BREAKING NEWS
Search

சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குவதைக் கண்டித்து நடந்த போராட்டத்தின்போது ஆவேசமாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகித்துள்ளது தமிழக அரசு.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை வெறியர்கள் தொடர்ந்து தாக்கி வருவதைக் கண்டித்தும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சீமான் ஆவேசமாக பேசினார். இதையடுத்து அவர் மீது வன்முறை, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தற்போது சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ளது.

இன்று காலை சீமான் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்குச் சென்ற போலீஸார், அவரிடம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவை வழங்கினர்.

கடந்த ஆண்டும் இதேபோல தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் அடைக்கப்பட்டார். ஆனால் அது செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் விடுதைலயானார். இந்த நிலையில் தமிழக மீனவர்களின் அவதி நிலையை குறிப்பிட்டு ஆவேசமாக பேசியதற்காக மீண்டும் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இதைக் கண்டித்து யாரேனும் போராட்டம் நடத்தினாலோ அல்லது போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை ஒட்டினாலோ அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாழடைந்த சிறை அறையில் சீமான் அடைப்பு

இதற்கிடையே, தன்னை பல வருடங்களாகப் பயன்படுத்தாமல் உள்ள பாழடைந்த சிறை அறையில் அடைத்து வைத்துள்ளதாக நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் புகார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பாழடைந்த தனி அறையில் என்னை சிறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளனர். இது சட்ட விரோதமான செயல். எனவே எனக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி உத்தரவிட வேண்டும். மேலும் தனிமை சிறையை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் நாகப்பன், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

அப்போது அரசு கூடுதல் வக்கீல், சீமான் தனிமைச் சிறையில் வைக்கப்படவில்லை என்றார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப் பூர்வமாக அரசு பதிலளிக்குமாறு கூறி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை அன்றைக்கு ஒத்திவைத்தனர்.
5 thoughts on “சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது

 1. raj.s

  செம காமெடி ., இலங்கை எ கண்டிச்சு பேசினா,தேசிய பாதுகாப்பு சட்டம்..இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் போல உள்ளது. தமிழ் நாடு தனி நாடு போல் உள்ளது. .

 2. Cuddalore Shanthakumar

  சட்டத்திற்கு வார்த்தைதான் முக்கியமென்றால், இவ்வாறு பேசும் எல்லோரையும் கைது செய்திருக்க வேண்டுமல்லவா? உதாரணத்திற்கு, கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்கனேக்கல் பிரச்சனையில் தமிழரின் எதிர்ப்பை வெளிப்படுத்த சென்னை சேப்பாக்கத்தில் திரைப்பட நடிகர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள். அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஒகேன‌க்க‌ல் க‌ர்நாடகாவு‌க்கு சொ‌‌‌ந்த‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள். 10 வருடத்திற்கு முன்னால் போட்ட ஒப்பந்தம் இத்திட்டம். ஒகேனக்கல் தமிழகத்திற்கு சொந்தம். நம்ம தண்ணீரை நாம எடுக்கக் கூடாதுன்னு சொல்பவனை ஏன் உதைக்கக் கூடாது?” என்று பேசினார். இது கன்னட, தமிழ் பேசும் மக்களிடையே பகைமையை ஏற்படுத்தக்கூடிய பேச்சாக எடுத்துக் கொண்டு அன்றைக்கு தமிழக அரசு ஏன் அவர் மீது வழக்குப்போடவில்லை?

  “ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌ல் முழுமையாக கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த இந்தியா துண்டு, துண்டாக போகாமல் இருப்பதற்கு மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி தீர்த்துவைக்கவேண்டும்” என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூ‌றினா‌ர். ஒகேனக்கல் பிரச்சனையை தீர்க்காவிட்டால் இந்தியா துண்டு, துண்டாக சிதறிவிடும் என்று பேசியதாக ஏன் சரத்குமார் மீது வழக்குப் போடவில்லை?

 3. Muthu

  தமிழ் நாட்டில் கொலைப்பாதக செயல்களில் ஈடுப்பட்ட டக்ளஸ் தேவானந்தா போன்ற காட்டி கொடுக்கும் எட்டயப்பர்கள் ராஜ மரியாதையுடன் வந்து விட்டு செல்வார்கள் ஆனால் அதே தமிழ் நாட்டில் தமிழனுக்கு கொடுமை நடப்பதை தட்டி கேட்டால் அந்த புரட்சியாளனை கொட்டடியில் தள்ளி அடக்குமுறையை கொண்டு வதைப்பார்கள்…. எங்கே வைகோ, சீமான் போன்ற தமிழ் உணர்வாளர்கள் கட்ட பொம்மன் போல் கர்ஜித்து இன உணர்வின்றி சுய நல அடிமைகளாக தூங்கி கொண்டு இருக்கும் தமிழர்களை தெளிய வைத்து எழுப்பி விட்டு விடுவார்களோ அப்புறம் தனது குடும்ப வாரிசுகளின் ஆட்சி உரிமை பறிக்க விட்டு விடுமோ என்ற பயத்தினால் தான் தூங்காமல் நயவஞ்சகம் திட்டம் போட்டு கொண்டிருக்கிறார் இந்த கிழ ஆட்சியாளன்….

  தூங்கி கொண்டுருக்கும் தமிழ் இன கூட்டம் ஒரு நாள் விழித்து எழும் இத்தகைய குள்ள நரிகளை விரட்ட, தங்களது விடியலின் தலைவனை அடையலாம் காட்ட…

 4. Cuddalore Shanthakumar

  நடுநிலையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் , முந்தைய பதிவை பிரசுரியுங்கள்

 5. Muthu

  சீமான் போன்ற தமிழ் இன உணர்வாளர்களுக்கு அதரவாக தமிழ் இன மக்கள் கிளர்ந்து எழ வேண்டும்… சிங்கள, இந்திய, தமிழக அரசுகளுக்கு எதிராக… போராட்ட களத்தை அமைத்து தமிழர்கள் தங்கள் தன்மானத்தை நிருபிக்கவேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *