BREAKING NEWS
Search

இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி! – பகுதி -1

இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக்  கூட்டணி! – பகுதி -1

மிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் ஆர் சுந்தரராஜன். பாரதிராஜாவிடம் பணிபுரியாமலேயே, ஒரு வைராக்கியத்தில் அவரை குருவாக ஏற்றுக் கொண்டு, வெற்றி பெற்றுக் காட்டிய திறமையாளர்.

ilayaraja-melodies1

ஆர் சுந்தரராஜனைப் போல மிகச் சிறந்த கதை சொல்லியை தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது. அவர் சொல்லும் காட்சி அமைப்பில் அப்படியே தயாரிப்பாளர்கள் சொக்கிப் போய்விடுவார்கள் (ஆனால் சில நேரங்களில் சொன்னது போல எடுக்காமல் சொதப்பியதும் உண்டு!).

வசனங்கள் சாதாரணமாக இருக்கும்… நடைமுறையைச் சார்ந்து இருக்கும். ஆனால் காட்சியமைப்புகள் யதார்த்தத்தை மீறியதாக, கவிதைத்தனத்துடன் இருக்கும். குறிப்பாக பாடல் காட்சிகள். ஒவ்வொரு பாடலையும் அப்படி ரசித்துப் படமாக்கியிருப்பார் மனிதர். இயக்கிய பெரும்பாலான படங்களில் மகத்தான வெற்றிகளை அவர் பெற்றதற்குக் காரணம், அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வும், இசை ரசனையும்தான்.

முக்கியமாக அவரது படங்களில் அமைந்துவிடும் அதி அற்புதமான இசை அவரது வெற்றியில் சரிபாதி உரிமை பெற்றதாய் இருந்ததென்றால் மிகையல்ல. ஒரு சில படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஆர் சுந்தரராஜனின் எல்லாப் படங்களுக்கும் இசை இளையராஜாதான்.

‘ஆர் சுந்தரராஜன் இயக்கம், இசைச் சக்கரவர்த்தி இளையராஜா இசை’ என்று விளம்பரம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் படத்தின் மொத்த ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்த காலம் ஒன்றிருந்தது.

பயணங்கள் முடிவதில்லை!

ஆர் சுந்தர்ராஜன் – இளையராஜா கூட்டணியில் வெளிவந்த முதல்படம் பயணங்கள் முடிவதில்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பூரண ஆசியுடன் கோவைத்தம்பி துவங்கிய மதர்லாண்ட் பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு.

இந்தப் படத்துக்குதான் முதல் முறையாக இளையராஜாவுக்கு இன்னிசைச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தைச் சூட்டினார் கோவைத் தம்பி. கட் அவுட்கள், விளம்பரங்கள் அனைத்திலும் ராஜாவின் படம் தவறாமல் இடம்பெற்றன.

படம் வெளிவரும் முன்பே ஏழு பாடல்களும் சூப்பர் ஹிட். இசைத்தட்டு விற்பனையில் பெரும் சாதனை படைத்துக் கொண்டிருந்த எக்கோ நிறுவனத்துக்கு மிகப் பெரிய ஜாக்பாட்டாக அமைந்தது பயணங்கள் முடிவதில்லை.

எந்த கல்யாணம், கச்சேரியாக இருந்தாலும் இளைய நிலா…வும், ஆத்தா ஆத்தோரமா… பாடலும் தவறாமல் இடம்பெற்றன.

‘சாலையோரம் சோலையொன்று வாடும்…’ காதலர்களின் இதய மெட்டாக ஒலித்தது. அன்றைக்கு ரேடியோ மட்டும்தான் அனைவருக்கும் இருந்த ஒரே மீடியா. இதில் தமிழகத்தின் திருச்சி, திருநெல்வேலி, பாண்டி, கோவை, மதுரை, நெல்லை… என எந்த வானொலியைத் திருப்பினாலும் ‘டீஃபால்டாக’ ஒலித்தது ‘இளையநிலா…’தான்.

இன்னொரு பக்கம் இலங்கை வானொலியில் சதா சர்வ காலமும் ஒரு படப் பாடல் ரேஞ்சுக்கு பயணங்கள் முடிவதில்லை பாடல்களே ஒலித்தன.

அப்போதொல்லாம் ஒரு பழக்கம் இருந்தது.

புதுப் படம் என்றால் முந்தைய நாளே வாடகை சைக்கிளில் (சைக்கிளுக்கு ராத்திரி வாடகை ரூ.1, தியேட்டரில் டிக்கெட் விலை 0.75 பைசா!!) கிளம்பி விடுவார்கள் எங்கள் ஊரில்.

திருப்பத்தூருக்கு 14 கிமீ தூரம்… உற்சாகத்தில் நேரம் போவதே தெரியாது. 20 நிமிடத்துக்குள் தியேட்டருக்கு வந்து முதல் ஆட்டமோ, இரண்டாவது ஆட்டமோ (‘ஆட்டம்’தான் அப்போது… இப்போதான் ‘ஷோ’) பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கண்மூடும் இளைஞர்கள், விடிந்தும் விடியாததுமாய் வாராவதி மீது வரிசையாய் அமர்ந்தபடி ஆற ஆமர படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ‘ஏற்றி இறக்கி’ கிட்டத்தட்ட நடித்தே காட்டிவிடுவார்கள்.

படத்தில் இடம்பெற்ற பாட்டு முழுவதையும் சத்தம் போட்டுப் பாடுவோம். தாத்தாக்களும் பாட்டிகளும், ‘அப்படித்தான் ராசா… நல்லா பாடுங்கப்பா…’ என்று உற்சாகப்படுத்துவார்கள். வேலித் தடுக்குகளுக்கு (தட்டி) பின்னால் நின்றபடி முறைப்பெண்கள் நம் பாடலைக் கோட்கிறார்கள் என்ற உண்மை தெரிந்துவிட்டால் போதும், குரலுக்கு றெக்கை முளைத்து இளையராஜவாகவே மாறிவிடும்…

பின்னர் நேரம் கிடைக்கும்போது, 4 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் நூலகத்துப் போய் விகடன், குமுதத்தில் இந்தப் படங்களுக்கு என்ன விமர்சனம் வந்துள்ளது என்று பார்ப்பதில் அடக்கமாட்டாத ஒரு ஆர்வம் (டாபிக்குக்கு வெளியே போகிறேனோ…!).

அப்படி அனுபவித்து மீண்டும் மீண்டும் சைக்கிளில் பயணித்துப் பார்த்த படங்களில் ஒன்றுதான் இந்த பயணங்கள் முடிவதில்லை.

எல்லாப் பாடல்களும் இஷ்டம்தான் என்றாலும், எப்போதும் மனதுக்கு நெருக்கமாக இருப்பவை நான்கு பாடல்கள்:

1.இளைய நிலா பொழிகிறதே…

2.தோகை இளமயில் ஆடி வருகுது…

3.சாலையோரம் சோலையொன்று வாடும்…

4.மணியோசை கேட்டு எழுந்து…

இந்த நான்கில் முதல் மூன்று பாடல்களையுமே வைரமுத்துதான் எழுதியிருந்தார். நான்காவது பாடலை முத்துலிங்கம் எழுதியிருந்தார்.

இவை தவிர, ஆத்தா ஆத்தோரமா…, வைகறையில் வைகை கரையில் பாடல்களை கங்கை அமரன் எழுதியிருந்தார். மற்றொரு பாடலான ராக தீபம் ஏற்றும் நேரம்… முத்துலிங்கத்தால் எழுதப்பட்டது.

நிழல்கள் படம் மூலம் வைரமுத்துவுக்கு பெரிய அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்த ராஜாவின் இசை, பயணங்கள் முடிவதில்லை மூலம் அவரை புகழேணியின் உச்சத்தில் ஏற்றி விட்டது.

எஸ்பிபி – ஜானகியின் குரல்களில் அத்தனைப் பாடல்களிலும் அமுதம் வழிந்தது. ராஜாவின் ராஜாங்கம் தமிழகத்தில் கிட்டத்தட்ட பூரணமாய் இருந்த நேரம்.

வசனக் காட்சியமைப்பில் காட்டுவதை விட அதிக கவனத்தை ராஜாவின் பாடல்களைப் படமாக்குவதில் காட்டுவார் சுந்தர்ராஜன். அவரது அனைத்துப் படங்களையும் பார்த்தவர்களுக்கு இது நன்கு தெரியும். ஒரு நல்ல ரசிகனால்தான் அப்படி ரசித்துப் படமாக்க முடியும். குறிப்பாக, பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, என் ஜீவன் பாடுது, தழுவாத கைகள்…

1.இளைய நிலா பொழிகிறதே…

2. மணியோசை கேட்டு எழுந்து…

நான் பாடும் பாடல்

ஆர் சுந்தர்ராஜன் – இளையராஜா காம்பினேஷனில் வந்த இரண்டாவது படம் நான் பாடும் பாடல். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் கோவைத் தம்பிதான்.

விதவைத் திருமணத்துக்கு ஆதரவான கருத்து வேகமாகப் பரவத் தொடங்கிய காலத்தில், அதற்கு எதிராக இப்படி ஒரு படமா என விமர்சனம் கிளம்பினாலும், படம் பெரிய வெற்றியைப் பெற்றது. காரணம், இளையராஜாவின் அற்புதமான இசை மற்றும் கவுண்டரின் அதிர்வேட்டு நகைச்சுவை.

‘பாடவா உன் பாடலை…’ – இருமுறை ஒலிக்கும் இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து.

மச்சானை வச்சுக்கடி… (கங்கை அமரன் -ஷைலஜா) மற்றும் சீர் கொண்டு வா… (எஸ்பிபி – ஜாணகி) பாடல்களை கங்கை அமரனும், பாடும் வானம்பாடி …(எஸ்பிபி )- யை நா காமராசனும், தேவன் கோயில் தீபமொன்று  (சுரேந்தர் – ஜானகி மற்றும் ஜானகி தனியாகவும்…)  பாடலை முத்துலிங்கமும் எழுதியிருந்தனர்.  எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை!

3. பாடவா உன் பாடலை…

4. சீர் கொண்டு வா…

வைதேகி காத்திருந்தாள்…

vaidhehikathirunthal

நினைவுகளை என்றும் இனிமைப்படுத்தும் அருமையான இசை, நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் கவுண்டமணியின் நகைச்சுவையில் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது.

ராஜாவுக்கு நிகராக யாருமில்லை என்ற நிலையை உருவாக்கிய மாபெரும் வெற்றிப் படம். விஜய்காந்தின் திரையுலக வாழ்க்கையையே புரட்டிப் போட்ட படம் இது.

இதில் பெரும்பாலான பாடல்களை ராஜாவின் விருப்பமான குரலுக்குச் சொந்தக்காரரான பி ஜெயச்சந்திரன் பாடியிருப்பார். அலட்டிக் கொள்ளாத, ஆனால் கண்களை கசிய வைக்கும் உருக்கமான குரலுக்குச் சொந்தக்காரர் ஜெயச்சந்திரன்.

குறிப்பாக அவரும் வாணி ஜெயராமும் பாடிய ஒரு பாடல், கர்நாடக சங்கீத விற்பன்னர்களை வாயடைத்துப் போகச் செய்தது. எல்லாப் பாடல்களையும் வாலி மற்றும் கங்கை அமரன் இருவரும் எழுதியிருந்தார்கள். அதிலும் ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே…’ பாடலை எழுதியவர் கங்கை அமரன்!

5. இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே…

6. ராசாத்தி உன்னை…,

இந்தப் பாடல்கள் தவிர, ராசாவே உன்னை (பி சுசீலா – வாலி), காத்திருந்து காத்திருந்து (ஜெயச்சந்திரன்- வாலி), அழகு மலராட (எஸ் ஜானகி, ராகவேந்தர் – வாலி), மேகம் கருக்கையிலே புள்ள தேகம் சுடுகுதடி (இசைஞானி இளையராஜா)… போன்ற பாடல்கள் ரசிகர்களை இருக்கையை விட்டு எழ முடியாத அளவுக்குக் கட்டிப் போட்டன.

அம்மன் கோயில் கிழக்காலே…

இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்-விஜய்காந்த் கூட்டணியில் உருவான இன்னொரு படம் அம்மன் கோயில் கிழக்காலே…

‘முதலில் ராஜாவிடம் பாடல்களை போட்டுத் தரச்சொல்லிவிட்டு, பின்னர் அந்தப் பாடல்களுக்கேற்ப கதையை உருவாக்கியிருப்பாரோ சுந்தர்ராஜன்…’ என யோசிக்க வைக்கும் அளவுக்கு அப்படியொரு மகா இனிமை, அத்தனை பாடல்களிலும்.

இந்தப் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். எட்டுத் திக்கும் இன்றும் தூள்கிளப்பும் அற்புதமான மெட்டுக்கள்.

அவற்றில் ஒன்றைக் கேட்டுக் கொண்டே இருங்கள்…. அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் தொடர்ச்சி மற்றும் இந்தப் பதிவின் அடுத்த பகுதியை நாளை மறுநாள் தருகிறேன்!

7. உன் பார்வையில்…

-சங்கநாதன்
14 thoughts on “இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி! – பகுதி -1

 1. r.v.saravanan

  sanganathan sir,
  very good keep it up

  padum vanambadi padalai sollavillaiye sir

 2. Manoharan

  You have made me to go back to those Golden Periods of Raja. Jayachandran’s Voice is mesmerising to hear. As you said whenever i used to see these movies i used to feel that Raja’s songs only carrying the movie along with story. Without Raja’s songs and Gounder’s Comedy all Sundarrajan’s movies would not have been such a hit. Expecting your post on “Mella Thirandhathu Kathavu”

 3. Suresh கிருஷ்ணா

  அம்மன் கோயில் கிழக்காலே வருவதற்கு முன் சுந்தர்ராஜன் இன்னொரு படம் எடுத்தார்… குங்குமச் சிமிழ். அருமையான பாடல்கள். லிஸ்டில் விட்டுடப் போகுது….

  -Suresh கிருஷ்ணா

 4. கோபிநாத்

  அற்புதமான தொகுப்பு….தொடருங்கள் 😉

  இந்தியாவிலேயே ஒரு இசையமைப்பாளருக்கு 60வது அடியில் கட் அவுட் வைத்தார்கள் என்றால் அது இசை தெய்வம் ராஜாவுக்கு தான். அதை வைத்தவர் கோவைத்தம்பி. (ஒரு சிறய செய்தி குறிப்பில் படித்தது)

 5. Rajan

  Vino,

  Dont forget to write more about my favourite movie with this great combination along with one more legend our own superstar – Rajadhi Raja. Expecting more interesting on this movie and its evergreen songs.

  Rajan.

 6. Laxman

  Sir,

  Pls publish – Rajini’s Therinthe Marutha Super hit Padangal’s Remaing parts.

  – Longggggggggggggggggggggggggggggggggg time since you published

 7. saravanan

  Romba nalla pathivu. en manasula iruntha taste apdiye ezhuthiyirukkinga.very nice.
  keep it up.
  (one more. SEER KONDU VAA song than NA.KAMARASAN eluthinathu)

 8. காத்தவராயன்

  //மச்சானை வச்சுக்கடி… (கங்கை அமரன் -ஷைலஜா) மற்றும் சீர் கொண்டு வா… (எஸ்பிபி – ஜாணகி) பாடல்களை கங்கை அமரனும், //

  மச்சானை வச்சுக்கடி வாலி எழுதிய பாடலாச்சே சங்கநாதன் சார்.

  //கருக்கையிலே புள்ள தேகம் சுடுகுதடி (இசைஞானி இளையராஜா)//

  இது பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *