BREAKING NEWS
Search

தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்வோம்! – சென்னையில் சோனியா

தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்வோம்! – சென்னையில் சோனியா

சென்னை: ராஜீவ் – ஜெயவர்த்தனா உடன்பாட்டின்படி இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.06-sonia16200

சென்னை தீவுத்திடலில் நடந்த திமுக – காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இன்று மாலை 4-30 மணிக்கு பங்கேற்றார் சோனியா காந்தி.

விமான நிலையத்தில், திமுக, காங்கிரஸ் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அருகே உள்ள கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் அடையார் ஹெலிபேட் தளத்திற்கு பின்னர் அவர் கிளம்பிச் சென்றார்.

திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், குலாம் நபி ஆசாத், தங்கபாலு, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்திரா காந்தி காலம் முதலே தமிழகமும், தமிழக மக்களும் எங்கள் குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் அன்பும், மதிப்பும் வைத்திருக்கிறீர்கள்.

இலங்கையில் இன்று அப்பாவித் தமிழர்கள் படும் வேதனையும், துயரமும் கண்டு நான் மிகுந்த வேதனையை அடைந்துள்ளேன். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பேரவதிக்குள்ளாகியுள்ளனர். இது எனக்கு வேதனையைத் தருகிறது. நான் கவலை அடைந்துள்ளேன்.

இலங்கையில் போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறேன். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படுவது குறித்து இந்தியா உறுதிபட செயல்பட்டு வருவதாக ஏற்கனவே பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அந்நாட்டு சட்டத்திற்குட்பட்டு, சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ, அமைதியுடன் வாழ, கெளரவத்துடன் வாழ ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.

கடந்த தேர்தலில் தமிழக மக்கள் எங்களுக்கு 40க்கு 40 தொகுதிகளைக் கொடுத்தீர்கள். இந்த முறையும் அதேபோல 40 தொகுதிகளிலும் வெற்றியைக் கொடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருந்தீர்கள். அதேபோல நாங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். தமிழக மக்களை ஐக்கிய முற்போக்கு அரசு ஒருபோதும் கைவிடாது. இந்தக் கூட்டணியின் மிகப்பெரிய தூண் முதல்வர் கருணாநிதி என்றால் மிகையல்ல.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் தந்தது. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி நிதியைத் தந்ததும் எங்களது அரசுதான். சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வ்ததும் எங்களது அரசுதான்.

தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், கார் தொழிற்சாலை என பல துறைகளில் பெருமளவிலான முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வந்ததும் எங்களது அரசுதான் என்றார் சோனியா காந்தி .

தனது பேச்சின் முடிவில் ’40ம் நமதே; வெற்றி நமதே’ என தமிழில் பேசியதற்கு கைதட்டி மகிழ்ந்தனர் கூடியிருந்தவர்கள்.
2 thoughts on “தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்வோம்! – சென்னையில் சோனியா

 1. நினைவுகள்

  சன் டிவியில நேரடி ஒலிபரப்பு பார்த்தேன், மொழிபெயர்பாளர்கள் நல்ல காமடி செய்தார்கள்!

 2. SenthilMohan K Appaji

  //*
  இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அந்நாட்டு சட்டத்திற்குட்பட்டு, சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ, அமைதியுடன் வாழ, கெளரவத்துடன் வாழ ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.
  **/

  விளம்பரங்களின் கீழ் * குறியினை இட்டு சிறிதாக ConditionsApply என்று போடுவார்களே அது போலத்தான் இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தமிழகளுக்கு பாதுகாப்பளிப்பது. லட்சம் பேரினை கொன்றுவிட்டு, ஆயிரம் பேரை பாதுகாப்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *