BREAKING NEWS
Search

செல்வராசா பத்மநாபன் கைது!

செல்வராசா பத்மநாபன் கைது!

kpkp

கேபியின் பழைய படம்!

விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் மற்றும் அந்த அமைப்பின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டவருமான கே பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாபன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்க தகவல் தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறும் இலங்கை, இது தொடர்பாக மேற்கொண்டு எந்த விவரமும் தரவில்லை.

ஆனால் இந்த தகவலின் நம்பகத்தன்மை குறித்து புலிகள் அமைப்போ அதன் மற்ற பொறுப்பாளர்களோ எதுவும் அறிவிக்கவில்லை.

இச்செய்தி வெளியானதும், இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் சில பகுதிகளில் சிங்களர்கள் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தவர் கேபி. புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவுகளை முழுமையாகக் கவனித்தவர் அவரே.

kp-new

கேபி... இப்போது!

எல்டிடிஈ தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார். இறுதிப் போரின் போதுதான் அவரை, அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளராக நியமித்தார் பிரபாகரன்.

இறுதிப் போரில் புலிகள் தோல்வியைத் தழுவியபோது, பிரபாகரன் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை இவர் கூறியதால் தமிழ் உணர்வாளர்களின் பெரும் கோபத்துக்கு ஆளானார் கேபி. இறுதியில் பிரபாகரன் போரில் வீரமரணமடைந்து விட்டதாக இவர் கூற, அதனால் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளானது தமிழ்ச் சமூகம்.

இந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சியில் இறங்கிய கேபி, புலிகள் இயக்கத்துக்கு தானே தலைவர் என்றும் அறிவித்தார். இதனால் புலிகள் அமைப்பின் நிர்வாகிகளுக்கிடையே கருத்து மோதல் உருவானது. இப்போது அநத மோதல்கள் முடிந்து கிட்டத்தட்ட சமாதான மனநிலையில், ஒன்றிணைய முயற்சித்த போது இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

கேபியை கைது செய்தது இன்டர்போலா அல்லது இலங்கையா, கைது செய்யப்பட்டவரை எங்கே வைத்துள்ளார்கள் மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கைதில் இந்திய உளவுத் துறைக்கு முக்கியப் பங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்டர்போல் அதிகாரிகளால் தேடப்பட்டவர் கேபி என்பதும் குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *