BREAKING NEWS
Search

சென்னை ரொம்ப காஸ்ட்லியான ஊர்! – அமீர்

சென்னை ரொம்ப காஸ்ட்லியான ஊர்! – அமீர்

திரைச்சீலைக்குப் பின்னே பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பம் மாதிரி, இத்தனை பொத்திப் பாதுகாத்து வந்த ‘யோகி’யின் ரகசியங்களை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அமீர்.

yogi-movie-stills-059

முறுக்கேறிய உடம்பும், சிவப்பேறிய கண்களுமாக டைரக்டர் அமீரின் தோற்றமே ஒரு ஹாலிவுட் நடிகர் ரேஞ்சுக்கு அசத்துகிறது.

“கதாநாயகன் என்று களம் இறங்கியபின், கதாபாத்திரமாக மாறுவதற்காக கொஞ்சம் மெனக்கெட்டுத்தானே ஆகவேண்டும். அதுதான் பத்திய சாப்பாடு, ஜிம், பயிற்சி என்று என் உடம்புக்கு இரண்டு வருடம் வாத்தியார் வேலை பார்க்க வேண்டியதாகி விட்டது”, என்கிறார் அழுத்தமான சிரிப்புடன்.

யார் இந்த யோகி?

yogi-movie-stills-060

“யோகியை, ஒரு நகர்புறத்து பருத்தி வீரன் என்று சொல்லலாம். சென்னையில் உள்ள குடிசைப்பகுதிதான் கதைக்களம். அங்கு வசிக்கும் யோகேஷ்வரன் என்கிற யோகி என்னும் இளைஞனின் உணர்வுகள்தான் கதை.

4 அடிக்கு 4 அடி அறையில் அவர்கள் நடத்தும் வாழ்க்கையையே தனி படமாக எடுக்கிற அளவுக்கு சுவாரஸ்யம் இருக்கிறது. அங்கேயும் பட்டதாரி இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒழுக்கமான பெண்கள் இருக்கிறார்கள். 100 நல்லவர்கள் இருந்தால், 4 கெட்டவர்கள் இருக்கிறார்கள்.

பசி எடுப்பதாக தெரிந்தால் சூழ்நிலை, சுற்றியிருக்கும் மனிதர்கள் என எதையும் யோசிக்காமல், அடித்துப் பிடுங்கி சாப்பிடும் கதாபாத்திரம்தான் யோகி. பசி இல்லை என்றால், அவன் பாட்டுக்கு சும்மா இருப்பான். சிங்கம் மாதிரி.

நடிப்பு அனுபவம் எனக்கு புதுசாகத்தான் இருந்தது. ஒரு இயக்குனராக எல்லோரையும் வேலை வாங்கியபோது, நடிகர்களின் சிரமங்கள் அவ்வளவாக தெரியாது. நானே களத்தில் நின்றபோதுதான் அதில் உள்ள கஷ்டங்கள் புரிந்தது. எனக்குள் இருக்கும் இயக்குனர் மூளை, நடிகர் அமீரை துரத்தி துரத்தி தொந்தரவு கொடுத்ததையும் மறக்க முடியாது.

நடிகராக அனுபவம் எப்படி?

yogi-movie-stills-062

எல்லாம் ரெடியாகி இயக்குனர் சிவா, ‘டேக்…ஆக்ஷன்’ என்று சொன்ன பிறகு காமிரா சரியாக இருக்கிறதா, டிராலி சரியாக போகிறதா, யாராவது குறுக்கே போகிறார்களா என்று பார்க்க ஆரம்பித்துவிடுவேன். அப்புறம் டைரக்டர் சுப்பிரமணியம் சிவா ஓடிவந்து, ‘நீங்க இப்போது கதாநாயகன். நடிப்பதை தவிர மற்றதைப்பற்றி யோசிக்காதீங்க’ன்னு சொல்வார். இப்படி பலமுறை எனக்கு நானே தொந்தரவாக இருந்தேன். அப்புறம் கொஞ்ச நாளில், அது சரியாகி விட்டது.

மூணு வேளையும் அசைவம் சாப்பிடுகிற ஆள் நான். யோகிக்காக பச்சை காய்கறி, சப்பாத்தி, அவித்த முட்டையில் வெள்ளை கரு ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டேன். உடல் எடையில், 7 கிலோ குறைந்து விட்டேன். திரையில் அமீர் தெரியக்கூடாது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் ஜெயிலுக்கு போனவர் என்கிற இமேஜ் தெரியக் கூடாது என்பதற்காக, மெனக்கெட்டேன்.

நடிகர் அமீர் தொடர்வாரா?

yogi-movie-stills-049

இந்த ‘நடிகர் அவதாரம்’ இடையில் எடுத்துக் கொண்டதுதான். தொடர்ந்து இதில் பயணிப்பதில் அமீருக்கு உடன்பாடு கிடையாது. எனக்கு டைரக்ஷனில் தான் ஆர்வம்.

இந்த படத்துக்காக, 161 நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இவ்வளவு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது ஏன்? என்று கேட்காதவர்களே இல்லை. சென்னை நகரில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வாங்குவதற்கு படும் பாட்டையே ஒரு கதையாக எழுதலாம். சின்ன சின்ன சீன்களுக்கே பல லட்சங்கள் செலவானது.

ஒருவழியாக படம் முடிவடைந்து மற்ற வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. ரூ.12 கோடி செலவில் தயாராகி இருக்கும் ‘யோகி’யை, தீபாவளிக்கு பார்க்கலாம்…”

கிளிநொச்சி என்ன ஆனது?

இப்போதைக்கு அந்தப் படத்தை எந்த அர்த்தத்தில் எடுப்பதென்று தெரியவில்லை. கிளிநொச்சியை மட்டும் இழந்த நேரத்தில் இந்தத் தலைப்பை பதிவு செய்தேன்.

ஆனால் இப்போது கிளிநொச்சி மட்டுமல்ல… எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம்.

இதில் அந்தப் படத்தை எங்கே தொடங்கி, எங்கே முடிப்பது என்று உண்மையிலேயே  எனக்குத் தெரியவில்லை. அதனால் இப்போதைக்கு அந்த யோசனையை நிறுத்தி வைத்திருக்கிறேன்…”, என்றார் அமீர்.
2 thoughts on “சென்னை ரொம்ப காஸ்ட்லியான ஊர்! – அமீர்

  1. கிரி

    //முறுக்கேறிய உடம்பும், சிவப்பேறிய கண்களுமாக டைரக்டர் அமீரின் தோற்றமே ஒரு ஹாலிவுட் நடிகர் ரேஞ்சுக்கு அசத்துகிறது.//

    ஹலோ ஹல்லல்லோ…

    வினோ இது நெம்ப ஓவர் 😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *