பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார் அழகர்!
மதுரை: தங்க சப்பரத்தில் பச்சைப் பட்டுடுத்தி, தனது குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இன்று காலை எழுந்தருளினார் அருள்மிகு கள்ளழகர்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம்.
தங்கை மீனாட்சியின் கல்யாணத்திற்காக அழகர் கோவிலிலிருந்து கிளம்பி வரும் களளழகர், தான் வருவதற்குள் கல்யாணம் முடிந்து விட்டதை அறிந்து கோபம் கொண்டு மதுரை நகருக்குள் வராமல் ஆற்றோடு நின்று அப்படியே திரும்பிப் போவதாக மீனாட்சியம்மன் திருக்கல்யாண புராணம் கூறுகிறது.
சித்திரைத் திருவிழாவின்போது ஆண்டுதோறும் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது.
இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரும்பிய பக்கமெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் திரண்டிருக்க, வைகை ஆறு, மக்கள் கடலாக மாறிக் காணப்பட்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் குடும்பம் குடும்பமாகக் குவிந்திருந்தனர்.
கோவிந்தா முழக்கம் விண்ணைத் தொட மக்களின் ஆரவார கோஷங்களுக்கு மத்தியில், காலை சரியாக 7.10 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
ஆற்றில் இறங்கியதும் அழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து மக்கள் அவரை வணங்கினர்.
அழகர் எந்தப் பட்டை உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அது தொடர்பானவை அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி இந்த ஆண்டு பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் அழகர். இதனால் இந்த ஆண்டு நல்ல மழையும், செழிப்பான விவசாயமும் இருக்கும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தையொட்டி மதுரை நகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. மதுரை நகர் மற்றும் வைகை ஆற்றுப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
வண்டியூரில் எழுந்தருளல்
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 11 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் நடக்கும் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து வண்டியூர் செல்லும் கள்ளழகர் அங்குள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் இரவு 11 மணிக்கு எழுந்தருள்கிறார்.
நாளை மறுநாள் மே 10ம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். 11ம் தேதி இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12ம் தேதி கள்ளழகர் மீண்டும் அழகர் கோவிலுக்கு புறப்படுகிறார்.
அழகரின் ‘குதிரை’ ரகசியம்:
பொதுவாக குதிரையை போர் வீரர்களே அதிகம் பயன்படுத்துவார்கள். அழகரும் ஒரு போர் வீரரே!
ஆம்… மானிடர்களாகிய நாம் பலவித கெட்ட குணங்களுடனும், ‘நான்’ என்ற ஆணவ குணத்துடனும் வாழ்கிறோம். அதனால், பல பாவங்களைச் செய்கிறோம்.
நமக்குள் உறைந்து கிடக்கும் இந்த கெட்ட குணங்களுடன் போரிட்டு, பாவச் சுமையைக் குறைக்கவே அவர் குதிரை மீதேறி வருவதாக புராணங்கள் கூறுகின்றன.
அழகரது குதிரையின் நான்கு கால்களும் தர்மப்படி வாழ வேண்டும், வாழ்க்கையின் பொருள் உணர்ந்து வாழ வேண்டும், அதன் மூலம் இன்பம் பெற வேண்டும், பாவமற்ற வாழ்க்கை பிறப்பற்ற நிலையை நல்கும் என்ற நான்கு நிலைகளாக (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) உள்ளன. குதிரையின் ஒரு காது எதைக் கேட்கலாம் என்பதையும், மற்றொரு காது அதன் விளைவுகளையும் (பாவ, புண்ணியம்) குறிக்கிறது. அதன் கண்கள் எதைக் காண வேண்டும் என்பதையும், அதனால் கிடைக்கப் போகும் கண்ணுக்குத் தெரியாத பலன்களையும் தெரிவிக்கின்றன.
குதிரையின் முகம் நம் தலைவிதியைக் குறிக்கிறது. அதன் வாலுக்கு அபார சக்தி உண்டு. உடலில் ஈ மொய்த்தால், குதிரை தனது வாலை ஆட்டி எப்படி அதை விரட்டுமோ, அதுபோல, விதிப்படி நமக்கு துன்பம் ஏற்பட வேண்டும் என இருந்தால், அந்த துன்பங்களை அழகரின் தரிசனம் விரட்டி விடும் என்பதை குதிரையின் ஆடும் வால் எடுத்துரைக்கிறது.
கழுத்தில் கட்டப்பட்ட சலங்கைகளும், காலில் கட்டிய சிலம்புகளும் இறைவனை மந்திர ஒலி எழுப்பி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அழகர் குதிரையின் கடிவாளத்தை இறுகப் பிடித்திருக்கிறார். அதாவது, கட்டறுந்து ஓடும் மானிடப் பிறப்புகளின் செயல்பாடுகள் தன் கையில் உள்ளது என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார். அவர் கையிலுள்ள சாட்டை, அவ்வாறு ஓடும் மானிடர்களுக்கு ‘சோதனை’ என்னும் அடியைக் கொடுப்பதாக உள்ளது. குதிரையின் முதுகில் அவர் அமர்ந்துள்ளது, ‘அனைத்துலகும் தனக்குள் அடக்கம்’ என்பதைக் காட்டுகிறது.
Thanks for the news…Lets meditate on god and get the grace.