BREAKING NEWS
Search

நடிகர் சிங்கமுத்து கைது… புழல் சிறையில் அடைப்பு!

நடிகர் சிங்கமுத்து கைது… புழல் சிறையில் அடைப்பு!

சென்னை: நடிகர் வடிவேலுவின் மானேஜர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் சிங்கமுத்து கொலை மிரட்டல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டு 13 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

வடிவேலுவும் சிங்கமுத்துவும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். பல படங்களில் இருவரும் இணைந்து காமெடி செய்துள்ளனர்.

ஆனால் நில விவகாரம் மற்றும் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இருவரும் பரம விரோதிகளாகி வரிந்து கட்டிக்கொண்டு சண்டை போட்டார்கள். இருவரும் ஒருவர் மீது, ஒருவர் புகார் கூறினார்கள்.

வடிவேலு, சிங்கமுத்து மீது ஏற்கனவே 3 வழக்குகள் தொடர்ந்துள்ளார். 2 வழக்குகள் போலீஸ் விசாரணையிலும், ஒரு வழக்கு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டிலும் விசாரணையில் உள்ளன.

ரூ.1 கோடி நில மோசடி செய்து விட்டதாக வடிவேலு கொடுத்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு ஒன்றை சிங்கமுத்து மீது பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் சிங்கமுத்து முன்ஜாமீன் வாங்கி விட்டார்.

அடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டில் கிரிமினல் வழக்கு ஒன்றையும் வடிவேலு, சிங்கமுத்து மீது போட்டுள்ளார். 3-வதாக கடந்த மாதம் வடிவேலுவின் மானேஜர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சிங்கமுத்து மீதும், படஅதிபர் கண்ணன் மீதும் சென்னை விருகம்பாக்கம் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் சிங்கமுத்து கைதாகாமல் தப்பித்து முன் ஜாமீன் பெற்று விட்டார்.

திடீர் வழக்கு

இந்த நிலையில் நேற்று காலையில் நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கர் மீண்டும் ஒரு புகார் மனுவை விருகம்பாக்கம் போலீசில் கொடுத்தார். சென்னை சாலிகிராமம் வேதவல்லி தெருவில் உள்ள வடிவேலுவின் அலுவலகத்தில் இருந்த போது, சிங்கமுத்து நேரில் வந்து தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் சங்கர் தெரிவித்து இருந்தார். இந்த புகார் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் சிங்கமுத்து மீது 2-வதாக ஒரு கொலை மிரட்டல் வழக்கை பதிவு செய்தனர்.

இந்த புகார் கொடுக்கப்பட்டதும், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதும், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இதுபோல் புகார் கொடுக்கும்போது வடிவேலு பத்திரிகைகளுக்கு தெரிவிப்பது வழக்கம். நேற்று அதுபோல் தெரிவிக்கவில்லை.

நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னை ராமாவரம், கோத்தாரி நகர் 8-வது தெருவில் உள்ள தனது வீட்டில் மதியம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது சிங்கமுத்து வீட்டுக்கு போலீஸ் படையினர் சென்று கைது செய்தனர். கைதான தகவலை கூட போலீசார் மாலை 4.30 மணி வரை வெளியில் கசிய விடவில்லை. சிங்கமுத்துவை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு கொண்டு சென்றபோதுதான் பத்திரிகைகளுக்கு தகவல் பரவியது.

மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மலர்விழி முன்பு சிங்கமுத்துவை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். வருகிற 28-ந்தேதி வரை சிங்கமுத்துவை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

முதல் வகுப்பு வேண்டும்

கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது சிங்கமுத்து, தான் வருமானவரி கட்டுபவர் என்றும், எனவே தனக்கு ஜெயிலில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தார். அவர் சார்பில் ஆஜரான வக்கீல் அறிவழகன் உடனடியாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அதன் பின்பு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, சிங்கமுத்து புழல் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். இரவு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது! – வடிவேலு

சிங்கமுத்து கைது பற்றி வடிவேலு கருத்து தெரிவிக்கையில், “சட்டம், தன் கடமையைச் செய்திருக்கிறது. என்னை சிங்கமுத்து ஏமாற்றி மோசடி செய்த வழக்கு பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து அவர்களின் கடமையை இப்போது செய்திருக்கிறார்கள். காவல்துறைக்கு நன்றி…” என்று கூறியுள்ளார்.




One thought on “நடிகர் சிங்கமுத்து கைது… புழல் சிறையில் அடைப்பு!

  1. Srinivas

    டயலாக் பிரம் மருதமலை

    சிங்கமுத்து : சரி சரி சண்ட போடாதீங்கப்பா!! 🙂

    வடிவேலு : சண்ட போன்ற அளவுக்கு இவனும் நானும் ஒன்னா!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *