BREAKING NEWS
Search

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக ருத்ரகுமாரன் தேர்வு!

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக ருத்ரகுமாரன் தேர்வு!

கொழும்பு: நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடுகடந்த  தமிழீழ அரசிந் முதல் கூட்டம் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அருகாமையிலுள்ள பிளாசா ஹோட்டலில் தொடங்கியது. உலகம் முழுவதிலுமிருந்து இந்த அரசின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். பாரீஸ், லண்டன் மாநகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் டெலிகான்பரன்ஸ் முறையில் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உரமாகிப்போன உயிர்களுக்கு மௌனாஞ்சலி செலுத்துவதுடன் அமர்வுகள் தொடங்கின. தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பு அங்கீகாரம், அமைச்சரவை உருவாக்கம் போன்றவை இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டன.

பின்னர் அரசின் முதல் பிரதமராக விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து அந்த அரசின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:

“நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதிநிதிகள் செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை மூன்று தினங்கள் கூடி அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் பிரதமரையும் தேர்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.

நியூயார்க் நகரில் ஐநா சபைக்கு அருகேயுள்ள பிளாசா ஹோட்டலில் ஒன்றுகூடிய பிரதிநிதிகளுடன் பாரீஸ், லண்டன் நகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் தொடர் கொண்டு விவாதித்தனர்.

இந்த விவாதத்தில், பிரதமருக்கு உதவியாக 3 துணை பிரதமர் பதவிகளும் 7 அமைச்சர் பதவிகளும் உருவாக்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டதாக இருக்கும். இது தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தையும், செனட் என்னும் நியமன உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையையும் கொண்டிருக்கும்.

நாடுகடந்த தமிழ் ஈழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து, கனடாவைச் சேர்ந்த பொன் பாலராஜன் நாடாளுமன்ற சபாநாயகராகவும், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுகன்யா புத்திரசிகாமணி துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

விஸ்வநாதன் ருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் முதலாவது பிரதமராக நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டார்.”

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2 thoughts on “நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக ருத்ரகுமாரன் தேர்வு!

 1. Nakkeeran

  நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வு அய்க்கிய நாடுகள் அவைக்கு அருகாமையிலுள்ள பிளாசா கோட்டலில் கடந்த செப்தெம்பர் 29 தொடக்கம் ஒக்தோபர் முதல் நாள் வரை வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக அய்யப்பன் கோயில் அரங்கில் ஒக்தோபர் 2 ஆம் நடந்த பொதுக் கூட்டத்துக்கும் மக்கள் திரளாக வந்திருந்தார்கள். இந்த அமர்வின் போது நா.க.த.அ.இன் யாப்பு விவாத்திக்கப்பட்டு சில திருத்தங்களோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமை அமைச்சர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போல் அவைத்தலைவர், அவைத் துணைத் தலைவர் பதவிகளுக்கு முறையே பொன். பாலராசன் (கனடா) சுகன்யா புத்திரசிகாமணி (சுவிஸ்லாந்து) ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

  மூன்று துணை தலைமை அமைச்சர்கள் ஏழு அமைச்சர்கள் ஆகியோரைக் கொண்ட கொண்ட அமைச்சரவையைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களாட்சி முறைமைக்கு இசைய தலைமை அமைச்சரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. மேலவைக்கு 20 உறுப்பினர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

  அய்க்கிய அமெரிக்க நாட்டு முன்னை நாள் சட்டமா அதிபர் திரு.றாம்ஸி கிளார்க், மலேசிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, மனித உரிமைகள் மற்றும் முரண்பாடுகள் தீர்வு ஆகியவற்றிற்கான பன்னாட்டு விற்பன்னரும் அமெரிக்க அரச திணைக்களம், அய்க்கிய நாடுகள் அவை ஆகியவற்றிற்கான மதியுரைஞரும் கொலம்பியா பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான கற்கை மையத்தின் வருகைதரும் கல்வியாளருமான பேராசிரியர் எல். பிலிப், அமெரிக்க பல்கலைக் கழகத்தின் வோசிங்டன் சட்டக்கல்லூரி UNROW மனித உரிமைகள் சார்ந்த சட்டமுறை மறுவாழ்வு நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.அலி பெய்டவுன் ஆகியோர் இந்த அமர்வின் தொடக்க நாள் அன்று கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

  நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட சில உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள். வெளிநடப்பு என்பது மக்களாட்சி முறைமையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆயுதமாகும். எனவே அதனை எதிர்மறையாகக் கொள்ளாமல் உடன்பாட்டு முறையாகவே கொள்ள வேண்டும். மக்களாட்சி முறைமையில் கட்சி அரசியல் இன்றியமையாதது. இந்த வெளிநடப்பை அதற்கான கட்டியம் அல்லது முன்னறிவித்தல் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

  நா.க.த.அ. என்பது தனிமனிதனது வெளிக்காட்டல் (One man show) என்றும் அவர் “எல்லாம்வல்ல தலைவர்” (‘Supreme Leader’) என்றும் TamilNet சாடியுள்ளது. இந்தச் சாடலில் பொருள் இல்லை. மக்களாட்சியின் நெறிமுறை தெரியாதவர்களே இப்படியான குற்றச்சாட்டை முன்வைப்பார்கள். ஒரு அரசின் அச்சாணியாக இருப்பவர் தலைமை அமைச்சர்தான். அவரே அமைச்சரவையை உருவாக்குகிறார். கட்சி அரசியலில் ஆளும் கட்சியின் தலைவராகவும் அவரே இருப்பார். கனடா போன்ற ஒரு நாட்டின் தலைமை அமைச்சருக்கு என்ன அதிகாரங்கள் இருக்கிறதோ அதே அதிகாரங்களே நா.க.த.அ. இன் தலைமை அமைச்சர் உருத்திரகுமாரனுக்கும் இருக்கும். ஒரு மக்களாட்சி முறைமைக்குப் பலமான எதிர்க்கட்சி தேவை. ஆனால் எதிரிக்கட்சி தேவை இல்லை. இது மக்களாட்சியின் பலமேயொழிய பலவீனமல்ல. இது எட்டாப் பழம் புளிக்கும் என்பது போல் TamilNet நடந்து கொள்கிறது என நாம் நினைக்கிறோம்.

  வழிமுறைகளில் கருத்து மாறுபாடு இருப்பது இயற்கையே. ஆனால் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு ஒன்றை நிறுவப் பாடுபடுதல் என்ற ந.க.த.அ. இன் குறிக்கோளில், இலக்கில் கருத்துமாறுபாட்டுக்கு இடமில்லை.

  நா.க.த.அ. சட்டத்தின் ஆட்சி, அடிப்படை மனிதவுரிமைகளுக்கு மதிப்பு, சமத்துவம், வெளிப்படை, நல்லாட்சி போன்ற மக்களாட்சி விழுமியங்களை பேணிக்காத்துச் செயல்பட வேண்டும்.

  நா.க.த.அ. யை நிறுவுவதில் தொடக்க முதல் பலரது உழைப்பும் பங்களிப்பும் நிறையவே இருந்துள்ளது. தமிழர் அல்லாத பேராசிரியர் பீட்டர் சோக், பேராசிரியர் பிரான்சிஸ் பொயில் போன்றவர்களின் பங்களிப்பையும் குறிப்பிட வேண்டும். யாப்பை எழுதும்போது விடிய விடிய கண்விழித்து எழுதியதாகக் கனடா அய்யப்பன் கோயிலில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நா.உ. நடராசா இராசேந்திரா குறிப்பிட்டார். இதுவரை நடந்த அமர்வுகளுக்கான செலவை நா.க.த. அ. உறுப்பினர்களே பொறுத்துள்ளார்கள்.

  நா.க.த.அ. மீது புலம்பெயர் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஒக்தோபர் முதல் நாள் ரொறன்ரோவில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கை அதனை எடுத்துக் காட்டியது. மக்கள் பெரிய எதிர்பார்ப்போடும் இருக்கிறார்கள். எனவே தலைமை அமைச்சர், அமைச்சர்கள் முதல் கொண்டு நா.உ.றுப்பினர்கள் அனைவரும் எமது இலக்கை எட்டக் கடுமையாக உழைக்க வேண்டும். பொது மக்களும் தேர்தலில் வாக்களித்து உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி விட்டோம் எமது கடமை அத்தோடு முடிவடைந்து விட்டது என வாழாவிருந்துவிடக் கூடாது. அவர்களும் தங்களது வரலாற்றுக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும்.

  தலைமை அமைச்சர், அவைத்தலைவர், துணை அவைத்தலைவர், நா.உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 2. kraj

  tamilanai pateri kavalai pada jayavirku entha thakuthiyum kidaiyadu karanam ponamurai jaya mudalvarai iruntha pothu ltte thalaivar prapakaranai thookil poda satta manrathileye theermana potta jayavirku rajapaksevai thookil poda manam illatha ponathu avanai than mamanaka ninaithara illaiyo. inniyum . ezha tamilan patri jaya pesinal setha tamilan meendum vanthu thakkuvan enbathai maranthu vidakudathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *