BREAKING NEWS
Search

செருப்பு-துடைப்பத்தால் அடித்து ராஜபக்சே கொடும்பாவியைக் கொளுத்திய மதிமுகவினர்!

செருப்பு-துடைப்பத்தால் அடித்து ராஜபக்சே கொடும்பாவியைக் கொளுத்திய மதிமுகவினர்!

சென்னை: காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடந்தது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்கினார்.

சென்னை மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், சோமு, செங்குட்டுவன், ஜீவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கருப்புகொடி ஏந்தி வந்த தொண்டர்கள்,

‘வரவேற்காதே வரவேற்காதே ராஜபக்சேவை வரவேற்காதே’,


‘கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் ராஜபக்சேவை அழைத்த காங்கிரஸ் அரசை கண்டிக்கிறோம்’,


‘வெட்கம், வெட்கம் தமிழினத்தை அழித்த கொலைகாரனுக்கு பாராட்டு தெரிவிப்பது வெட்கம்’

-என கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் நடுவே ம.தி.மு.க. தொண்டர்கள் திடீரென ராஜபக்சேவின் கொடும்பாவியை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். அதில் எரிந்த தீயை அணைக்க போலீசார் முயன்றனர். அதையும் மீறி கூட்டத்தின் பல இடங்களில் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

ராஜபக்சேவின் உருவப் படத்தையும் தீயிட்டு கொளுத்தினர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ராஜபக்சே படத்தை துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்தனர். இதற்கிடையே எரிந்து கொண்டிருந்த கொடும்பாவிகளை தண்ணீர் ஊற்றி போலீசார் அணைத்தனர்.

கொடும்பாவி எரிப்பின் போது போலீசாருக்கும், ம.தி.மு.க. தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகளும்…

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் போராட்டம் நடந்தது. ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு செய்தி தொடர்பாளர் வன்னியரசு தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் வெற்றிச் செல்வன், இரா.செல்வம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்களை எழுப்பி ராஜபக்சேவின் கொடும் பாவியை எரித்தனர்.

இதேபோல பெரியார் திராவிடர் கழகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரே ராஜபக்சேவின் கொடும்பாவியை மரத்தில் தொங்கவிட்டு செருப்பால் அடித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

நாம் தமிழர் கட்சி ஆரப்பாட்டம்…

இதேபோல சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ராஜா தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

“உலகமே போர் குற்றவாளியாக பார்க்கும் இலங்கையை பாதுகாக்க இந்தியா தொடர்ந்து துணை போய் கொண்டிருப்பது இந்தியாவில் வாழும் ஏழரை கோடி தமிழ் மக்களை மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களையும் கொதிப்படைய செய்துள்ளது என்றும், தமிழின விரோத போக்கை நாம் தமிழர் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. இலங்கை அதிபர் ராஜபக்சே பங்குபெறும் நிறைவு விழாவை தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழக மத்திய அமைச்சர்களும், எம்.பி.க்களும் புறக்கணிக்க வேண்டும்,” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டனர்.

சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள்…

சேலம் மாவட்டம் ஏற்காடு மெயின் ரோட்டில் இருக்கும் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலஙகை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ‌கொடும்பாவியை எரித்தனர். கொடும்பாவி எரித்த சம்பவத்தில் ஈடுபட்ட 15 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

-என்வழி




2 thoughts on “செருப்பு-துடைப்பத்தால் அடித்து ராஜபக்சே கொடும்பாவியைக் கொளுத்திய மதிமுகவினர்!

  1. Manoharan

    மத்திய அரசாங்கம் தமிழர்கள் மனதில் அதிக பட்ச வெறுப்பை உருவாக்கி வருகிறது. இந்தியன் என்கிற உணர்வையும் மழுங்கடித்து வருகிறது. இது ஒரு பூமராங் போல் அவர்களையே தாக்கும் நாளை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *