BREAKING NEWS
Search

ரஜினி… நட்பால் உயர்ந்தவர்; நட்பை உயர்த்தியவர்!

ரஜினி… நட்பால் உயர்ந்து, அந்த நட்பை உயர்த்தியவர்!

ட்புக்கு மிகச் சிறந்த உதராணமாக சூப்பர் ஸ்டார் ரஜினியைத்தான் குறிப்பிடுவார்கள். நட்பால் உயர்ந்து, அந்த நட்பை உயர்த்தியவர் ரஜினி.13raj2

நட்பின் வலிமை, ஆத்மார்த்தமான அன்பின் பெருமை உணர்ந்த யாரும், வாழ்க்கையில் எத்தனை துயரத்தைச் சந்தித்தாலும் நிலைகுலைந்து போக மாட்டார்கள்.

இதை நிஜவாழ்க்கையில் பலரும் உணர்ந்திருப்பார்கள்.

நல்ல நட்பு எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டது.

தனது நட்பு வட்டம் குறித்து ஒருமுறை சூப்பர் ஸ்டார் ரஜினி பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியிலிருந்து…

“நானும், ராஜ்பகதூரும் பெங்களூரில் ஒன்றாக வேலை பார்த்தோம். நான் கண்டக்டர். அவன் டிரைவர்.

ராஜ்பகதூரிடம் எனக்குப் பிடித்த குணம், அவன் யதார்த்த மனிதன். வாழ்க்கையில் பெரிய ஆசைகளோ, ‘இதைச் சாதிக்க வேண்டும், அதைச் சாதிக்க வேண்டும்’ என்ற விருப்பமோ இல்லாதவன்.

ராஜ் பகதூருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. எனக்கு விருப்பம் இல்லை. “குருசேத்திரம்” என்ற நாடகத்தை ராஜ்பகதூர் போட்டான். அதில் அவனுக்கு கிருஷ்ண பகவான் வேடம். உருவத்துக்கும், அழகுக்கும் பொருத்தமான வேடம்.

அப்போது நான் குண்டாக இருந்தேன். என்னை துரியோதனனாக நடிக்கச் சொன்னான்.

“இதோ பாரப்பா! நமக்கு நடிப்பெல்லாம் வராது” என்றேன்.

“நல்ல உடம்பு இருக்கு. கவர்ச்சியான கண் இருக்கு. மீசையும், கிரீடமும் வச்சு சும்மா வந்து நில்லு. கை தட்டல் விழும். கவலைப்படாதே!” என்றான், ராஜ்பகதூர்.

“சரிப்பா. உனக்காகப் பண்றேன். நல்லா வரலேன்னா என்னைத் திட்டக்கூடாது” என்றேன்.

முதன் முதலாக என்னை நாடக மேடைக்கு அழைத்துச்சென்ற பெருமை ராஜ்பகதூரையே சேரும்.

முதல் நாள் ஒத்திகைக்குச் சென்றேன். பாடி நடிக்க வேண்டிய நாடகம் அது. “எனக்குப் பாட வராது. மாஸ்டர் பாடட்டும். நான் வாயசைக்கிறேன்..” என்று கூறிவிட்டு, வசனத்தை மட்டும் ராஜ்பகதூரிடம் இருந்து பெற்றுக்கொண்டேன். நன்றாக மனப்பாடம் செய்தேன்.

சிவாஜி ஸ்டைல், என்.டி.ராமராவ் ஸ்டைல் இரண்டையும் கலந்து, ஒத்திகையில் நடித்தேன். அது புதுமையாக இருந்ததால், கூடியிருந்தவர்கள் பெரிதும் ரசித்தார்கள்.

அன்று ஒத்திகை முடிந்தவுடன் ஒரு ஆச்சரியமான, அதிசயமான நிகழ்ச்சி நடந்தது. “இன்று இவனோடு சேர்ந்து நான் சாராயம் சாப்பிடப்போகிறேன்” என்றான், ராஜ்பகதூர். சொன்னது போலவே, வாழ்க்கையில் முதல் தடவையாக என்னுடன் சேர்ந்து சாராயம் குடித்தான்.

“சாராயக்கடைக்கே வராதவன், இன்று வந்திருக்கிறேன் என்றால், அது உனக்காக – உன் நடிப்புக்காக! என்னம்மா நடிச்சே நீ! உள்ளே நுழைந்தவுடனே ஒரு சிரிப்பு சிரிச்சே பாரு! அருமை. இவ்வளவு திறமையை வச்சிக்கிட்டு நடிக்கமாட்டேன்னு சொன்னியே! நீ தொடர்ந்து நடிக்கணும்…” என்றான், ராஜ்பகதூர்.

அடுத்த நாளும் என்னுடைய நடிப்புத் திறமையை மற்றவர்களிடம் சொல்லிப் பாராட்டினான். என் உள்ளே இருந்த நடிப்புக் கலையை வெளியே கொண்டு வந்தவன் அவன்.

நாடகம் அரங்கேறியது. முடிந்ததும் ‘துரியோதனனாக நடித்தவரைப் பார்க்க வேண்டும்’ என்று சுமார் 50 பேர் காத்திருந்தனர். இதில் ராஜ்பகதூருக்கு ரொம்ப சந்தோஷம்.

“டேய் நான் நிச்சயமா சொல்றேன். படத்துல நடிக்க முயற்சி பண்ணு…” என்று அன்று ஆரம்பித்தவன், நான் நடிகனாக ஆகும்வரை ஓயவில்லை.

பிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பிய ராஜ் பகதூர்!

மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து நடிப்புப் பயிற்சிக்கு விளம்பரம் வந்தவுடன், வேறொரு நாடகத்தில் இருந்த என்னை அவசர அவசரமாக நடராஜ் ஸ்டூடியோவுக்கு அழைத்துப் போய் போட்டோ எடுத்தான். முதல் தடவையாக என் உருவத்தை அவ்வளவு பெரிய சைசில் பார்த்தேன். மூன்றுவிதமான போஸ்களை அவனே சொல்லி புகைப்படம் வந்ததும் என்னைப் பாராட்டி பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் எப்படியாவது சேர்ந்துதான் ஆகவேண்டும் என்று சென்னைக்கு அனுப்பி வைத்தான்.

“பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கணும்னா பணம் வேண்டுமே என்ன செய்யறது?” என்றேன்.

“என்னால் முடிந்த உதவியை உனக்குச் செய்கிறேன். நீ இப்படியே இருந்தால் டிரைவரா, கண்டக்டரா மட்டும்தான் இருப்பாய். வருஷத்துக்கு ஒரு தடவை இன்கிரிமென்ட், டி.சி., செக்கிங் இன்ஸ்பெக்டர் அவ்வளவுதான். நமக்குள் யாராவது ஒருவன் முன்னுக்கு வந்தால் நமக்குப் பெருமை. நம்மகூட இருந்தவன் இவ்வளவு நல்லா இருக்கான்னு சொல்லிக்கலாம பாரு…”, என்றான்.

நான் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்த பிறகு, மாதத்துக்கு 120 ரூபாய் அனுப்பி விடுவான். அதாவது அவன் வாங்கிய 320 ரூபாய் மாதச் சம்பளத்திலிருந்து!

நான் பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்ஸ்டிட்யூட்டில் படிக்க வரும்போது அவன் கழுத்தில் போட்டிருந்த செயினைக் கழற்றி என் கழுத்தில் அணிவித்து, “போட்டுக்கோ! உனக்கு உபயோகமாக இருக்கும்” னு சொன்னான்.

“இது என்ன தாயத்தா உபயோகம் ஆகும்னு சொல்றே!” கிண்டலாகக் கேட்டேன். செயின் போட்டா நல்லா இருக்கும்னு போட்டுவிட்டான்.

நான் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கிறபோது ராஜ்பகதூர் அனுப்புகிற பணம், அப்பப்ப அண்ணன் அனுப்புகிற பணமெல்லாம் இருபதாம் தேதிக்குள் தீர்ந்து விடும். அப்புறமென்ன! தெரியாத ஊரில், தெரியாத மக்களிடம் கடன் கேட்க முடியுமா? அதனால் செயினை இருநூறு ரூபாய்க்கு அடகு வைத்துவிடுவேன். பணம் வந்தவுடன் செயினை மீட்பேன். இப்படியே ஒவ்வொரு மாதமும் நண்பன் சொன்னதுபோல் செயின் உபயோகமாகத்தான் இருந்தது.

அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு படங்களில் அந்த செயின் போட்டு நடித்தேன். பிறகு ஒரு படத்தின் சண்டைக் காட்சியின்போது, நட்புக்கு அடையாளமான அந்த செயின் தொலைந்து போய்விட்டது.

“மூன்று முடிச்சு” படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினான் ராஜ்பகதூர். அவனே நடித்த மாதிரி அவன் முகத்தில், பேச்சில் ஒரு சந்தோஷம் இருந்தது. அதன் பிறகு நான் பிசியாகிவிட்டேன். நேரம் கிடைக்கும்போது பெங்களூருக்கு செல்வேன். ராஜ் வீட்டுக்குப் போவேன். நான் கண்டக்டராக இருந்தபோது அவன் வீட்டில் அவனுக்கென்று இருக்கும் அறையில்தான் நான் தூங்குவேன். சென்னையிலிருந்து எப்போது போனாலும் அவன் வீட்டில் அந்த அறையில் உட்கார்ந்து பேசுவோம்.

உதவ ஆசைப்படுகிறேன்…

என்னைப் பற்றியும், என் உடல் நிலைப் பற்றியும் அதிகம் விசாரிப்பான். நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல விதங்களில் உதவி செய்து ஊக்கமூட்டிய ராஜ்பகதூருக்கு உதவி செய்ய நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். அவனிடம் கேட்டபோதெல்லாம், “இல்லேப்பா. எனக்கு என்ன தேவையோ அதை ஆண்டவன் கொடுத்திருக்கிறார். அப்படித் தேவைப்படும்போது உன்னிடம் வருகிறேன், செய்..” என்று கடந்த பல வருடங்களாக என்னிடம் எந்த உதவியும் கேட்கவில்லை.annamalai

ராஜ்பகதூருக்குத் திருமணம் நடந்தபோது நானே அவனை வற்புறுத்தி ஒரு வீடு வாங்க உதவினேன். இப்போது ரொம்ப நிம்மதியாக இருக்கிறான்.

முன்பெல்லாம் அடிக்கடி சென்னைக்கு வந்து என்னைப் பார்க்க வருவான். நான் ஷூட்டிங் போய்விடுவதால் வருவதைக் குறைத்துக்கொண்டான். எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது பார்க்க வந்திருந்தான்.

“உன் உடலை மூலதனமாக்கி இவ்வளவு பணம் சம்பாதிச்சு, அதுக்கப்புறம் வாழ்க்கையை அனுபவிக்க உடம்பு சவுகரியமாக இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்? வேலையோடு உன் உடம்பையும் நல்லா பார்த்துக்கோ. நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். பேரும் புகழும் இருக்க வேண்டும். நீ ஆர்ட்டிஸ்ட்டாக மட்டும் இருக்காமல் மனிதாபிமானமிக்க மனிதனாக எப்போதும் இருக்க வேண்டும். அதற்காக நான் சந்தோஷப்படுவேன். உடம்பைப் பார்த்துக்கொள்…” என்று ஆறுதல் சொன்னான்.

“நீ எனக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறாய். இன்னும் அதே வேலையில் இருப்பதைப் பார்த்தால் மனதுக்கு கஷ்டமா இருக்கு. நீ என்கூட இருந்தா எனக்கு ஒரு பரஸ்பர உதவியாக இருக்கும்…” என்றேன்.

‘டிரைவராக வரட்டுமா?’

அப்போது அவனுக்கு கல்யாணம் ஆகவில்லை. அவன் என்னுடனேயே இருந்தால், எனக்கு மன அமைதி அதிகம் கிடைக்கும் என்று எண்ணினேன்.

“நான் உனக்கு டிரைவராக வருகிறேன். பரவாயில்லையா?” என்று கேட்டான்.

“டிரைவராக, மானேஜராக, செகரட்டரியாக – இல்லை எனக்கு முதலாளியாகக் கூட வரலாம்!” என்றேன்.

அவன், “டிரைவராக வருகிறேன். ஜாலியாக இருக்கலாம்” என்றான். எனக்கு ரொம்ப சந்தோஷம்.

பத்து நாள் கழித்து ராஜ்பகதூர் வந்தான். “இல்லேப்பா. டிரைவராக வர்றது எனக்குப் பிடிக்கலே”ன்னு சொன்னான்.

நான் இப்போதும் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் கண்டு, மகிழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான நண்பன் ராஜ்பகதூர், என்று முடித்துள்ளார் ரஜினி அந்தப் பேட்டியை.

ராஜ் பகதூர்… திரையில்!

தன்னை நடிகனாக்கிய ராஜ்பகதூரை நடிகனாக்கி அழகு பார்க்க ரஜினி விரும்பினார்.

தான் தயாரித்த “வள்ளி” படத்தில் ஒரு வேடம் கொடுத்தார். அந்தப் படத்தில் பால்காரியாக வரும் பல்லவி, “என் கணவர் ராணுவத்தில் இருக்கிறார்” என்று சொல்லி, தன்னைச் சுற்றி வரும் ஆண்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வார்.

திடீரென்று ஒரு நாள் அந்த ராணுவ வீரர் தன் மனைவி பல்லவியைத் தேடி வருவார்.

அந்த ராணுவ வீரராக நடித்தவர்தான் ராஜ்பகதூர்!13raj1

இதைத் தவிர சந்திரமுகியில் வரும் சூப்பர் ஹிட் தேவுடா டேவுடாவில் ‘ரிப்பீட்டேய்’ சொல்லும் மூவரில் ஒருவர் ராஜ் பகதூர்.

குசேலன் திரைப்படத்தில் கிட்டத்தட்ட தன் சொந்த அனுபவத்தையே மேடையில் ரஜினி பேசிக் கொண்டிருக்க, கூடியிருக்கும் மக்களோடு கண்கலங்க நின்று கேட்டுக் கொண்டிருப்பார் ராஜா பகதூர்.

ரஜினி இதையெல்லாம் வெளியில் சொல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அவர் சொல்வதால், அந்த உறவுக்கே புதிய பரிமாணமும் மரியாதையும் கிடைக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பர்களுக்குள் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் மனோபாவம் வளர்கிறது.

இந்த மனிதத்தன்மை பல்கிப் பரவ வேண்டும் என்பதுதான் திரும்பத் திரும்ப இந்தச் சம்பவங்களை எடுத்துச் சொல்வதன் பின்னணி!

குறிப்பு:  தனது கடந்த காலத்தையும் நட்பின் பெருமையையும் ரஜினி கண்கலங்க நினைவு கூறும் குசேலன் படக் க்ளைமாக்ஸ் காட்சி இது.  இரும்பு இதயத்தையும் இளகச் செய்து கண்ணீராய் வெளிப்படுத்தும் நெகிழ்வான காட்சி. காரணம் அதில் ரஜினி நடிக்கவில்லை… அவராகவே மாறிவிட்டிருப்பார்.

அதில் ‘நான் இந்த உலகத்தைப் பார்த்ததே அவன் கண்களாலதான்!’ என ரஜினி கூறும் கட்டத்தில் ராஜ் பகதூர் தோன்றுவார். அது ரஜினி தன் நட்புக்கு செய்த மரியாதை!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
9 thoughts on “ரஜினி… நட்பால் உயர்ந்தவர்; நட்பை உயர்த்தியவர்!

 1. கிரி

  வினோ நண்பர்கள் தினத்திற்கு சூப்பர் ஸ்டாரை விட்டால் பொருத்தமான நபர் இல்லை.. அருமையான கட்டுரை..

  நண்பர் வினோக்கும் மற்றும் என்வழி வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 🙂

 2. harisivaji

  நட்பை புனிதத்தை உணர்த்தும் காவியம்
  சில நயவஞ்சர்களால் அவர்களின் சூளிசியால்
  பெரும்பாலான மக்களின் பார்வை படமால் போய்விட்டது

 3. r.v.saravanan

  vino avargalukkum anaithu envazhi nanbargalukkum enadhu

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  ungal unbu
  kudandhai r.v.saravanan

 4. பாசகி

  இந்த கிளைமாக்ஸுக்கே 1000 நாள் ஓடியிருக்கவேண்டிய படம்… பச்சோந்தி மீடியாக்களும் பணத்தாசை பிடிச்ச ஜென்மங்களும் நாசமாய் போகட்டும்.

  வினோ-ஜி க்கும் மற்ற தோழர்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

 5. Jayaprakash

  There is a Question and Answer section in CBSE VI Std Syllabus describing about the friendship between Rajini and Raj Bahadur. I think it is a great achievement by our Superstar.

 6. Suresh கிருஷ்ணா

  மீண்டும் கண்களைக் குளமாக்கி விட்டது தலைவரின் அந்த க்ளைமாக்ஸ் காட்சி…
  மலையாளத்தில் மம்முட்டி நடித்திருந்தார்… தமிழில் நம்ம தலைவர் வாழ்ந்திருப்பார்!

  ஹேட்ஸ் ஆப் தலைவா… உங்களுக்கு நிகர் நீங்களே!

  -Suresh கிருஷ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *