BREAKING NEWS
Search

உள்ளதைச் சொல்கிறேன்! -1

குடிக்க வைக்காதீர்கள்…

து என்னமோ தெரியவில்லை… பத்திரிகைத் துறையினரில் பெரும்பாலானோர் பாகுபாடின்றி, வயது வித்தியாசமில்லாமல் குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள், போதைப் பாக்கு மெல்லுகிறார்கள் (சில விதிவிலக்குகள் இங்கும் உண்டு).

டென்ஷன், வேலைப் பளு என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டக் கூடாது. உண்மையான காரணம், இலவசமாக, எளிதில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவை இவர்களுக்குக் கிடைப்பதுதான். புகைப் பழக்கமே இல்லாதவர் கூட, 555 என்றதும் ஒரு இழுப்பு என ஆரம்பிக்கிறார். முன் பின் குடிக்காதவரும், பக்கார்டி, பிளாக் நைட், ஸ்காட்ச் என்று வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ணப் புட்டிகளைப் பார்த்ததும் ஒரு கண்ணாடித் தம்ளரை தன்னிச்சையாக ஏந்துகிறார்கள்.

அரசியல், வணிக, திரையுலக, விளையாட்டுத் துறையினர் தங்கள் வெற்றியைக் கொண்டாட அல்லது காரியமாக வைக்கும் மாலை நேர சந்திப்புகள் பெரும்பாலும் மதுவில் மூழ்கும் வைபவங்களாகவே இருக்கும். ரொம்ப நாகரீகமாக ஆரம்பித்து மகா கேவலமாக முடிகிற சமாச்சாரம்தான் இந்த மதுவிருந்துகள்…

‘வெளிநாட்டுச் சரக்கு’ என்ற சொல்லுக்கு எளிதில் விழும் நண்பர்கள், மூக்கு முட்டக் குடித்து போதையில் தன்னிலை மறக்கிறார்கள். வாரத்துக்கு இரண்டு மூன்று என இலவசமாகப் பழகிப் பழகி, பின்னர் தினமும் குடிக்கத் துவங்கி வருமானத்தையும் மானத்தையும் இழந்து நோயில் விழுகிறார்கள்.

அப்படியானால் பத்திரிகைக்காரனுக்கு ஒண்ணுமே தெரியாதா… இவர்கள் வைக்கிற மதுவிருந்தால்தான் கெட்டுப் போகிறார்களா… என்று நீங்கள் கேட்கலாம். ஒரேயடியாக இப்படி சொல்ல முடியாது. ஆனால் இது ஒரு முக்கிய காரணம். கட்டுப்பாடாக இருக்கலாமே எனலாம்… இருந்தால் நல்லதுதான். ஆனால் பலரால் இருக்க முடிவதில்லையே!

பொதுவாக தமிழ்ப் பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் இன்னும் கூட சொந்த வீடு இல்லாத, கைக்கும் வாய்க்கும் மட்டுமே சம்பாதிக்க முடிகிற கஷ்டஜீவிகளாகத்தான் இருக்கிறார்கள். வங்கிகள் கூட இவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை (நிரந்தரமற்ற வருமானம், ரொம்ப நெருக்கடி கொடுத்தால் மிரட்டுவார்கள் என்ற அச்சம்!)

ரஜினியை எளிதில் சந்திப்பார்கள், கமலிடம் மணிக்கணக்கில் பேசுவார்கள், நினைத்தால் முதல்வர் வீட்டுக்கே போவார்கள்… ஆனால் இவர்களோ வறுமையை சாமர்த்தியமாக சமாளித்துக் கொண்டிருப்பார்கள். திடுதிப்பென்று அந்த செய்தியாளர் மரித்துப் போனால், அந்தக் குடும்பத்தின் நிலை… சொல்லத் தரமற்றது.

பத்திரிகையாளர்கள் இந்த மாதிரி மது விருந்துகளில் மாலை நேரங்களைக் கழித்துவிட்டு, தங்கள் வாகனங்களில் பாதுகாப்பற்ற முறையில் வீடு திரும்பும்போது விபத்துக்கள் நேர்ந்து உயிரை விடுவதும் உண்டு. எனக்குத் தெரிந்து 4 நிருபர்கள் அப்படி இறந்திருக்கிறார்கள். இதேபோல ஒரு மதுவிருந்து முடிந்து வீடு திரும்பிய ஒரு முன்னணி மாலை நாளிதழ் நிருபர் (சக ஊழியர்), சாலையோர பெரும் பள்ளத்தில் விழுந்து இறந்து இரண்டு நாள்வரை அவர் பிணத்தைக் கண்டுகொள்ளக்கூட ஆளில்லை!

எனவே இதுபோன்ற மது விருந்துகளை முடிந்தவரை அனைத்துத் துறையினருமே தவிர்ப்பது நல்லது. சுவையான விருந்து அளிக்கட்டும், தப்பில்லை. ஆனால் குடித்துவிட்டு வண்டியோட்டும் நிலையை பத்திரிகையாளர்களுக்கு உருவாக்கித் தராதீர்கள்.

ஒரு முறை சக பத்திரிகையாளர் ஒருவர், மது விருந்து முடித்துவிட்டு வண்டியில் நள்ளிரவு வீடு திரும்பினார். ஒரு செக்போஸ்டில் போலீஸ் மடக்கி உட்கார வைத்துவிட்டது. அவர் எவ்வளவோ சொல்லியும் விடவில்லை. கடைசியில் அங்கிருந்து எனக்கு போன் செய்தார்.

உடனே தெரிந்த டிஐஜி (இப்போது இவர் டிஜிபி அந்தஸ்தில் உள்ளார்) அதிகாரிக்குப் அந்த அகால நேரத்தில் பேசினேன். தனிப்பட்ட முறையில் அவர் நமக்கு நெருங்கிய நண்பர் என்ற முறையில், சம்பந்தப்பட்ட ஏரியா ஏசிக்குப் பரிந்துரைக்க, அவர் பட்ரோலில் இருந்த இன்பெக்டருக்கு தகவல் சொல்லி, அந்த செக்போஸ்டுக்கு மைக்கில் விஷயத்தைக் கூறி நண்பரை விடுவிப்பதற்குள் காலை 4.55 ஆகியிருந்தது.

இப்போது நண்பருக்கு போதை தெளிந்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தார். விஷயத்தை வீட்டிலும் சொல்ல முடியாது.

எத்தனை அவமானம் பாருங்கள்… தேவையா இது!

நேற்றிருந்தார்…

ம்ப முடியவில்லை. நேற்று வரை சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ஒரு மனிதன் இன்று கண்ணாடிப்பெட்டிக்குள் சவமாய்… அதுவும் 45 வயதில்.

ராதா ராஜ் என்ற அந்த மனிதன், அரசியல் – சினிமா செய்தியாளர். தன் வலி எதையும் யாருக்கும் சொல்லாமல், ஏன் காதல் மணம் புரிந்த மனைவிக்கும் கூட சொல்லக் கூச்சப்பட்டு மறைத்து மறைத்து நேற்று மறைந்தே போனார். தேவதைகளைப் போன்ற அவரது இரு பெண் பிள்ளைகள் சவப்பெட்டியின் மீது விழுந்து, அழக்கூட திராணியற்று டாடி டாடி என்று அரற்றிக் கொண்டிருந்தது இன்னும் கண்ணுக்குள் ஈரத்தை கசிய வைத்துக் கொண்டிருக்கிறது.

குடி அவர் உயிரை இத்தனை வேகமாய்க் குடித்து தாகம் தணித்துக் கொள்ளும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

தொடர்ச்சியான குடிப் பழக்கம் அவரது ரத்தத்தில் இருந்த சிவப்பணுக்களைச் சாகடித்து, உடலின் உள் உறுப்புகளைச் செயலிழக்க வைத்திருக்கிறது. ஒரு கட்டத்தில், கட்டுப்பாடின்றி வாந்தியாய் ரத்தம் வெளியேற, மருத்துவர்கள் திணறிப் போனார்கள். ஆனால் அப்போதும் மனிதர் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. தனக்கு இதுதான் பிரச்சினை, உதவுங்கள் என சக பத்திரிகையாளர் எவரிடமும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன், அவர் மனைவிக்கே கடந்த வாரம்தான் இவருக்கு உடலில் இத்தனை பெரிய கோளாறு இருப்பதே தெரிந்ததாம்.

மிகையாக இருக்குமோ என்று நினைத்து நண்பர்களைக் கேட்டால், “இல்லய்யா…அவர் முந்தா நாள் பிரஸ் மீட்டுக்குக் கூட சாதாரணமா பைக்கில் வந்தார். கிளம்பும்போதுதான் அவர் லேசா தடுமாறி வாந்தி எடுத்தார். அப்போதுதான் ரத்தமாகக் கக்கினார். அதுவரை அவருக்கு என்ன பிரச்சினை என்றே யாருக்கும் தெரியாது” என்றனர்.

யோசித்துப் பார்த்தேன்… 14 ஆண்டுகளாக சக நிருபராக அவரைப் பார்த்திருக்கிறேன், நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவர் குடிப்பார்… ஆனால் எத்தனை ‘சுற்று’ போனாலும் நிதானம் தவறாமல் ஒரு புன்னகையுடன் சில வார்த்தைகள் பேசிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வெகு இயல்பாகப் போவார்! என்னை விட சீனியர்… அறிவுரை சொல்லவும் முடியாது. அவரது குடிப்பழக்கத்தைச் சுட்டிக் காட்ட இதையெல்லாம் கூறவில்லை. ராதாராஜ் வாழ்க்கை ஒரு பாடம் என்று சுட்டிக் காட்டவே. 45 வயதில் மரணத்தைத் தழுவுவது எத்தனை கொடுமை!

என்னைப் பொறுத்தவரை இறுதிவரை ஒரு நலம் விரும்பியாகவே இருந்தார். சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் என்னையும் ஒரு செயற்குழு உறுப்பினராக்கியது அவர்தான். ‘உங்களை மாதிரியானவர்கள் முன்னின்று இந்த சங்கத்தை நடத்தணும்’ என்பார் அடிக்கடி.

ரஜினி தொடர்பான பல ப்ளாஷ்பேக் நிகழ்வுகளை அவர்தான் எனக்குச் சொன்னார். தான் எழுதிய திரையுலக அதிசயங்கள் புத்தகத்தைக் கொடுத்து, அதிலுள்ள சுவாரஸ்யமான பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அளித்தார். எஸ்பிஎம் – ரஜினி படங்கள் குறித்த பல செய்திகளை அவர் சின்னச் சின்ன குறிப்புகளாகத் தந்துள்ளார். நல்ல எழுத்தாளர்.

யாருக்கும் பிரச்சினையாக இல்லாமல், முடிந்தவரை நல்லவராக வாழ முயன்ற ஒரு மனிதர் மறைந்து போனார். நேற்றுவரை அவரைப் பார்த்து வந்தேன்.

இன்று… இல்லை. அவர் குடும்பத்துக்கு மிச்சமிருப்பது வாடகை வீடு, உறவுப் பிரச்சினைகள், அந்த பெண் குழந்தைகளின் கல்வி… வருத்தம் மனதை அறுத்தது…

* இன்று -ஜூன் 26-சர்வதச போதைப் பொருள் எதிர்ப்பு தினம்!

-வினோ
21 thoughts on “உள்ளதைச் சொல்கிறேன்! -1

 1. V.Suryakumar

  வேதனை. வேதனை. கிண்டி-மீனம்பாக்கம் சாலையில் பைக்கில் செல்லும்போது என்னருகிலேயே குடித்துவிட்டு தடுமாறியபடி பைக் ஒட்டிசெல்லும் சிலரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். ‘நான் ஸ்டெடி’ என்று அசட்டு தைரியத்துடன் வண்டி ஓட்ட முற்படுபவர்கள் மேற்சொன்ன விளைவுகளை எண்ணிப்பார்க்க வேண்டும்.

 2. krishsiv

  நம்நாடு குடும்பம் என்ற பந்தத்தில் பின்னிபிணைந்துள்ளது
  எந்த துறையா இருந்தாலும்
  எந்த போதை பழகமா இருந்தாலும்
  ஒருத்தருக்கு குடும்பம் இருந்து இதை செய்யகூடாது ….
  இந்த உலகத்தில் மயங்க எவளவோ உள்ளது
  அதை விட்டு ….. சமுகம் எற்படுதிருகும் மாய தில் சிக்கி அவனை நம்பி இருபவர்களை சுத்தி இருபவர்களை .. அவனும் தற்குலை செய்துகொண்டு தன குடும்பத்தை கொலை செய்வதற்கு சமம்
  இது ஒரு சுயநலம் தனுடைய அற்ப சந்தோசத்திற்காக தன குடும்பத்தை பற்றி கவலைபடாம ….
  நாலு பேரு குடிக்கிற இடத்தில ஒருத்தன் குடிக்காம இருந்தா …அது மத்தவங்களுக்கு அவமானமா கருதுகிறார்கள் ..கொஞ்சமா சாப்பிடுங்க தப்பில என்று ஒருத்தர் ….
  தான் குடிகிறது மட்டும் இல்லாமல் அடுத்தவனையும் குடிக்க தூண்டிவிட்றவன் …. (………)
  இதெலாம் விட குடிக்காதீங்க என்று சொன்னா இவுங்க பதில் இருக்கே …
  குடிக்காம இருந்தா சாகமாடோம … இருகுரவரை சந்தோசமா இருப்போம் .

  எது சந்தோசம் …. இதுவா

  குடிக்காதீங்க ….குடிகவைக்காதீங்க

 3. R.Rathinakumar

  So this type reporters in all tamil news papers and magazines. How they are writing orginality news. If they (Press recongnizer) are arranging this type of drinking party for the reason of magic newss only. So all the drinking reporters take the foolish news and announched to peoples. So the rajini, vijay, ajlith etc, asin, trisha, tamman etc.. will become popular.

  If the reporter coming the way of truth or honest, cnn’t publish the cinema story.

  If the reporters gives the wrong news ang magic news, they are got the wrong endddddddddddddd…….

 4. r.v.saravanan

  அவர் குடும்பத்துக்கு மிச்சமிருப்பது வாடகை வீடு, உறவுப் பிரச்சினைகள், அந்த பெண் குழந்தைகளின் கல்வி… வருத்தம் மனதை அறுத்தது

  உண்மை தான்

  தன்னை நம்பி தன்குடும்பம் உள்ளது என்பதை நினைத்து பார்த்து வாழ வேண்டும்

 5. Muralidharan

  அண்ணனின் ஆத்மா சாந்தி ஆடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

 6. Manoharan

  என்வழியில் வந்ததில் இது ஒரு மிக சிறந்த பதிவு. இதை எப்போதும் எல்லோரும் படிக்கும்படி முதல் பக்கத்தில் வைக்கலாம். இதை தினமும் குடிப்பவர் தினமும் படித்தால் நிச்சயம் மாறக்கூடும். இதை படிக்கும்போதே ஒருவித பயம் வருகிறது. இந்த பயம் சிலரையாவது மாற்றும். இதை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி வினோ.

 7. babu

  ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த துறைன்னு இல்ல எல்லா துறையிலயும் இந்த குடி குடியை கெடுத்துட்டு இருக்கு
  இந்த பதிவை வெளியிட்டதற்கு என் நன்றி . இதை பார்த்து ஒருத்தன் திருந்தினாலும் சந்தோசம்

 8. Logan

  //என்வழியில் வந்ததில் இது ஒரு மிக சிறந்த பதிவு. இதை எப்போதும் எல்லோரும் படிக்கும்படி முதல் பக்கத்தில் வைக்கலாம். இதை தினமும் குடிப்பவர் தினமும் படித்தால் நிச்சயம் மாறக்கூடும். இதை படிக்கும்போதே ஒருவித பயம் வருகிறது. இந்த பயம் சிலரையாவது மாற்றும். இதை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி வினோ.//

  வழிமொழிகிறேன்…

 9. Mariappan

  //என்வழியில் வந்ததில் இது ஒரு மிக சிறந்த பதிவு. இதை எப்போதும் எல்லோரும் படிக்கும்படி முதல் பக்கத்தில் வைக்கலாம். இதை தினமும் குடிப்பவர் தினமும் படித்தால் நிச்சயம் மாறக்கூடும். இதை படிக்கும்போதே ஒருவித பயம் வருகிறது. இந்த பயம் சிலரையாவது மாற்றும். இதை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி வினோ.//

  வழிமொழிகிறேன்…

  நன்றி லோகன்.

 10. santhosh

  வினோ

  என் குடும்பத்திலும் வெள்ளியன்று ஒரு மரணம் நிகழ்ந்தது. இறந்தவர் என் சித்தப்பா காரணம் குடி.

  குடி குடும்பத்தை கெடுக்கும்.

 11. Muthu

  சாராயத்தை விற்று கொள்ளை லாபம் அடையும் அரசாங்கம் அந்த பாழா போன குடியால் இறந்தவரின் குடும்பத்திற்கும் இழப்பிடு தர வேண்டும் அல்லா விட்டால் மது விலக்கை கொண்டு வந்து, கள்ள சாராயம் பெருகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மதுவிற்கு அடிமையானவரின் தாகத்தை தீர்க்க வேண்டுமானால் கள்ளு கடைகளுக்கு அனுமதி கொடுத்து ஏழை பனை தொழிலார்களின் பிழைப்புக்கு வழி செய்யலாம்.

 12. paranthaman

  உயிர் பதிவு ..யோசிக்க வைத்த உன்னத தெளிவு ..தேங்க்ஸ் வினோ !

 13. Mohan, London

  Vanakkam,
  Mr Radharaj is (was) my best friend for last 10 years, he was my right hand man in Chennai. I am still shocked that he is not with us any more. He is a maverick journalist whom I admired. I begged him not to drink, for that advise he didn’t talk to me for some times. When I was in Chennai in April 2010, he promised me he will not drink any more and in order to celebrate this he arranged a small party with few of his friends, on that day he drank only one bottle of beer. But when I phoned him next morning he was drunk, I was disappointed with him. I helped him before, and now I am helping his family too.

  I don’t drink and I don’t smoke.

  Regards
  Mohan
  London
  sraj3000@yahoo.co.uk

 14. வள்ளுவன்

  யோசிக்க வைக்கும் நல்ல பதிவு. நமது ஊரில் எதையுமே அளவுக்கு அதிகமாக செய்வது தான் வாடிக்கை. நம் ஊர் சினிமா, நடிப்பு, தொடர்கள், உணவில் மசாலா, Coffee, Tea என்று எல்லாமே கொஞ்சம் காட்டத்துடன் இருக்கும். மது விருந்தின் நோக்கமே, socializing and enjoyment தான். ஆனால் நாம், விருந்துகளில் அதை பின்னுக்கு தள்ளி விட்டு மதுவில் மட்டுமே மூழ்கி விடுவது தான் வேதனை. We miss enjoying the session.

  இப்படி செய்யலாம். மது விருந்துகளில் Wine அல்லது குறைந்த அளவு மது தான் என்ற கட்டுப்பாடு இருந்தால் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறையும்.

 15. Gopal

  ரஜினி வருந்தட்டும் ஸ்டைல் என்ற பெயரில் மதுவையும் புகை பிடிக்கும் பழக்கத்தை பிரபலபடுதியர்தர்காக. அது என்ன சார் அளவோடு குடிங்கள்??

 16. pandiyan

  என்னோட சக பணியாளர்கள் இரண்டு பேர் நல்ல திறமைசாலிகள். கடந்த மார்ச் 2008 வருஷம் குடித்துவிட்டு போதை தலைக்கேறி பைக்கில் வரும்போது நிதானம் இல்லாமல் மணல் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் மாண்டார்கள். அவர்களை அம்புலன்சில் கொண்டு வந்து மார்ச்சுவரியில் இறக்கி போட்டவன் நான். கடைசியில் அனாதை ஆனது அந்த இருவரின் kudumbam.

 17. velmurugan

  நிருபர்கள் மட்டும் குடிப்பது போல் உள்ளது. உமது பதிவு, நல்ல விஷயம் சொல்லி இருக்கிறிர்கள், நன்றி ஆனால் அதை பொதுவாக சொல்லாமல் நிருபர்கள் மட்டுமே குடிப்பது போல் உள்ளது உமது பதிவு, சரி எதுவாக இருந்தாலும் உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி ,…

 18. balan

  குடிப்பதை கௌரவமாக நினைக்கிறார்களே அவர்களை என்னே சொல்வது?
  நமக்கு உதவுறவர் ஒரு கூடை ஆப்பிள் தருவதில்லை. பார்ட்டி வைத்து குடியை கொடுத்து குடியை கெடுக்கிறார்கள். இது ஒரு மகிழ்சியா?

 19. R Raguram

  hi, please remove the comments and the article above as Mr Radharaj’s family, specially his children don’t like them.

  Kind Regards

  Raguram
  Chennai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *