BREAKING NEWS
Search

செம்மொழி மாநாடு… செலவு எவ்வளவு?

செம்மொழி மாநாடு… மெத்தசெலவு ரூ 311.5 கோடி !

கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு நேரடியாக ரூ.68.5 கோடியும், இம்மாநாட்டினையொட்டி, கோவை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக ரூ.243 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பங்கேற்றனர். கலை, இலக்கிய வரலாற்றை விளக்கும் வகையில் அன்றைய தினம் மாலையில் நடந்த இனியவை நாற்பது ஊர்திகள் அணிவகுப்பை 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

ஜூன் 24 முதல் 26 ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். பொதுக் கண்காட்சியை நான்கு நாள்களிலும் 1.20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

தினமும் 13 மணி நேரம் கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

மாநாட்டுச் சிறப்பு மலரில் 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

மாநாட்டில் கலந்து கொண்ட கட்டுரையாளர்களுக்கு 3 ஆயிரத்து 200 மலர்கள் வழங்கப்பட்டன. 2 ஆயிரத்து 300 மலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இணைய மாநாட்டில் 110 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இம் மாநாட்டில் 500 பேர் பங்கேற்றுள்ளனர். இணைய மாநாட்டின் சிறப்பு மலரில் 130 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இணையக் கண்காட்சியை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். முகப்பரங்கில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உணவுக் கூடங்களில் மாநாடு நடைபெற்ற 5 நாள்களிலும் 4 லட்சம் பேருக்கு ரூ.30 சலுகை விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள் மற்றும் உள் நாட்டிலிருந்து 2 ஆயிரத்து 605 விருந்தினர்கள் வருகை தந்தனர். இவர்களுக்கு 92 ஹோட்டல்களில் 1,242 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

ஜூன் 24 முதல் 27 வரை நடைபெற்ற ஆய்வரங்குகளில் 55 தலைப்புகளில் 239 அமர்வுகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அமர்வரங்குகளில் 50 நாடுகளில் இருந்து 840 பேர் வருகை தந்தனர். இதில் 152 பேர் கட்டுரை சமர்ப்பித்துள்ளனர். ஆஸ்திரேலியா (4), கனடா (11), சீனா (1), செக்கோஸ்லோவியா (1), பின்லாந்து (1), பிரான்ஸ் (1), ஜெர்மனி (5), கிரீஸ் (10), இத்தாலி (10), ஜப்பான் (2), மலேசியா (23), மொரீசியஸ் (3), நெதர்லாந்து (3), நியூசிலாந்து (1), ஓமன் (1), ஹாங்காங் (10), ரஷியா (1), சிங்கப்பூர் (22), தென்ஆப்பிரிக்கா (3), தென் கொரியா (38) இலங்கை (38), தாய்லாந்து (2), ஐக்கிய அரபு நாடுகள் (1), இங்கிலாந்து (9), அமெரிக்கா (14) ஆகிய நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்,” என்றார் முதல்வர்.

25 போலீஸாருக்கு வெகுமதி

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய 25 போலீஸாருக்கு வெகுமதியாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என தமிழக அரசின் அறிவிப்பு வெளியான உடனே நகர் முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. உளவுத் துறை போலீஸôர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பீளமேடு பகுதியில் மாநாட்டுக்கு எதிரான வாசகங்களை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகம் செய்து கொண்டிருந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல், மாநாட்டு எதிராக சுவரொட்டிகளை ஒட்ட முயன்றது, மாநாட்டுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுபட்டது போன்ற செயல்களில் ஈடுபட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் குறித்து முன்கூட்டியே தகவல்களை சேகரித்துக் கொடுத்த உளவுத் துறை போலீஸாருக்கும், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க உறுதுணையாகச் செயல்பட்ட போலீஸாருக்கும் வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி, கொடிசியா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மாநாட்டுப் பாதுகாப்புப் பணியை சிறப்பாக மேற்கொண்ட 25 போலீஸாருக்கு தலா ரூ. 3 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் வெகுமதியாக வழங்கப்பட்டது. வெகுமதியைப் பெற்றவர்களுக்கு டிஜிபி லத்திகா சரண் வாழ்த்து தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இடம்பெற்ற, அரிய கண்காட்சியைக் காணத் தவறியவர்களுக்காக மேலும் ஒரு வாரம் அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

செம்மொழி மாநாட்டுப் பேரணியில் பங்கேற்ற ‘இனியவை நாற்பது’ அலங்கார ஊர்திகள் மக்கள் பார்வைக்காக மேலும் ஒரு வாரம் கொடிசியா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளன.
8 thoughts on “செம்மொழி மாநாடு… செலவு எவ்வளவு?

 1. palPalani

  ரஜினியை மிஞ்சிய கலைஞர்!
  30 நாள்ல 30 கோடி செலவழித்தார் அருணாச்சலம்!
  ௫ நாள்ல 500 கோடி செலவழித்தார் செம்மொழி மாநாட்டில் கலைஞர்!

  இது காலையில வந்த ஒரு sms.

 2. NTI

  வினோ…..,

  “”ஜூன் 24 முதல் 27 வரை நடைபெற்ற ஆய்வரங்குகளில் 55 தலைப்புகளில் 239 அமர்வுகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.””

  இதில் 28% கருணாநிதி குடூம்ப உறுப்பினர் ஆய்வுக் கட்டுரைகள் தன்.

 3. sakthika

  ஒரு மொழிய வச்சு குடுபமே வாழ்கிறதுந கலைஞர் கருணாநதி தான்.இவர் தமிழ் மொழிய வளர்கவில்லை தமிழ் தான் இவரை வளர்திருக்கு. ……………….இது தான் உண்மை ………..

 4. Juu

  இத்தோட நிறுத்தனா சரி!!!

  திருநெல்வேலி தமிழ்மொழி மாநாடு
  கோவை தமிழ்மொழி மாநாடு
  மதுரை தமிழ்மொழி மாநாடு
  Madras தமிழ்மொழி மாநாடுன்னு
  ஒவ்வொரு Slang க்கும் தனியா நடத்தாம இருந்த சரி..

 5. ravi

  கலைஞர் அவர்களே
  எங்கள் ஊர் நாகர்கோவிலில் சிம்ப்ளா ஒரு தமிழ் மாநாடு நடத்தணும் 300 கோடியில போதும், அடுத்த மாசம்.

  ஹி ஹி ஹி ……

 6. kennedy

  பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மக்களை பாதாளத்தில் தள்ளி அதில் வரும் பணத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பாதுகாப்பிற்கும்,தமிழர்களை அழித்த இலங்கை நாடுக்கும் கோடி கோடியாக பணத்தை கொடுக்கும் இந்திய அரசியல் வாதிகளை கண்டிக்கிறோம்

 7. karikalan

  இனம் அழிந்த பின்பு மொழி எதற்கு ///////////////////////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *