BREAKING NEWS
Search

தர்மபுரி பஸ் எரிப்பு: 3 குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

தர்மபுரி பஸ் எரிப்பு: 3 குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்ததது.

கடந்த 2000-ம் ஆண்டில் கொடைக்கானல் ப்ளஸன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த வன்முறையில் தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரிப் பேருந்துக்கு சிலர் தீவைத்தனர்.

இதில் பஸ்ஸில் இருந்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் பலியாகினர்.

இதுதொடர்பாக அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்தார். வழக்கு விசாரணையின் போது தர்மபுரி மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் உள்பட 123 பேர் சாட்சியம் அளித்தனர்.

இதில் வழக்கில் தர்மபுரி நகர அதிமுக செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன் , முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் தலா ரூ.59,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் 25 அதிமுகவினருக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர்களுக்கு தலா 7 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து 2 பேர் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஒருவர் விபத்தில் மரணமடைந்துவிட்டார்.

இந்த தண்டனைகளை எதிர்த்து அவர்கள் 28 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. 2 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார்.

ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பு கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் தங்களது மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்கக் கோரியிருந்தனர்.

மற்ற 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள தங்களது தீ்ர்ப்பில், பஸ்ஸை எரித்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இவர்கள் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதே போல தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய மற்ற 25 அதிமுகவினரின் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் உறுதி செய்து தீ்ர்ப்பளித்தனர்.

மேலும், பேருந்தில் மாணவிகள் இருப்பது தெரிந்தும் அதைத் திட்டமிட்டு தீயிட்டு எரித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், நிராயுதபானியாக இருந்த அப்பாவி மாணவிகளைத் தாக்கியது காட்டுமிரண்டித்தனமானது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் தெரிவித்தனர்.

பஸ் எரிந்து கொண்டிருந்தபோது, பத்திரிகையாளர்களும், போலீஸாரும் அங்கு இருந்திருக்கின்றனர். உள்ளேயிருந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன் கண்டனமும் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ள நிலையில், அம்மூவரும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடும்.

அப்போதும், அவர்களின் தண்டனை உறுதி செய்யப்படும் பட்சத்தில், ஜனாதிபதிக்கு அவர்கள் கருணை மனு அனுப்பலாம். அந்த மனுவை ஜனாதிபதி நிராகரிக்கும்பட்சத்தில், அம்மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *