BREAKING NEWS
Search

துரோகமும் வஞ்சமும் தமிழனின் கூடப்பிறந்தது!

ஒரு துரோக சினிமா தயாரகிறது!

மானமும் வீரமும் மட்டுமல்ல… துரோகமும் வஞ்சமும் கூட தமிழனின் கூடப் பிறந்த குணங்கள்தான் என்று சொல்ல வைக்கின்றன, ஈழப்போருக்குப் பின்னர் தெரிய வரும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள்.

தமிழினத்தின் விடியலுக்கு தேசியத் தலைவர் பிரபாகரன் பட்ட பாடுகளையெல்லாம், ரொம்ப சுலபமாக காட்டிக் கொடுத்து கருவறுப்பு வேலை செய்துள்ளனர், அவரை தலைவர் என்று சொல்லி பிரமாதமாய் நடித்து வந்தவர்கள்.

இலங்கையின் வடக்குப் பகுதி காடுகள் அதிர்கின்றன, மீண்டும் யுத்தம் பிறக்கிறது, இதோ புதிய படை புறப்பட்டுவிட்டது, அதை நேரில் பார்த்த நிருபரின் அனுபவம் என புதிய கதைகள் முளைத்த அடுத்த சில மணி நேரங்களில், அதன் பின்னணி பற்றிய திடுக்கிடும் உண்மைகள் வந்தவண்ணம் உள்ளன.

இதுபற்றிய ஆனந்த விகடன் கட்டுரையைத் தருகிறோம்:

ராஜபக்சே டைரக்ஷனில் டூப்ளிகேட் புலி!

மிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய ‘ராம நாமம்’ போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். ‘கிளம்பிட்டார்ல எங்க ஆளு’ என்று ஒரு பிரிவும், ‘இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க’ என்று இன்னொரு குழுவும் சொல்ல, ஈழ விவகாரத்தில், இன்னொரு விவகாரமாகக் கிளம்பி இருக்கிறார் கேணல் ராம்!

“நான்காம் கட்ட ஈழப் போரில் எங்கள் படையணி ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தது. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, போராட்டத்தின் தேவையை உணர்ந்த நாங்கள், சிதறிக்கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

என்னைக் குறிவைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட போர்க்கள அனுபவத்தின் காரணமாக நான் தப்பித்து வருகிறேன். எங்கள் படையணியினரின் வீரமும், மன உறுதியும், தாய் நாட்டின் விடுதலை வேட்கையும்தான் எங்களை இயங்கவைக்கிறது. சிங்கள ராணுவத்துக்கு நாங்கள் சவாலாக இருந்து வருகிறோம்!”- என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தளபதியாக தன்னைத்தானே பிரகடனப்படுத்தி வரும் கேணல் ராம் என்பவர் அறிவித்திருக்கிறார். இவரைப் பார்த்து யாருமே அதிர்ச்சி அடையவில்லை.

ஆனால், ‘இவருக்குப் பின்னால் யார்?’ என்ற சந்தேகம் மட்டுமே மிச்சமாகி இருக்கிறது.

ராஜபக்சே டைரக்ஷனில் தயாராகும், ‘டூப்ளிகேட் புலி’ என்ற துரோக சினிமாவின் தொடக்கமாகவே, இதை விவரம் அறிந்தவர்கள் உணர்வார்கள்.

2009-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனின் மர்மத்துக்குப் பிறகு தடியெடுத்தவர் எல்லாம் தமிழ்ப் புலித் தலைவராகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். ‘பிரபாகரன் என்னைத்தான் அடுத்த தலைவராக அறிவித்துப் போனார்’ என்று சொன்ன கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன், ‘கைது’ செய்யப்பட்டு தனி பங்களாவில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

‘மக்கள் விடுதலை ராணுவம்’ என்ற அமைப்பு தங்களைப் புதிய போராளிகளாக, தனி நாட்டுக்காகப் போராடுவதாக அறிவித்தது. ‘ஆதரவாளர்களைக் கண்டுபிடிக்க செய்யப்பட்ட செட்டப்’ என்று அந்தப் பேட்டி அம்பலப்படுத்தப்பட்டது. புலிகளின் புதிய ஊடகத் துறை – அதிகாரபூர்வ இணையதளம் என்ற பெயரில் அடுத்ததாக ஒரு பரபரப்பு கிளம்பியது.

அது யார் என்று விசாரித்தால், 21 ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கத்தைவிட்டு வெளியேறி, உளவு அமைப்புகளின் இன்ஃபார்மராக மாறிவிட்ட குண்டப்பா, அதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது… கேணல் ராம்!

கிழக்கு மாகாணத்தை ராணுவம் கைப்பற்றிய பிறகு, அந்த மாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சிறப்புத் தளபதியையும் தாக்குதல் தளபதியையும் 2008-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரன் நியமித்தார். மட்டக்களப்புக்கு கேணல் கீர்த்தி, திரிகோணமலைக்கு கேணல் வசந்தன், அம்பாறைக்கு கேணல் ராம் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். பிரபாகரனுக்குக் கீழ் அணி வகுத்த அத்தனை தளபதிகளும், பிரிகேடியர் பால்ராஜ் மறைவைத் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, கீர்த்தி, வசந்தன் இருவரை மட்டுமே வரச் சொல்லி இருந்தார் பிரபாகரன். ராமுவுக்கு அழைப்பு இல்லை.

கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு, கிழக்கு மாகாணத்தில் தனித்துவிடப்பட்டார் ராம். ”கிழக்கு மாகாணத்தில் எஞ்சியிருக்கும் புலிகள், அரசாங்கத்திடம் சரணடைய என்னுடைய உதவியை நாடி வருகிறார்கள். ராம் என்று அறியப்பட்ட தலைவர், கடந்த சில தினங்களாக என்னைத் தொடர்புகொண்டு வருகிறார்” என்று கருணா அளித்த பேட்டி ராமை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. கருணாவின் முயற்சியால், ராம் சரணடைந்ததாகத் தகவல் கள் வெளியாகின.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து ராம் தப்பிவிட்டதாக அடுத்த தகவல் வந்தது. ராணுவத்தின் வசம் இருந்து எவரும் எளிதில் தப்பிவிட முடியாது. அதுவும் கேணல் பொறுப்பில் இருந்தவரை, ‘நாலாவது மாடி’யில் வைத்து நையப்புடைத்து விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ராம் மட்டும் ‘தப்பினார்’.

தலைமறைவான ராம், அடுத்த சில நாட்களில் தன்னைப் புதிய தளபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். சந்தேகம் அதிகமானது. மாவீரர் தினத்தன்று உரையும் நிகழ்த்தி, அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார். ”இந்தச் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும். இதற்காக, நாம் எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்யத் தயாராக உள்ளோம். அத்துடன், ஆயுத வன்முறைகளையும் முற்றாகக் கைவிடத் தயாராக உள்ளோம்” என்று பகிரங்கமாக அறிவித்தார் ராம்.

இவை அனைத்தும் கடந்த நவம்பர் மாதம் நடந்தவை. தலைமறைவானவர், தலைமறைவாகத்தான் முடியுமே தவிர, பின்னால் குயிலோசை கேட்க… மாவீரர் உரையாற்ற முடியாது. அவர் பேசி முடித்த சில நிமிடங்களில் முக்கியமான அனைத்து இணைய தளங்களுக்கும் அப்பேச்சு அனுப்பி வைக்கப்பட்டது. அதுவும், அந்த பி.டி.எஃப். ஃபைலுக்கு ‘மகா வீர’ என்ற சிங்கள வார்த்தையைக் குறிச் சொல்லாக வைத்து இருந்தார்கள். ‘இது நம்முடைய நிலம். இங்கு அந்நியன் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறான்’ என்பதுதான் புலிகள் இதுவரை வைத்த குற்றச்சாட்டு. முதன்முதலாக ராம், தமிழர்களைச் சிறுபான்மை இனம் என்று சொல்லிக்கொண்டார். ‘தமிழீழ மனோபாவம்கொண்டவரால் அப்படி ஒரு பேச்சை எழுதியிருக்கவே முடியாது’ என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.

ஆயுதம் உள்பட அனைத்தையும் விட்டுவிட்டு போராடப்போவதாக பகிரங்கமாக அறிவித்த அந்த ராம், இப்போது புலிப் படையை உருவாக்கி காட்டுக்குள் போராடிக்கொண்டு இருப்பதாகக் கதை கட்டப்படுகிறது. இதற்குப் பின்னணியில் சிங்கள உளவுத் துறையின் கைங்கர்யம் அதிகமாக இருப்பதாகவே தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பேச்சு.

பொறிக்குள் தேங்காய் சில்லைவைத்து எலி பிடிக்கும் தந்திரம்போல, ராம் என்ற ஒருவரைக் காட்டி யாரெல்லாம் புலி ஆதரவாளர்கள், நிதி உதவி எங்கிருந்து கிடைக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சிங்கள உளவுத் துறை திட்டமிட்டது. ”ராம் தன்னைத் தலைவராகப் பிரகடனப்படுத்தியதும், புலிப் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள், ராமைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். வர மறுத்த ராம், குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு அவர்களை வரச் சொன்னார். புலிகள் போகவில்லை. மாறாக, ராமுடன் இருக்கும் இரண்டு பேர் பெயரைச் சொல்லி, அவர்களையாவது எங்களிடம் அனுப்பிவைக்கக் கேட்டனர். அதற்கும் ராம் உடன்படவில்லை. பொதுவாகவே, ராணுவக் கட்டுப்பாட்டில் சிக்கியவர்கள்தான் தங்களது இடத்துக்கு மற்றவர்களை அழைப்பார்கள்.

ராம் மீது அதன் பிறகுதான் சந்தேகம் வந்தது. அவரை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று புலிப் புலனாய்வினர் அறிவித்தார்கள்” என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

புலிகளைத் தலையெடுக்கவிடாமல் தடுப்பது, அவர்களது வெளிநாட்டுக் கட்டமைப்பை உடைப்பது, புலம் பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர் அரசியலைச் சிதைப்பது… ஆகிய மூன்று இலக்குகளை சிங்களப் புலனாய்வுத் துறை தனது திட்டமாக வைத்துள்ளது. அதற்கு ராம் ‘கையாள்’ ஆக்கப்பட்டு உள்ளார்.

ராம், ஆயுதப் பயிற்சி பெற்றது தமிழகத்தில்தான். 1982-ல் கொளத்தூர் முகாமில்தான் பயிற்சி பெற்றதாகச் சொல்லி இருக்கிறார். உண்மை என்னவெனில், புலிப் படையின் 9-வது பிரிவில் பயிற்சி பெற்றவர் ராம். முதல் இரண்டு பிரிவுகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்தது, 3, 6, 10 பிரிவுக்கு கொளத்தூரிலும், 4,5 பிரிவுக்கு வத்திராயிருப்பு மலையிலும், 7,8,9 பிரிவுக்கு திண்டுக்கல்லிலும் பயிற்சிகள் தரப்பட்டன. அதாவது, தன்னுடைய சுய கதையைக்கூட சுத்தமாகச் சொல்லத் தெரியாத அளவுக்குக் குழம்பி இருக்கிறார் ராம்.

”இவரைவைத்து புலிகள் அமைப்பு மீண்டும் இயங்குவதாகச் சொல்வதன் மூலமாக, இலங்கையை எப்போதும் பதற்றமுள்ள நாடாகவே காட்டிக்கொள்ள ராஜபக்சே விரும்புகிறார். பயங்கரவாதம் நாட்டில் இருக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டியே, தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கிறார்” என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

இது போன்ற தகவலை இங்கு பரப்புவதும் அரசியலுக்குத் தேவையாக இருக்கிறது. 11-வது முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் இந்த மாதம் தடை செய்யப்பட்டு உள்ளது. முற்றாக ஒழிக்கப்பட்ட இயக்கத்தை ஏன் தடை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழாமல் இருக்க… இயக்கம் இருப்பதாக போலித் தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இதைவைத்து ஈழம், ஈழ மக்கள் துயரங்கள், அவலங்களைப் பேசுவதையே பயங்கரவாதமாகப் பார்க்கத் தூண்டும் காரியத்துக்கு ராம் பயன்படுத்தப்படுகிறார். நிஜப் புலிக்குப் பயந்தவர்கள், டூப்ளிகேட் புலியைக் காட்டிப் பயமுறுத்துகிறார்கள்.

‘விழிப்புதான் விடுதலைக்கு முதல் படி’ என்று பிரபாகரன் சொன்னதாகச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் புலம்பெயர் எழுத்தாளர் ஒருவர், ‘எம்முடைய எதிரி, எமது மண்ணில், எமது இடத்திலேயே பிறந்துவிட்டான்’ என்று எழுதியிருக்கிறார்.

வீரன் முளைக்கும்போதே, துரோகியும் துளிர்க்கிறான் என்பார்கள். ஆனால், வீரனின் வெற்றிக்கு முன், துரோகியின் தோல்வி அறிவிக்கப்படும்!

நன்றி: ஆனந்த விகடன்
4 thoughts on “துரோகமும் வஞ்சமும் தமிழனின் கூடப்பிறந்தது!

 1. sakthivel

  புலி பசித்தாலும் புல்லை தின்னாது- (கேண)ல் ராமுக்கு தெரியாதோ ???
  சூரியன் எழும்போது நட்சத்திரங்கள் காணாமல் போய்விடும்.

 2. patrick

  “பிரிகேடியர் பால்ராஜ் மறைவைத் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, கீர்த்தி, வசந்தன் இருவரை மட்டுமே வரச் சொல்லி இருந்தார் பிரபாகரன். ராமுவுக்கு அழைப்பு இல்லை”
  MY 2 QUESTION TO AUTHOR
  1)IF RAM WAS TRIATOR , PRABHAKARAN AND MORE IMPORTANTLY POTTU WILL LEFT HIM ALIVE WHEN HE WAS IN LTTE ITSELF ? I DONT THINK SO
  2)IF SOME ONE HEARD THE LAST SPEECH OF SUSAI , HE REFERED K.P IN HIS SPEECH

  BUT I THINK THEY WENT TO SL SIDE INORDER TO SAVE THEIR LIVES OR THEIR DEAR ONE’S
  MOST OF THE PEOPLE ARE CONFUSED WHOM WE HAVE TO BELIEVE ?
  WHO SAYS PRABHA IS ALIVE , BUT TILL NOW HE IS NOT COME TO LIMELIGHT
  ALL KNOTS WILL BE REMOVED IF PRABHA COMES ALIVE OTHERWISE WE HAVE TO WAIT FOR STRONG LEADER EMERGE FOR EELAM

  ALL THE SUFFERING FOR THE FAMILIES THERE IN EELAM NOT FOR SPECTATORS(OTHERS)

 3. buruhani

  ஒற்றுமை என்ன என்பதே தெரியாதவர்கள்
  பலிக்கு பலி என்று நினப்பவர்கள்.
  ந்ல்லவன் யாரு கெட்டவன் யாருனு தெரியதவர்கள்.
  நடிப்பவர்களையே நம்புபவர்கல்.
  பச்சோந்தி குணம் உள்ளவர்கள்.
  நடிகைகளுகு கோயில் கட்டுவார்கள்
  இவர்களை நம்பியா?தமிழ் ஈழம்.மிச்சம் இருப்பவர்கள் எப்படியேனும் வழ்ந்துட்டு போகட்டும் போய் சொந்தவேலை ஏதாவது இருந்தா போய் பருங்கள் ஐயா.

 4. raj.s

  நக்கீரன் பத்திரிகை காசுகாக கதை எழுதி பிழைக்கும் ஒரு கும்பல் . அவர்களை பற்றி நாம் பெரிதாக கவலை பட தேவை இல்லை. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று அவர்கள் வெளி இட்ட செய்தி , உணர்வை விட கருணாநிதி ஆட்சி எ காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான். பாவம் கோபால், வன்னி காடு என்பது சத்தியமங்கலம் என்று நினைத்து விட்டார் போலும் .வீரப்பன் வைத்து காசு பார்த்தவர்கள் தற்போது ஈழத்து கதை எடுக்க முயற்சிக்குரார்கள் . எதிரி எ விட துரோகி ஆபத்து ஆனவன் . நம்மிடம் துரோகிகள் அதிகம் . விழிப்பு தான் விடுதலை ந முதல் படி என்று சுத்த வீரன் பிரபாகரன் சொன்னதை நினைவு கூறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *