BREAKING NEWS
Search

சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி வெடிக்கும்: இரா சம்பந்தன்

சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி வெடிக்கும்: சம்பந்தன்

கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியில் இலங்கை அரசின் TamilNational_Sampanthanஆதரவுடன் சிங்களர்கள் குடியமர்த்தப்படுவது தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்.

கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சண்டை டைம்ஸ்’ வார ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டி:

வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விடயத்தை சிறிலங்கா அரசு கையாளும் விதம் எமக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் முகாம்களில் இருந்து அப்படியே அள்ளிச் செல்லும் மக்களை முறையான அடிப்படை வசதிகள் எதனையும் வழங்காது அங்காங்கே உதறித் தள்ளி விடுகிறது அரச எந்திரம்.

அவர்களுக்கு வீடுகளும் கிடையாது, வருமானத்திற்கான வழிகளும் கிடையாது. விவசாயத்திலோ மீன்பிடித் தொழிலிலோ ஈடுபடாமல் அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காது. பலர் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையில் அவர்களின் சொந்த பூமி வன்னிப் பிரதேசமாகும்.

மீள்குடியமர்த்தப்பட்ட பல குடும்பங்கள் இப்போது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலேயே வாழ்கின்றன. வாழ்க்கையை திரும்ப ஆரம்பிப்பதற்கு வெறும் 5,000 ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது. எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போய் இருக்கிறார்கள்.

சில குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன. ஏனெனில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்னும் ஒன்று சேர்க்கப்படவில்லை. தமது குடும்பத்தினர் இருக்கும் இடங்களை அறிய அவர்கள் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.

சிங்களக் குடியேற்றம்:

அரச ஆதரவு சிங்களக் குடியேற்றத் திட்டம் ஒரு சிக்கலான சூழல். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வெளி இடங்களில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து கிராமங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதற்கான நம்பகமான தகவல்கள் என்னிடம் உள்ளன.

தமிழர்களின் ஆயுதக் கிளர்ச்சி உருவாவதற்கு சிங்களக் குடியேற்றங்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் மீண்டும் அவை தொடங்கப்பட்டுள்ளன. இது மற்றொரு ஆயுதக் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

துன்பியல் நிகழ்வாக, அதிகாரங்களைப் பகிரும் விஷயத்தில் இலங்கை அரசின் நிலைப்பாடு பாதகமாகவே இருக்கிறது. ஒரு சரியான தீர்வைக் கொண்டு வரும் முயற்சியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழுவும் கூடத் தோல்வியே அடைந்துள்ளது. அரசின் தீர்வுத் திட்டத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி ஒன்றை அரசு வைத்திருக்கிறதா என்பதே எங்களுக்குத் தெரியவில்லை.

தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக…

தமிழ் பேசும் மக்கள் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றோம். குறைந்தபட்ச வேலைத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாத் தமிழ்க் கட்சிகளும் பொதுக் காரணதிற்க்காக ஒன்றிணைந்தால் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதுடன் நமது நில உரிமையையும் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம்…” என்று அவர் கூறியுள்ளார்.
One thought on “சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி வெடிக்கும்: இரா சம்பந்தன்

  1. Manoharan

    ///தமிழ் பேசும் மக்கள் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றோம்///

    Best Wishes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *