BREAKING NEWS
Search

தர்மேந்திராவுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி! – படங்கள், வீடியோ

ஆஷ்ரம் விழாவில் தர்மேந்திராவுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி!

லகெங்கும் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் டிசம்பர் 12-ம் தேதி அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

வழக்கம் போல இந்த ஆண்டும் மிக எளிமையாக முன்கூட்டியே கொண்டிவிட்டார் சூப்பர் ஸ்டார். வழக்கம் போல இந்த பிறந்த நாளன்றும் தான் சென்னையில் இருக்க மாட்டேன் என்பதையும் இந்த விழாவில் அவர் தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

லதா ரஜினி நடத்தும் ஆஷ்ரம் பள்ளி ஆண்டு விழாவில் தர்மேந்திரா – ஹேமமாலினி சூழ, கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் ரஜினி.

ஆண்டுதோறும் ஆஷ்ரம் பள்ளி  விழா நடத்தி, அதில் சமூகத்தின் பல்வேறு துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.

இந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மாலை காமராஜர் அரங்கில் சிறப்பாக நடந்தது ஆஷ்ரம் ஆண்டு விழா. சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் ஜாம்பவான் தர்மேந்திரா, அவர் மனைவியும் நடிகையுமான ஹேமமாலினி ஆகியோர் பங்கேற்றனர்.

தர்மேந்திராவுக்கு டிசம்பர் 8-ம் தேதி பிறந்த நாள்… ரஜினிக்கு டிசம்பர் 12. இருவரின் பிறந்த நாளையும் இந்த மேடையிலேயே வைத்து ஒரே கேக்கை வெட்டிக் கொண்டாடினர். இந்த இரு பெரும் கலைஞர்களும் இணைந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டியதை அரங்கம் கொண்டாடியது, அதிர வைக்கும் கைத்தட்டல்களால்.

“இந்திய திரையுலகின் லெஜன்ட் தர்மேந்திராவுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடுவது ஒரு இனிய அனுபவம்” என்று குறிப்பிட்டார் ரஜினி.

தர்மேந்திரா திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அதை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ‘ரஜினிகாந்த் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. தர்மேந்திராவுடன் இணைந்து ஹேமமாலினியும் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய தர்மேந்திரா, ரஜினி – லதா ரஜினி இருவரையும் தனது நெருங்கிய உறவினர்கள் என்றார். ரஜினி தனது இளைய சகோதரர் போன்றவர் என்றும், ரஜினி தம்பதியிடம் விருது பெருவது பெருமையாக உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து எந்திரன் என்ற மெகா வெற்றியைத் தந்த இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது குழுவினரை சிறப்பிக்கும் வகையில், எந்திரன் பாடல்களைப் பாடி ஆடினர் குழந்தைகள். இதனை கைதட்டி ரசித்து மகிழ்ந்தார் ஷங்கர்.

இந்த விழாவில் மூத்த இயக்குநர் கே விஸ்வநாத், எம்ஜிஆர் – சிவாஜி போன்ற சிகரங்களுடன் இணைந்து பணியாற்றிய மூத்த நடிகை ராஜ சுலோச்சனா, இயக்குநர் ஷங்கர், சன் பிக்ஸர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, முன்னாள் கிரிக்கெட் வீரர் பி எஸ் வெங்கட்ராகவன், மூத்தகலைஞர் வியட்நாம் வீடு சுந்தரம் உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூருக்கு பொன்னாடை போர்த்தி, லதா ரஜினி விருது வழங்கியபோது, ரஜினி நெகிழ்வுடன் ரசித்தார்.

ராஜ் பகதூர் பேசுகையில், “அன்று பெங்களூரில் நான் டிரைவராக, ரஜினி கண்டக்டராக இருந்தபோது எங்களுக்கிடையில் எப்படிப்பட்ட நெருக்கம் இருந்ததோ, அதே நெருக்கம் இன்றும் தொடர்கிறது. அவர் சூப்பர் ஸ்டாரான பிறகும் எங்கள் நட்பில் பேதம் வந்ததில்லை. இப்படி ஒரு மனிதரை உலகில் பார்ப்பது அபூர்வம்” என்றார்.

இயக்குநர் விஸ்வநாத் பேசுகையில், ரஜினியை வைத்து படம் இயக்காதது தனக்கு ஒரு குறையாகவே இருப்பதாகவும், இப்போது அவர் சரி என்றாலும் படம் பண்ண தான் தயார் என்றும் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டாரின் அண்ணன் சத்யநாராயணா, ஐஸ்வர்யா – தனுஷ், சௌந்தர்யா – அஸ்வின் உள்பட குடும்பத்தினர் விழாவில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் வீடியோ:

என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *