BREAKING NEWS
Search

திரண்ட தமிழர்கள்: பின் வாசல் வழியாக ‘ஓட்டம் பிடித்த’ ராஜபக்சே!

திரண்ட தமிழர்கள்: பின் வாசல் வழியாக ‘ஓட்டம் பிடித்த’ ராஜபக்சே!

லண்டன்: ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் ஆவேச எதிர்ப்பைப் பார்க்க விரும்பாமல் லண்டன் விமான நிலையத்தின் பின்வாசல் வழியாக எஸ்கேப் ஆனார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இலங்கைக்கு அதிபராக இருந்தாலும், சர்வதேச சமூகத்தின் முன் ஒரு போர்க் குற்றவாளியாகவே பார்க்கப்படுகிறார் ராஜபக்சே.

இந்த முத்திரையை அகற்ற அவர் தாமாகவே பல்வேறு நாடுகளுக்கு விருந்தினராகச் செல்கிறார். அங்கெல்லாம் இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல என்கிற ரீதியில் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த முறை பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துக்கு தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார் ராஜபக்சே. போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர் கைதாகக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் முன்பு பயணத்தைத் தள்ளிப் போட்டவர், இப்போது துணிந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் லண்டன் விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய மகிந்த ராஜபக்சேவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும், பெண்களும் திரண்டிருந்தனர்.

வெறும் செல்போன் அழைப்பு மற்றும் குறந்தகவல்கள் மூலம் மட்டுமே இவ்வளவு தொகையான மக்களைத் திரட்டியிருந்தனர் புலம்பெயர் தமிழர்கள்.

நேரம் ஆக ஆக குவியத் தொடங்கிவிட்ட தமிழர் கூட்டம் கண்டு, விமான நிலைய காவல் அதிகாரிகள் செய்வதரியாது திகைத்து நிற்க, தமிழீழ தேசியக் கொடி ஏந்தியவாறு மக்கள் “போர்க் குற்றவாளி மகிந்த… போர்க் குற்றவாளி மகிந்த திரும்பிப் போ”, “இனப் படுகொலைகாரனுக்கு இங்கே என்ன வேலை?” என பெரும் குரல் கொடுத்து போராட்டம் நடத்தினர்.

மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாட்டில், அதை காலில் போட்டு நசுக்கிய ராஜபக்சேவை அனுமதிப்பதா? என்றும் கோஷமெழுப்பினர்.

இந்த கோஷத்தில் ஹீத்ரு விமான நிலையமே பெரும் பரபரப்புக்குள்ளானது.

போராட்டக்காரர்களை முதலில் அணுகிய காவல் துறையினர், இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை. இருப்பினும் உங்களை இப்போது அனுமதிக்கிறோம். அமைதியாக எதிர்ப்பைக் காட்டுங்கள், என்று கூறிவிட்டுச் சென்றனர்.

விமானத்திலிருந்து இறங்கிய ராஜபக்சே, சிறிதுநேரம் உள்ளே இருந்துவிட்டு பின்னர் விமான நிலையத்தின் பின்வாசல் வழியாக அவசர அவசரமாக வெளியேறிவிட்டார்.

வெளியில் கூடியுள்ள தமிழர் கூட்டத்தைப் பார்க்க வேண்டாம் என்று அவர் கூறியதாலேயே மாற்றுப் பாதையில் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மிரண்ட சிங்களர்

கடைசியில் மகிந்தவுடன் விமானத்தில் வந்த சிங்களவர்கள் மட்டும் முன்வாசல் வழியாக வெளியில் வந்தனர். ஆனால் அங்கு திரண்டிருந்த தமிழ் மக்களையும், தமிழ் தேசியக் கொடியையும் பார்த்து மிரண்டு, சுவரோரம் பம்மியபடி வெளியேறிய அவர்களுக்கு தமிழர்கள் எந்த தொந்தரவையும் தரவில்லை.

இந்த திடீர் போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பு, பிரிட்டன் தமிழர் பேரவை உறுப்பினர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டம் குறித்து ஒரு தமிழர் கூறுகையில், “இங்கிலாந்து பிரஜைகளான நாங்கள், இந்த நாட்டுக்குள் ஒரு போர்க்குற்றவாளி வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று எங்களது அரசுக்கு உணர்த்தவே இப்போராட்டத்தை நடத்தினோம்.

40 ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்ற ஒரு கொலையாளி, போர்க்குற்றவாளி இலங்கையின் அதிபர் என்பதை இந்த நாட்டு மக்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம்,” என்றார்.

மிகப் பெரிய அளவில் தமிழர்கள் திரண்டு நின்றதைப் பார்த்த பலரும் தங்களது செல்போன்களில் அவர்களை ஆர்வத்துடன் படம் எடுத்தனர். பலர் போராட்டம் நடத்தியவர்களிடம் வந்து பேசி என்ன என்று கேட்டறிந்து கொண்டனர்.

5000 பேருக்கு மேல் திரண்டிருந்த போதும், மிகக் கட்டுப்பாடாக நடந்து கொண்ட தமிழர்களுக்கு பிரிட்டன் போலீசாரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அடுத்த ஆர்ப்பாட்டம்…

இதுதவிர, வரும் 2-ஆம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ராஜபக்சே உரையாற்றவுள்ளதால், அப்போது இதை விட அதிகமான தமிழர்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போர்க் குற்றவாளி ராஜபக்சேக்கு எதிரான தங்கள் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளை கீழுள்ள சுட்டியை அழுத்தி, 300 சொற்களுக்கு மிகாமல், சுருக்கமாக பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்புமாறு தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

British Foreign & Commonwealth Office
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *