BREAKING NEWS
Search

தலைவன் பாதையில் பயணம் தொடரும்! – விடுதலைப் புலிகள்

வலிகளால் சோர்ந்துவிட மாட்டோம்… தலைவன் பாதையில் பயணம் தொடரும்! – விடுதலைப் புலிகள்

மது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. இருப்பினும், இவ் வலிகளினால் சோர்ந்து விடாது தலைவன் பாதையில் பயணத்தைத் தொடர்வோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து சரியாக ஒரு ஆண்டு நிறைவுறுகிறது. கடந்த ஆண்டு இதே நாள் வன்னி நிலப் பரப்பெங்கும் தமிழ் மக்களின் பிணங்கள் தெருவெங்கும் சிதறிக் கிடந்தன. எங்கும் மனித ஓலம், மனித இனமே பார்த்திராத அரச பயங்கரவாதப் படுகொலைகள். ஆனால் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை கடைசி வரை.

இந்த கொடிய நிகழ்வை, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் வலி சுமந்த வாரமாக அனுஷ்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு இணைப்பாளர் ஞா பாலச்சந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:

எமது உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!

எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. எமது மக்கள் இன்னமும் அந்தக் கொடூர வலிகளிலிருந்து விடுபடாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் வலி மிகவும் கொடியது. இருப்பினும், இவ்வலிகளினால் சோர்ந்து விடாது நமக்குநாமே ஆறுதல்படுத்திக் கொண்டு விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்.

இலங்கை அரசும் எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை புரிந்து கொள்ளாத சில நாடுகளும் சேர்ந்து எமது விடுதலைப் போராட்டத்தை பின்னடைவுக்கு இட்டுசென்றன. எனினும் வரலாறுகள் தந்த படிப்பினையிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டெழுவோம். எம் ஒவ்வொருவருக்குள்ளும் எரிந்து கொண்டிருக்கும் விடுதலைத் தீயை சுடர்விட்டு எரியச் செய்வோம். எமது வரலாற்றில் இடி விழுந்த இந்நாளில் அனைத்து மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து வரலாற்றின் வலிகளைப் படிக்கற்களாக மாற்றி சிங்கள தேசத்துக்கும் உலகநாடுகளுக்கும் மீண்டும் நாம் யாரென்பதை உணர்த்துவோம்.

எம்மினத்தின் தாயக, புலம்சார் அரசியல் தலைவர்களே!

எதிரியின் சூழ்ச்சிக்குள் நாம் சிக்குண்டு சிதைந்து போகாமல் எம்மினத்தின் விடுதலையை மனதில் நிறுத்தி அரசியல் ஒருமைப்பாட்டுடனும் இலட்சிய உறுதியுடனும் அணிதிரண்டு எம் தலைவன் காட்டிய விடுதலைப் பாதையில் துணிந்து செல்வோம்.

தாயக உறவுகளே!

இன்று எம்மை சிங்களதேசம் அடிமை கொண்டுள்ளது. எமது உறவுகளை கொன்றொழித்து அனாதைகள் ஆக்கியுள்ளது. சொத்துக்களைச் சூரையாடி ஏதிலிகள் முகாம்களுக்குள் அடைத்துள்ளது. தமிழ்மக்கள் முளுமையாக மீள்குடியேற்றப்படாமல் எமது தாயக பிரதேசமெங்கும் முப்படை முகாம்களும் போலீஸ் நிலையங்களும் நிறுவப்படுகின்றன. தமிழ் மண்ணில் சமூக பண்பாட்டு சீர்கேடுகள் எதிரியால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.

தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்களையும் எமது மாவீரச் செல்வங்களின் துயிலுமில்லங்களையும் அழித்து சிங்கள – பெளத்த அடையாளச் சின்னங்களும் இராணுவ நினைவுத் தூபிகளும் நிறுவப்படுகின்றன.

சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு தமிழீழம் சிங்கள மயப்படுத்தப்படுகிறது. இந்நடவடிக்கைகள் எம்மினத்தின் தேசிய ஆன்மாவை மீண்டும் மீண்டும் காயப்படுத்துகிறது. சிங்களத்தின் இச்செயலைத் தடுக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரினதும் தாயகத்திற்கான கடமையும் பொறுப்புமாகும்.

தமிழ் மக்களினது போராட்டம் உரிமைக்கானதே தவிர சலுகைக்கானது அன்று, தமிழ் மண் உரிமைக்காகத் தொடர்ந்து போராடும், சலுகைகளுக்காக கையேந்தாது என்பதை உலகின் காதுகளுக்கு உரத்துச் சொல்வோம். எமது போராட்டத்திற்கு என்றும் பக்கபலமாக இருப்பது தமிழக மற்றும் புலம்பெயர் தமிழீழ உறவுகளே. தொடர்ந்தும் அவர்களது துணையுடன் சிதைக்கப்பட்டிருக்கும் எம் மாவீரர்களின் கல்லறைகளிலிருந்து நாம் மீண்டும் பிறப்பெடுப்போம் என்று இந்நாளில் உறுதிகொள்வோம்…”

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
8 thoughts on “தலைவன் பாதையில் பயணம் தொடரும்! – விடுதலைப் புலிகள்

 1. sakthivel

  தலைவனின் பாதையில் மட்டுமல்ல, தலைவனின் தலைமயில் பயணம் தொடரவேண்டும் என இரக்கமில்லா இறைவனை வேண்டுகிறேன்….

  சிங்களம் புதைத்தது உயிர்களை அல்ல;
  சுதந்திரத்தின் விதையை……

  இன்னுயிர் நீத்த வீரநெஞ்சங்களுக்கு வீரவணக்கம்.

 2. Chozhan

  திரு.வினோ, உங்களின் இது போன்ற செய்திகளுக்கு மிக மிக நன்றி. உங்களின் பதிவை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். இப்பொழுது நான் வேறு எந்த sitetaiyum பார்ப்பது இல்லை. அப்படி முக்கியமான அனைத்து தகவல்களையும் ஒருங்கே நீங்கள் அளிப்பதற்கு மிகவும் நன்றி. தைரியமாக உங்களின் சேவை தொடர எனது வாழ்த்துகள்.

 3. thinnu

  வீரம் என்பது வெற்றி மட்டுமல்ல . வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தாலும் கடைசி மூச்சு வரை போராடுவது தான்-by Arul-sig

 4. Sudha

  வலிகளால் சோர்ந்துவிட மாட்டோம்… தலைவன் பாதையில் பயணம் தொடரும்!

 5. sakthivel

  தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.

 6. raj.s

  இயக்கம் இருகிறதா , இல்லையா என்று புரியவில்லை.

 7. Muthu

  தலைவனின் வழிகாட்டுதலில் பயணம் தொடர எல்லாம் வல்ல அன்னையை வணங்குகிறேன். ஐந்தாம் கட்ட ஈழ போரை முன்னின்று நடத்த தமிழ் இன தலைவன் மீண்டும் விரைவில் வரவேண்டும் கொடியவர்களின் தலைகள் வெட்டி சாய்க்கப்பட்டு ஈழ மண்ணில் உருள வேண்டும்… தமிழ் ஈழத்தின் வெற்றி கீதம் ஒலிக்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *