால் திரைக்கதையின் வலிமையையும் வல்லமையையும் புரிய வைக்கு படமாக ராம் இருந்தது

ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு சமகாலப் படங்களில் மிகச்சிறந்த உதாரணம் ராம் படமே!

-ஜெ. பிஸ்மி
3 thoughts on “படைப்புலகில் சில பத்தாம்பசலிகள்!

 1. r.v.saravanan

  ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு சமகாலப் படங்களில் மிகச்சிறந்த உதாரணம் ராம் படமே!

 2. r.v.saravanan

  ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு சமகாலப் படங்களில் மிகச்சிறந்த உதாரணம் ராம் படமே!

  nan ராம் padam parkavilai ini kandippaga parkiren

 3. mannan

  அன்புள்ள பிஸ்மி கொஞ்ச நாட்களாக உங்களை கவனித்து வருகிறேன்.அப்படி கவனித்ததில், நீங்கள் உங்களுக்கு பிடித்தமானவர்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு ஜால்ரா அடிப்பதில் மற்றும் துதி பாடுவதில் வல்லவர் என்று அறிந்து கொண்டேன். உங்கள் வழி நல்ல வழியல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *