BREAKING NEWS
Search

தமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி! – பழ நெடுமாறன்

தமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி! – பழ நெடுமாறன்

ழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் neduசிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது” என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சவுக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும் என தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.

கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்சினைகளில் தமிழகம் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல, “தமிழீழத் தனிநாடு இனி சாத்தியமானது அல்ல.சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களவரிடம் மண்டியிட வேண்டும்” என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

“கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.திராவிட நாடு கொள்கையை தி.மு..க. கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது.எனவே முதலில் கட்சிதான் வேண்டும் என்று முடிவு எடுத்ததாக”வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.

பிரிவினை கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப்படவில்லை.பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது.தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது.வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.

30 ஆண்டு காலம் அறவழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலகட்டத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள்.

தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை.இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உலகத்தின் பல நாடுகள் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை.அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை, என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
6 thoughts on “தமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி! – பழ நெடுமாறன்

 1. வடக்குப்பட்டி ராமசாமி

  நெடுமாறன் அய்யா, நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க அதுனால கோவபடுறீங்க, ஆனா நாங்கள்லாம் அப்படி இல்ல, ரொம்ப தெளிவு.

  தலைவர் என்ன சொல்ல வருராருன்னா, இலங்கையை பற்றி பேசி, சோனியா அன்னைய கோப படுத்தாதீங்க! அவுங்களை கோபப்படுத்துனா அவுங்களுக்கு தமிழக அமைச்சரவை நாபகத்துக்கு வந்துரும்ல?

  நல்லதெல்லாம் நீங்க யோசிக்கக்கூடாது, நாங்க செய்றத நல்லதுன்னு சொல்லுங்க! போதும்! எப்போதும் உடன் பிறப்பாகவே இரு! யோசிக்காதே!

 2. குமரன்

  “சொக்கத்தங்கம் சோனியா காந்தி” மனம் நோகும் என்று, தன் குடும்பத்துக்குப் பதவி கேட்கும்போதும், பிடிவாதமாய் வெளியிலிருந்து ஆதரவு என்று சொல்லும்போதும் தில்லியில் நினைக்காத கலைஞர், தமிழகக் காங்கிரசார் மனம் நோகும் என்று ஆட்சியில் பங்கு தர சென்னையில் நினைக்காத கலைஞர், இந்துக்கள் மனம் நோகும் என்று கொச்சைப்பேச்சுக்களை எங்கும் தவிர்க்காத கலைஞர், ஒரு லட்சம் தமிழர்களின் பிணக்குவியலின் மேல் நின்று கொண்டு, நீக்குப் போக்கு பற்றித் தமிழர்களுக்குப் பாடம் எடுப்பது இனப்படுகொலையைத் தமது தேர்தல் கருதி வாய் மூடி மவுனமாய் இருந்து ஆதரித்ததை விடக் கொடுமை.

  தமிழ் இனத்தைப் படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதே என்று சொல்லும் தமிழ் இனமானக் காவலர்.

  என்னென்ன பத்விகளோ, யார் யாருக்கோ கேட்டிருப்பார் கலைஞர்.
  இன்னும் வரவேண்டும் காத்திருக்கிறார் அதற்காக.

  வழக்கில்லாமல் பார்த்துக்கொண்டால் இனமானப் பேராசிரியருக்குக் கவர்னர் பதவியும், கலைஞருக்குத் தேச ஒருமைப்பாட்டுக்கு பாரத ரத்னாவும் வழங்கப்படலாம்.

 3. Anandhan

  எவன் செத்தால் எனக்கு என் குடும்பம் நல்ல இருந்த போதும் நினைக்கிறவர் கிட்ட வேற என்ன எதிர் பார்க்க முடியும்

 4. குமரன்

  யூகோஸ்லாவியாவின் அதிப‌ராக இருந்த ஸ்லோப்டன் மிலோசவிக் மீது போர்க்குற்றங்களுக்காகவும், இனப் படுகொலைக்காகவும் தொடுக்கப்பட்டது போன்ற வழக்கை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே, அவரது அமைச்சரும் உடன்பிறப்புமான கோத்தபய ராஜபக்சே முதலானோர் மீது ஹேக் நீதிமன்றத்தில் (இனப்படுகொலைக்காக வழக்கு) தொடுப்பதும் அதை எவர் தடுத்தாலும் முன் நின்று நடத்துவதுமே குறைந்த பட்சம் இந்தியத் தமிழர் செய்ய வேண்டிய கடமை. இதன் மூலம் மட்டுமே இலங்கையின் இனவாத சிங்கள அரசை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும். இதனால் சிங்களர்க்கு மட்டும் அல்ல, கலைஞருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கூட மன வருத்தம் நேர்ந்தாலும் அதை இந்தியத் தமிழர்கள் பொருட்படுத்தக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *