BREAKING NEWS
Search

இடைத் தேர்தல் புறக்கணிப்பு: அதிமுக செய்தது சரிதானா?

இடைத் தேர்தல் புறக்கணிப்பு: அதிமுக செய்தது சரிதானா?

மிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, விரைவில் jjaya1நடைபெறவிருக்கும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முற்றாககப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் அவருடன் கருத்து வேறுபட்டு, அவரது கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெவ்வோறு துருவங்களில் நிற்க… ஒரு கேலிக்குரிய நிலை உருவாகியிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் தேர்தல் களத்தில் குதிக்க, மதிமுக இப்போது வேறு வழியின்றி அமைதி காக்கிறது.

இன்னொரு பக்கம், தனக்கு சரியான வாய்ப்பு அமைந்துவிட்டதாக நினைத்து விஜயகாந்த் மளமளவென காரியத்தில் இறங்கிவிட்டார். அவருக்கு வெற்றி கிடைக்குமா இல்லையா என்பதல்ல கேள்வி… ஆனால், திமுகவுக்கு அடுத்த அரசியல் சக்தியாக இந்தத் தேர்தலில் தன்னை முன்னிறுத்த அவருக்கு இது மிகப்பெரிய சந்தர்ப்பமாக அமைந்துவிட, அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறார்.

தேர்தல் தில்லுமுல்லு, வாக்குப் பதிவு எந்திர முறைகேடுகள், ஆளும் கட்சி அள்ளி இறைக்கும் பணம் உள்ளிட்ட பல காரணங்களை தனது தேர்தல் புறக்கணிப்புக்கு ஜெயலலிதா சொன்னாலும் அவை மக்கள் மனதில் அத்தனை சுலபத்தில் பதிவதாக இல்லை.

‘எம்ஜிஆரின் கட்சி, அதுவும் அடுத்து ஆட்சியைப் பிடிப்பதாக சொல்லிக் கொள்ளும் கட்சியின் அணுகுமுறையா இது’, விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மக்களின் இந்த எண்ணங்களை தினமணி சிறப்புக் கட்டுரையாக வடித்துள்ளது. அந்தக் கட்டுரை:

தமிழகத்தில் இடைத்தேர்தல்களைப் புறக்கணித்திருக்கும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா சொல்லும் நியாயங்களில், வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்ற ஒன்றைத் தவிர எதுவுமே ஏற்புடையதல்ல.

அதற்காக தேர்தலைப் புறக்கணிப்போம் என்று சொல்வது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக இல்லை என்று சொல்லாமல் “புறக்கணிக்க’ நம்மால் முடியவில்லை.

பணபலமும், அதிகார பலமும் பெற்றிருக்கும் ஒரு ஆளும்கட்சி எப்படியாகிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, விதிமுறைகளை மீறும் என்பதுதான் உலக நடைமுறை. அதிமுக ஆளும்கட்சியாக இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும்கூட, பணபலம், அதிகார பலம் இருக்கவே செய்தன. ‘அம்மா’வின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்ற அச்சத்தில் அதிமுக அமைச்சர்கள் அன்றைய தினம் ‘வழியற்ற வழி’களைக் கையாண்ட சம்பவங்கள் இல்லாமலில்லை.

இந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் சொல்லக்கூடிய ஒரே பதில்-‘நாங்கள் இந்த அளவுக்கு மோசமாக விதிகளை மீறவில்லை. பணத்தை இறைக்கவில்லை’ என்பதாக இருக்கலாம். ஆனால், உலகத்தில் எல்லாமும் ஒன்றையொன்று விஞ்சுவதாகத்தான் இருக்கும். இன்றைய ஸ்பெக்டரம் ஊழலை ஒப்பிட்டால் போஃபர்ஸ் ஊழல் ஒரு விஷயமே அல்லதான். அதற்காக, அது ஊழல் இல்லை என்று சொல்லி ஒதுக்கிவிட முடியுமா?

இப்போது ஜெயலலிதா முன்வைக்கும் மிக முக்கிய குற்றச்சாட்டு- வாக்குஇயந்திரங்களில் முறைகேடுக்கான வாய்ப்பு என்பதுதான்.

வாக்கு இயந்திரங்களைக் கையாள்பவர்கள் அனைவரும் அரசு அதிகாரிகள். ஒரே நாளில் துணிச்சலாக அனைத்து அரசு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்த தன்னை (ஜெயலலிதாவை) வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்கள் என்பதையும், அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு எப்போதுமே சம்பளம், படி எல்லாவற்றையும் அள்ளித்தருபவர் தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்பதையும் கருதிப் பார்க்கும் ஜெயலலிதா, வாக்கு இயந்திரத்தில் முறைகேடு இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கிறது. மேலும், கடைசி ஒரு மணிநேரத்தில் 30 சதவீத வாக்குப் பதிவுகள் என்பதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது அவர் சந்தேகம் கொள்வதும் நியாயம்தான்.

அதற்காக, ஒரு ஜனநாயக வாய்ப்பை, மிக முக்கியமான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் தவற விடுவதன் மூலம் ஆட்சியாளருக்கு எதிராக மக்களுக்குக் கிடைக்கும் ஒரேயொரு வாய்ப்பை இல்லாமல் செய்துவிடுகிறார். ‘ஆளும்கட்சியையே தேர்வு செய்து கொள்ளுங்கள்’ என்று மறைமுகமாகச் சொல்வதைப் போலத்தான் அமையும்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், அவரது கூட்டணியில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது அதிமுக மட்டுமே. ஜெயலலிதா குறிப்பிடும் வாக்கு இயந்திர முறைகேடுகள் அனைத்தையும் மீறித்தான் அதிமுகவால் இந்த வெற்றியைப் பெற முடிந்திருக்கிறது. இதற்குக் காரணம், ஆளும்கட்சி மீதான வெறுப்பை வெளிப்படுத்த ஓர் இடமாக அதிமுகவை மக்கள் கருதுகிறார்கள் என்பதுதான். இதை அவர் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

இப்போது நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களிலும்கூட வேட்பாளரை நிறுத்தி, “”இவர்தான் எனது வேட்பாளர், ஆளும்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தால் என்னால் செயல்பட முடியவில்லை. அவர்களைப் போல பணத்தை இறைக்க என்னால் முடியாது. உங்கள் வாக்குகளை எனக்கு அளித்தால் சரி. இல்லையானாலும் சரி” என்று அமைதியாக போட்டியில் பங்குகொண்டிருந்திருக்கலாம். அதைவிட நல்லதொரு அரசியல் சத்யாகிரகம் வேறு எதுவாக இருக்க முடியும்?

அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால், கட்சிக்குள் தற்போது இருக்கும் தீப்பொறியை அணைந்துபோகச் செய்யும் ஆபத்து அதிகம். குறிப்பாக, அதிமுகவின் வாக்குவங்கியை உடைத்து, வெற்றியை தடுக்கும் தேமுதிக-வுக்கு ஜெயலலிதாவே ரத்தினக்கம்பளம் விரித்து வாழ்த்துக் கூறுவதற்கு இணையானது இந்த தேர்தல் புறக்கணிப்பு. கிராமத்தில் சொல்வார்கள், ‘சொந்த காசுல தனக்கே சூனியம் வச்சிக்கிட்டாப் போல’ என்று. அதைத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

வாக்கு இயந்திரத்தில் அதிமுகவுக்கு குறிப்பிட்ட வாக்கு எண்ணிக்கை சேர்ந்த பிறகு, இரட்டை இலையை அழுத்தினாலும் வேறு சின்னங்களில் வாக்குப் போய்ச் சேரும் மென்பொருள் (சாப்ட்வேர்) வாக்கு இயந்திரத்தில் இருக்கிறது என்று ஜெயலலிதா சந்தேகப்பட்டால், அதை அவர் நிரூபிக்க வேண்டும். சிறந்த கணினி நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளிப்படையான செயல்விளக்கத்தை, ஒரு ஒத்திகை வாக்குப்பதிவை, நாடே காணும்படி செய்துகாட்டி, வாக்கு இயந்திரத்தின் மென்பொருளை மாற்றி அமைக்க முடியும் என்று நிரூபித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து வெறுமனே வாக்கு இயந்திரத்தில் முறைகேடு என்று பேசிக்கொண்டிருப்பதும், தேர்தலைப் புறக்கணிப்பதும் அர்த்தமற்ற செயல்கள்.

ஆளும்கட்சி எதுவாக இருந்தாலும் பணபலம், அதிகார பலம், விதிகளை மீறுதல் என்று எல்லாமும் இருக்கவே செய்யும். ஒரு எதிர்க்கட்சி இதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது.

அரசியல் கட்சித் தலைமை என்றால் தோல்வியைத் தோளில் போட்டு நடந்தால்தான், நாளை நமதே.

இல்லையானால், இன்றைய பொழுதும் இல்லையென்றாகும்!
4 thoughts on “இடைத் தேர்தல் புறக்கணிப்பு: அதிமுக செய்தது சரிதானா?

 1. Manoharan

  அதிமுகவின் வாக்குவங்கியை உடைத்து, வெற்றியை தடுக்கும் தேமுதிக-வுக்கு ஜெயலலிதாவே ரத்தினக்கம்பளம் விரித்து வாழ்த்துக் கூறுவதற்கு இணையானது இந்த தேர்தல் புறக்கணிப்பு.

  அரசியல் கட்சித் தலைமை என்றால் தோல்வியைத் தோளில் போட்டு நடந்தால்தான், நாளை நமதே.

  இல்லையானால், இன்றைய பொழுதும் இல்லையென்றாகும்

  Who is misleading Jayalalitha ?

 2. Manoharan

  அதிமுகவுக்கு வாக்களிக்கும் நடுநிலையாளர்களின் ஓட்டு தே.மு.தி.கவுக்கு சென்றால் அது ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை தரும். ஏற்கனவே விஜயகாந்த்தை தூக்கிவிடும் பத்திரிக்கைகள் அதிமுக மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது என்று கூப்பாடுபோடும். 12 வருடம் திமுக ஆட்சியில் இல்லாமல் சமாளிக்கவில்லையா ?
  ஜெ.தவறு செய்துவிட்டார். விஜயகாந்த் வளர்வதற்க்குதான் இது உதவும்..

 3. Seri

  இவருக்கு அவர் பரவாயில்லை… அவருக்கு இவர் தேவலை’ என்று இந்த இருவர் நாடகத்தில் மட்டுமே தமிழர் கவனம் இருக்க வேண்டும் எனத் தெளிவாகத் திட்டமிட்டு தங்கள் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர் திமுக-அதிமுக ‘முதலாளிகள்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *