BREAKING NEWS
Search

டைம் 25: உலகின் சக்தி மிக்க பெண்கள் பட்டியலில் இந்திரா காந்தி!

டைம் 25: உலகின் சக்தி மிக்க பெண்கள் பட்டியலில் இந்திரா காந்தி!

இந்திரா காந்தி மறைந்த போது டைம் வெளியிட்ட அட்டைப்படம்...

வாஷிங்டன்: உலகில் அதிக ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த ஒரே பெண்மணியான இந்திரா காந்தியை, உலகின் சக்தி மிக்க 25 பெண்களுள் ஒருவராக தேர்வு செய்துள்ளது டைம் பத்திரிகை. இந்தப் பட்டியலில் அவருக்கு 9-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற புனிதரான அன்னை தெரசாவுக்கு 22வது இடம் கிடைத்துள்ளது.

கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த 25 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது புகழ்பெற்ற டைம் பத்திரிகை. இதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்ணான ஜேன் ஆடம்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் 6-வது இடத்தில் உள்ளார்.

அன்னை தெரசா 22-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திரா காந்தி, அன்னை தெரசா ஆகியோர்தான் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் ஆவர்.

இந்திரா, இந்தியாவின் மகள். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் கண்காணிப்பில் வளர்ந்தவர் என்று டைம் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

1966-ல் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோது, பிரச்சினைக்குரிய ‘இந்தியா இப்போது ஒரு பெண்ணின் உறுதியான கையில்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது டைம்.

“அந்த உறுதியான கரங்களில் இந்தியா பெரிய பிரச்சினைகள் வெற்றிகரமாகக் கையாண்டது. பொருளாதார மந்தம், முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை, ஊழல் வழக்கு, பக்கத்து நாடான பாகிஸ்தானில் உள்நாட்டு யுத்தம், இந்திரா வழிகாட்டிதலில் பிறந்த பங்களா தேசம் என பல பிரச்சினைகளை இந்திரா தனது18 ஆண்டு கால ஆட்சியில் வெற்றிகரமாகக் கையாண்டார்,” என்று குறிப்பிட்டுள்ளது டைம்.

அன்னை தெரசா குறித்து டைம் இப்படிக் கூறியுள்ளது:

“ஆக்னஸ் போஜாக்ஸியூ என்ற பெயரில் அல்பேனியா பெற்றோருக்குப் பிறந்த அன்னை தெரசா, 1929ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். 13 பேர் கொண்ட குருகுலத்தை கொல்கத்தாவில் ஆரம்பித்தார். பின்னர் அதுவே 4000 சகோதரிகளைக் கொண்ட பெரும் வலையமைப்பாக வளர்ந்தது. ஆதரவற்றோர், தொழுநோயாளர், எய்ட்ஸ் பாதித்தோருக்கு உறுதுணையாய் நின்று உதவியது.

சில நேரங்களில் போதிய மருத்துவ அனுபவமின்மை, வறுமையை அதிக அளவில் ஒழிக்க முயற்சிக்காதது மற்றும் பிறப்பைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆதரிக்காதது போன்ற காரணங்களுக்கா அவரது இயக்கம் விமர்சனத்துக்குள்ளானாலும், இந்தியாவில் கருணை, சேவை மனப்பான்மை வளர அவரே பெரும் காரணம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் விஞ்ஞானி மேரி கியூரி, பாடகி மடோன்னா,ஏஞ்சலினா மார்கெல், எலினார் ரூஸ்வெல்ட், மார்க்கரெட் தாட்சர், ஓபரா வின்ப்ரே மற்றும் வர்ஜீனியா உல்ப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *