BREAKING NEWS
Search

தமிழகம்: சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பெயரில் நடக்கும் மகா மோசடிகள்!


சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பெயரில் நடக்கும் மகா மோசடிகள்!

ளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் ஒரேயொரு விஷயத்தில் மட்டும் அனைவரும் உலகமகா ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள்.rice-wisdom-039-threat

அது… மக்களைச் சுரண்டுவது மற்றும் கொள்ளையடித்த பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது.

சென்னையை அடுத்த காஞ்சிபும் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல அரசியல்வாதிகளுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

லே அவுட்டுகளாக, பண்ணை வீடுகளாக, மின்வேலி அமைக்கப்பட்ட பெரும் தோட்டங்களாக, தொழிற்சாலைக்கான இடம் என்று பொய்யாக போர்டு எழுதி நட்டு வைக்கப்பட்ட தரிசு நிலங்களாக… நேரடியாகவும் பினாமிகள் பெயரிலும் மடக்கப்பட்டுள்ளன.

ஆனால் விவசாய நிலங்கள், நடுத்தர மக்கள் சிறுகச் சிறுக சேர்த்து வைத்து வாங்கிய மனைகளைக் குறிவைத்து கையகப்படுத்தும் அரசு, இந்த அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு மட்டும் எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்கிறது.

richie_1206_gnew4

அதேநேரம், கையகப்படுத்திய இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், புதிய தொழிற்சாலைகள் என அமைத்து, அருகில் உள்ள அரசியல்வாதிகளின் இட மதிப்பை பலப்பல மடங்கு உயர்த்துகிறது.

ஒவ்வொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நிஜப் பின்னணி மக்கள் நலனாக நிச்சயம் இருக்காது. தனிப்பட்ட அரசியல்-ஆளும்கட்சிக்காரர்களின் பேராசையே இருப்பதைப்பார்க்கலாம். சட்டத்தின் பாதுகாப்புடன் பேரளவில் நடத்தப்படும் மோசடிகள்தான் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

குறிப்பாக இன்றைக்கு மாநில அரசின் ஒவ்வொரு புதிய முதலீட்டு அறிவிப்பின் பின்னாலும் இந்த மோசடி எண்ணம் மறைந்திருப்பதாக் காணலாம்.

படப்பை அருகே ஒரகடத்தில் வாகனசோதனை மையம் மற்றும் இதர தொழிற்சாலைகளை அமைக்க சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை அமைத்த தமிழக அரசு, அதற்குப் பக்கத்தில் ஒருமிகப்பெரிய அரசியல் தலைவருக்குச் சொந்தமாக உள்ள 320 ஏக்கர் முந்திரி-தென்னந்தோப்பை மட்டும் தொடாமல் விட்டுவிட்டது!

படப்பையை அடுத்த இன்னொரு பகுதியான வஞ்சுவாஞ்சேரி எனும் கிராமத்தையொட்டி இன்னொரு தலைவருக்கும் அவரது பினாமிக்கும் உள்ள நிலங்கள் மட்டும் 1000 ஏக்கர்களை நிச்சயம் தாண்டும். இப்போது இங்கும் புதிய தொழிற்சாலைகள் வருவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதற்காக அரசு அப்பகுதியில் உள்ள வளமான விவசாய நிலங்களைக் கைப்பற்றுகிறது. இந்த தலைவரின் நிலம் மட்டும் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது.

செய்யாற்றுக்கு அருகே 400 ஏக்கரில் புதிய பொருளாதார மண்டம் ஒன்றை அமைப்பதாகவும் இங்கு போர்டு நிறுவன தொழிற்சாலை வரப்போவதாகவும் சில தினங்களுக்கு முன் செய்தி படித்திருப்பீர்கள்.

காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு திரும்பும் மாங்கால் கூட்டு ரோடு வரை, அடுத்து செய்யாறு செல்லும் வழியில், ஆரணி நெடுஞ்சாலையில்… தமிழக ஆளும்கட்சி விவிஐபிக்கள் இருவருக்கும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் சொந்தமாக 800 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதியை லேஅவுட் போட்டு காசு பார்க்கும் வேலையிலும் ஜரூராக இறங்கிவிட்டனர். விலையோ படு பயங்கரம்… இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு கிரவுண்டு ரூ.10000 என்று கூறப்பட்ட இடத்துக்கு இப்போது ரூ.6 லட்சம் என விலை நிர்ணயித்து விற்கிறார்கள். செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டல திட்டம் தீட்டியவர்கள் இந்த இடத்தை மட்டும் டச் பண்ணாமல் விட்டுவிட்டார்கள்!

1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்…

இந்த நிலையில் இப்போதும் அரசு ஒரு புதிய சிறப்புப் பொருளாதார மண்டல திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இது ஐடி மண்டலமாம்.

இந்தத் திட்டம் வரும் ஏரியாக்களைக் கவனித்தீர்கள் என்றால், அரசு இந்த பொருளாதார மண்டலத்தை அறிவித்துள்ளதன் நோக்கம் நன்கு புரியும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிய தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் (ஐடி எகனாமிக் ஸோன்) ஒன்றை தமிழக அரசு அமைக்கவிருப்பதாக சிறுதொழில் வளர்ச்சிக் கழக (டிட்கோ) இயக்குநர் டி வெலிங்டன் சில தினங்களுக்கு முன் அறிவித்துள்ளார்.

சென்னைக்கு அருகில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் அமையும் என்றும், முதல்கட்டமாக ரூ.1000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டுவரப் போகிறார்களாம்.

சரி… இதற்கான நிலம் எங்கேயிருந்து எடுக்கப் போகிறார்கள்?

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள பயன்படுத்தப்படாத விவசாய நிலங்கள், பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலங்கள் (மனைகள் உள்பட) போன்றவற்றை மையப்படுத்தியதாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம்

அமையுமாம். காரணம் நகரின் நெருக்கடியைக் குறைத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளதால், சென்னைக்கு வடக்கே மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள புற நகர்ப் பகுதிகளில் இந்த மண்டலத்தை உருவாக்கப் போகிறார்களாம்.

தாராள இடவசதியுடன் கூடிய மண்டலங்களாக இவற்றை தமிழக அரசு உருவாக்குகிறதாம். பொதுவாக இம்மாதிரி சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இருந்தாலே போதும். ஆனால் தமிழக அரசு 1000 சதுர கிலோ மீட்டர்களை ஒதுக்கியிருக்கிறது.

sez-cart

சாத்தான்குளத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக மக்களை துன்புறுத்தி அரசும் நிறுவனங்களும் நிலங்களைப் பிடுங்குவதைச் சித்தரிக்கும் ஒரு பழைய கார்ட்டூன் இது... இன்றைக்கும் பொருத்தமானதாகவே உள்ளது!

இந்தப் பகுதியில் 2.5 லட்சம் மக்கள் வசிக்கும் அளவு வீட்டு வசதிக்கான இடமும் கிடைக்கும் என்று டிட்கோ அறிவித்திருப்பதில்தான் பெரிய மோசடியே அடங்கியுள்ளது.

இன்னொரு பக்கம், சாலை வசதி, அடிப்படை கட்டமைப்புக் காரணங்களுக்காக மக்களின் நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்த வேண்டி வரும், என்றும் வெலிங்டன் அறிவித்துள்ளார்.

அதாவது தொழிற்சாலைகள், ஐடி பூங்காக்களுக்கு தரப்படும் நிலங்கள், அரசியல் விவிஐபிக்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஒட்டியே அமையப் போகின்றன.  இந்த மண்டலத்தால், தானாக இடத்தின் மதிப்பு பல மடங்கு உயரும். அரசியல்வாதிகள் முன்பே திட்டமிட்டு வைத்திருப்பதற்கு ஏற்ப அடுக்குமாடிக் குடியிருப்புகளை எழுப்பி, பல லட்சம் ரூபாய்க்கு விற்கப் போகிறார்கள்.

இந்தமாதிரி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒன்றல்ல இரண்டல்ல… 70 மண்டலங்கள் தமிழகத்தில் மட்டுமே உருவாகப் போகின்றன.

பலே… காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களின் விவசாயம் என்னாகும்… அது எக்கேடுகெட்டால் என்ன…அரசியல் வாதிகள் கல்லா நிரம்பினால் போதாதா?

எம்எஸ் சுவாமிநாதன் மாதிரி ‘பொருளாதார கிருமி’களை வைத்து கலர் கலராக விவசாய பொய் சொன்னால் நீங்கள் நம்பாமலா போய்விடுவீர்கள்!!

-எஸ்.எஸ்
2 thoughts on “தமிழகம்: சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பெயரில் நடக்கும் மகா மோசடிகள்!

  1. Sakthikumar, Detroit

    அடப்பாவிகளா… இதான் SEZ லட்சணமா?

  2. ramesh

    //எம்எஸ் சுவாமிநாதன் மாதிரி ‘பொருளாதார கிருமி’களை வைத்து கலர் கலராக விவசாய பொய் சொன்னால் நீங்கள் நம்பாமலா போய்விடுவீர்கள்!!//

    Puriyavillai..satru vilakkamaga koorungalen..

    BTW..it is a eye opener for the people like me..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *