BREAKING NEWS
Search

நந்தலாலா Vs கிகுஜிரோ!

நந்தலாலா Vs கிகுஜிரோ!

நீண்ட இழுபறிக்குப் பிறகு மிஷ்கினின் நந்தலாலா இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா அதன் அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டதாக பலரும் இப்போதே பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

படம் எடுக்கப்பட்ட விதத்தில் நந்தலாலா ஒரு தரமான திரைப்பதிவு என்றாலும், அது மிஷ்கினின் சொந்த சரக்கு இல்லை என்ற உண்மையை இங்கே சொல்லியாக வேண்டும். ஜப்பானிய படமான கிகுஜிரோவின் அப்பட்டமான ரீமேக் இந்தப் படம். படத்தில் இடம்பெறும் பாத்திரங்கள், அவர்களின் உருவ அமைப்புகள் (ஜப்பானிய பைக்கர்ஸ் மாதிரியே நந்தலாலாவில் வரும் இரு குண்டர்கள்!), கதையின் முடிவு, ஹீரோவுக்கான பிளாஷ்பேக்… இப்படி எல்லாவற்றிலும் அப்பட்டமான காப்பி!

நந்தலாலா படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், கிகுஜிரோவின் தழுவல்தானே இது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

உடனே அதற்கு பதில் சொல்லாத மிஷ்கின், கோபமாக ‘இந்தப் படம் ஒரிஜினல்… இதை காப்பி என்று நிரூபிக்க முடியாது’ என்றெல்லாம் ஆவேசப்பட்டார். இடையில் நீண்ட நாட்கள் படம் வெளியாகாமல் இருந்தது.

இப்போது படம் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை அன்று பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சி போடப்பட்டது. படம் முடிந்த பிறகு வந்த மிஷ்கின், இது தன்னுடைய சொந்தக் கதை என்றும், தனது மூத்த சகோதரர் ஒருவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் அதன் பாதிப்பில் எடுத்ததாகவும் கூறினார்.

படம் குறித்த விமர்சனத்தை பிறகு பார்க்கலாம். ஆனால் இந்தப் படம் குறித்த சில உண்மைகளை இங்கே தெரிவிப்பது மிக முக்கியம். காரணம், படைப்பாளிகள், தரமான சினிமா, பேரலல் சினிமா, தமிழ் ரசிகர்களின் ரசிப்புத் தன்மை பற்றியெல்லாம் நீண்ட லெக்சர் கொடுப்பது மிஷ்கின் ஸ்டைல். அதுவும் யாராவது எழுத்தாளர்கள் உடனிருந்துவிட்டால், என்ன பேசுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல் அடித்துவிடுவார் மனிதர். அப்படிப்பட்டவர் குறைந்தபட்சம் இந்தப் படம் கிகுஜிரோவின் பாதிப்பில் எடுக்கப்பட்டதே என்ற உண்மையையாவது இப்போது ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதால் இதை எழுதுகிறோம்.

நந்தலாலாவில் வரும் சில பாத்திரங்கள் தவிர, கதை, எடுக்கப்பட்ட விதம், காட்சி அமைப்பு முழுக்க முழுக்க ஜப்பானிய படமான கிகுஜிரோவின் தழுவல் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தகேஷி கிடானோ என்பவர் 1999-ம் ஆண்டு எடுத்தது கிகுஜிரோ (Kikujiro). சர்வதேச அளவில் மிகவும் பாராட்டப்பட்ட படம். பட விழாக்களில் பல விருதுகளையும் இந்தப் படம் பெற்றுள்ளது.

கிகுஜிரோவின் கதை இது:

ஒரு கோடை விடுமுறையில் ஒரு சிறுவன் தன் தாயைத் தேடிப் புறப்படுகிறான். ஒரு புகைப்படமும் முகவரியும் மட்டுமே தாயின் ஆதாரமாகக் கிடைக்கிறது அவனுக்கு. அவனது பயணத்தில் உடன் சேர்ந்து கொள்கிறான் கிகுஜிரோ என்ற திருடன், ஆனால் சிறுவனுக்கு உதவும் நல்ல மனசுக்காரன்.

அவர்களது நெடுஞ்சாலைப் பயணம் தொடர்கிறது… வழியில் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் முதலில் முரண்பட்டு பின்னர் உதவுகிறார்கள். சுமோ சண்டைக்காரர்கள் மாதிரி குண்டாக இருவர் எதிர்ப்படுகிறார்கள். கிகுஜிரோவுக்கும் சிறுவனுக்கும் உதவுகிறார்கள்.

குறிப்பிட்ட ஊருக்கு வந்துவிடுகிறார்கள். ஆளுக்கொரு பக்கம் தாயின் வீட்டைத் தேடுகிறார்கள். கடைசியில் கிகுஜிரோ அந்தப் பெண்ணைப் பார்க்கிறான். அவளோ புதிய கணவன், புதிய பெண் குழந்தை என செட்டிலாகிவிட்டிருக்கிறாள். கிகுஜிரோ வந்த விஷயத்தைச் சொன்னதும், தன் மகனைக் கூட்டி வந்து வாழ்க்கையைக் கெடுத்துவிடாதே என்று கெஞ்சுகிறாள்.

அங்கிருந்து கிளம்பும் கிகுஜிரோ, அந்த ஊரில் சிறுவன் தேடும் அம்மா இல்லை என்று பொய் சொல்லிவிட்டுக் கிளம்புகிறான். அப்போது கிகுஜிரோவுக்கு ஒரு ஹோமில் விடப்பட்டுள்ள தனது அம்மா நினைவுக்கு வருகிறாள்.

கடைசியில் சிறுவன் தேடும் அம்மா வரமாட்டாள் என்பதைப் புரிந்துகொண்டு அவரவர் வழியில் பிரிகிறார்கள்…

-இப்போது மிஷ்கின் ‘சுட்டுள்ள’ நந்தலாலாவின் கதையைப் பார்ப்போம்:

ஒரு புகைப்படத்தையும் முகவரியையும் (உடன் மேப்பையும்) வைத்துக் கொண்டு தன் தாயைத் தேடி கிளம்புகிறான் ஒரு சிறுவன். வழியில் பாஸ்கரமணியைச் சந்திக்கிறான் (மிஷ்கின்). பாஸ்கரமணி மனநிலை பாதிக்கப்பட்டவன். ஆனால் அவனுக்கு நல்ல மனசு!

இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக உணர்கிறார்கள். பயணம் தொடர்கிறது. வழியில் பல சுவாரஸ்யமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள். ஒரு செக்ஸ் தொழிலாளி (ஸ்னிக்தா) உடன் சேர்ந்து கொள்கிறாள்.

ஒருவழியாக சிறுவனின் தாய் இருக்கும் கிராமத்துக்குப் போய் ஆளுக்கொரு பக்கம் வீட்டைத் தேடுகிறார்கள். ஒரு வீட்டில் அந்தப் பெண்ணைப் பார்த்துவிடுகிறான் பாஸ்கரமணி. அவளோ ஒரு புதிய குழந்தை, புதிய கணவன் என புதிய வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டிருக்கிறாள். பாஸ்கரமணி தான் வந்த விஷயத்தை சொன்னதும், அவன் காலில் விழுந்து கதறும் அந்தப் பெண், எக்காரணத்தைக் கொண்டும் தான் இருக்கும் இடத்தை சிறுவனுக்கு சொல்ல வேண்டாம் என்றும், அதற்காக எவ்வளவு பணம் நகையும் தரத் தயாராக இருப்பதாகவும் கெஞ்சுகிறாள்.

அங்கிருந்து அமைதியாக வெளியேறும் பாஸ்கரமணி, சிறுவனின் தாய் அங்கே இல்லை என்று கூறிவிட்டு, தனது சொந்த ஊருக்கு சிறுவனை கூட்டிப் போகிறான். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட தனது தாயைப் பார்க்கிறான். அவளை ஒரு ஹோமில் சேர்க்கிறான். பின்னர் சிறுவனும், பாஸ்கரமணியும், அந்த முன்னாள் செக்ஸ் தொழிலாளியும் பயணத்தைத் தொடர்கிறார்கள். அப்போது வழியில் தன் தாய் இன்னொரு குழந்தை, கணவனுடன் காரில் பயணிப்பதைப் பார்த்துவிடுகிறான் சிறுவன். தன் தாய் இனி வரமாட்டாள் என்ற உண்மை புரிகிறது. அந்த செக்ஸ் தொழிலாளியையே தாயாக ஏற்றுக் கொண்டு புதிய வாழ்க்கையைத் துவங்குகிறான்.

பாஸ்கரமணி மனநிலை தெளிந்து பலூன் விற்க ஆரம்பிக்கிறான்…

– இது நந்தலாலா!

உண்மை என்னவென்பதைச் சொல்லத்தான் இந்தப் பதிவு. இன்னொன்று மிஷ்கினுக்கு மற்றவர்களை குறை கூறும் தகுதி இல்லை என்பதைப் புரிய வைக்கவும் இதைச் சொல்கிறோம். மற்றபடி, நந்தலாலா எடுக்கப்பட்ட விதம், இசை என பலவற்றிலும் தரமான படம்தான்.

-படத்தின் விமர்சனத்தை பிறகு தருகிறோம்.

குறிப்பு 1: இந்தப் படத்தை ரஜினிக்கு போட்டுக்காட்டும் முயற்சியில் இருக்கிறார்கள் மிஷ்கினும் அய்ங்கரன் நிறுவனமும்!

குறிப்பு 2: தனது முந்தைய படங்களான சித்திரம் பேசுதடி, அஞ்சாதேவைப் போல இந்தப் படத்தையும் பத்திரிகையாளர்கள் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த இரு படங்களும் தான் எடுத்த கீழ்த்தரமான படங்கள் என்றும், இந்த மாதிரி படங்களைத்தான் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் விரும்புகிறார்கள் என்று சில தினங்களுக்கு முன் இதே மிஷ்கின் சொன்னது நினைவிருக்கலாம்!

-வினோ
9 thoughts on “நந்தலாலா Vs கிகுஜிரோ!

 1. ganesh

  காப்பி அடிக்கிறதுல என்ன தப்பு இருக்கு …
  அதுக்குன்னு அவருக்கு சரக்கே இல்லைங்கிற மாதிரி மேம்போக்கா சொல்லக்கூடாது . He is very much talented guy.

 2. karthik

  @கட்டுரை ஆசிரியர்
  //இந்த மாதிரி படங்களைத்தான் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் விரும்புகிறார்கள் என்று சில தினங்களுக்கு முன் இதே மிஷ்கின் சொன்னது நினைவிருக்கலாம்!///

  மிஸ்கின் அவர்கள் அப்படி சொன்னது தவறான அர்த்தத்தில் இல்லை நண்பரே. இன்னும் தான் சிறப்பான படங்களை தரவேண்டும், ரசிகர்களின் ரசனை உயர வேண்டும் என்பது தான். அத்தனைக்கும் அவர் மட்ட்ரவர்களின் படத்தை குறை சொல்லவில்லை. இதுவும் ஒரு விதத்தில் தன் அடக்கம் தான்.

 3. Joe

  //
  சுமோ சண்டைக்காரர்கள் மாதிரி குண்டாக இருவர் எதிர்ப்படுகிறார்கள்
  //
  அந்த ரெண்டு பைக்கர்களில் ஒருவர் கொஞ்சம் குண்டு, இன்னொருவர் படு ஒல்லியாக இருப்பாரே? சுமோ வீரர்கள் எல்லாம் முதல் பைக்கர் போல ரெண்டு, மூன்று மடங்கு இருப்பார்கள்.

 4. KICHA

  /உண்மை என்னவென்பதைச்
  சொல்லத்தான் இந்தப் பதிவு.
  இன்னொன்று மிஷ்கினுக்கு மற்றவர்களை குறை கூறும்
  தகுதி இல்லை என்பதைப் புரிய
  வைக்கவும் இதைச் சொல்கிறோம் .
  மற்றபடி,
  நந்தலாலா எடுக்கப்பட்ட விதம்,
  இசை என பலவற்றிலும் தரமான
  படம்தான் ./

  IDHUDHAN VINO!
  UNGA NERMAI PUDICHIRUKKU 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *