நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் செல்லும்!: உயர்நீதிமன்றம்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்தது.
தனியார் பள்ளிகளில் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கல்விக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிட்டி பள்ளிகளில் ஆய்வு செய்து கல்வி கட்டணத்தை நிர்ணயித்தது.
குறிப்பாக ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களுக்கு செய்து தந்திருக்கும் வசதிகள், பள்ளியின் தரம், எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என பள்ளி உரிமையாளர்கள் விரும்புகிறார்கள் போன்ற விவரங்களைக் கேட்டறிந்த பிறகே இந்தக் கட்டணத்தை நிர்ணயித்ததாக தமிழக அரசும் விளக்கம் அளித்தது.
ஆனால் கோவிந்தராஜன் கமிட்டியின் கல்வி கட்டணத்தை ஏற்க தனியார் பள்ளிகள் திடீரென்று மறுத்தன. அரசு உத்தரவைப் புறம்தள்ளிவிட்டு, இஷ்டத்துக்கும் கட்டணம் பிடுங்கி வருகின்றன. ப்ரீகேஜி வகுப்புக்கு இப்போதும் ரூ 30 ஆயிரம் வரை வசூலிக்கின்றன.
இந்நிலையில், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் கட்டண நிர்ணயத்துக்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கல்வி கட்டணத்துக்கு இடைக்கால தடை விதித்தது. உடனே பெரும்பாலான தனியார் பள்ளிகள் கட்டணத்தை இன்னும் கடுமையாக உயர்த்திவிட்டன.
பெற்றோர்களை அழைத்து திடீர் கூட்டம் போட்ட பல தனியார் பள்ளிகள் மாதாந்திர கட்டணத்தை இருமடங்காக உயர்த்தின. அண்ணாநகரில் உள்ள எஸ்பிஓஏ, வள்ளியம்மாள், புரசைவாக்கத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள் போன்றவை இதுபோல குரூரமாக கட்டணத்தை உயர்த்தியதால், இதனை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்ககோரி பெற்றோர் சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் அப்பீல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், “நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் செல்லும்” என்று அறிவித்துள்ளது.
“தனியார் பள்ளிகள் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது”, என்றும் அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசின் முன் உள்ள கேள்வி…
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, மாநில அரசு கல்விக் கட்டணத்தை எப்படி அமல்படுத்தப் போகிறது, கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை எப்படி கட்டுப்படுத்தப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடைக்காலத் தடையை சாக்காகக் கொண்டு உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவு பிறப்பிக்குமா?
உத்தரவை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமா?
என்ன செய்யப் போகிறார் முதல்வர் கருணாநிதி?
-என்வழி
//என்ன செய்யப் போகிறார் முதல்வர் கருணாநிதி//
ம்ம்ம்ம். எட்டு மணிக்கு போய் மானாட மயிலாட ப்ரோக்ராம் பார்பார்.. வேற என்ன பண்ண முடியும் அந்த மனுஷனால ?