BREAKING NEWS
Search

சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில் -6

சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில்-6

ஈழத் தமிழ்ப் போராளிகளுக்குள் இப்போது மூண்டுள்ள இந்த மோதல் எந்த அளவு தமிழீழ நோக்கத்துக்கு குந்தகமாக அமையும்? ஈழத் தமிழரின் வாழ்வு மலர தாயகத் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ப.கலையரசன், pattukalai@yahoo.com

camp-2

குழப்பத்தில்தான் தெளிவு பிறக்கும். இப்போதைக்கு புலத்தில் உள்ள போராளிகள் பிளவுபட்டிருப்பது உண்மையே.

ஆனாலும் இவை அனைத்தும் விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை, புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே நிலவுகிறது. இது ஒரு தற்காலிக நிலைமைதான். ஆனால் இதெல்லாம் இப்போது முக்கியமில்லை.

இப்போது நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம், முள்கம்பி வேலிக்குள் வாழ்க்கை முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்களை மீளக் குடியேற்றுவதற்கான வழிமுறைகளே. நாளும் வருகிற செய்திகள், அந்த மக்களுக்கு உரிமையுள்ள பூமி பறிபோய்க் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. தமிழரின் சொந்த நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் வெகு வேகமாக நடந்து வருகின்றன.

வெறும் பார்வையாளர்களாக அனுதாப வார்த்தை உதிர்ப்பதால் ஒன்றும் நடந்துவிடாது. எனவே ஈழ தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும், புலத்தில் உள்ள போராளிகள் மற்றும் உணர்வாளர்களின் இப்போதைய நோக்கம், சிந்தனை, செயல்பாடு இதுவே.

பிரியாணி, நூறு ரூபாய்த்தாள், பிரச்சார பொழுது போக்குகளில் அமிழ்ந்து கிடக்கும் தாயகத் தமிழர்கள் இதற்கு எந்த அளவு உதவுவார்கள் என்பது புரியவில்லை.

மேடைகளிலும், டிவி விவாதங்களிலும், பத்திரிகைப் பக்கங்களிலும் வாய் கிழிய, பேனா முனை மழுங்குமளவுக்கு தமிழுணர்வு என்றும் தமிழ்த் தேசியம் என்றும் முழங்கியவர்கள், ரகசியமாக ஹம்ஸாவின் விருந்தில் கூடிக் குடித்துக் களித்து, கையூட்டோடு வீடு திரும்பும் காலம் நீளும் வரையில், இந்த பிரியாணிக் கலாச்சாரமும் நீளும் என்றே தெரிகிறது.

ஈழத் தமிழரின் இன விடுதலை தாயகத் தமிழர்களால் நடக்காது. அவர்களே கையையூன்றி கரணம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்!

**********

ஜெயலலிதாவின் தேர்தல் புறக்கணிப்பு திமுகவுக்கு உறைக்கும் என்கிறீர்கள்?

மலர், malaredit@gmail.com

karunanidhijayalalitha

நிச்சயம் இல்லைதான். திமுக இப்போது அதையெல்லாம் கவனிக்கிற மனநிலையில் இல்லை. காரணம், அவர்களுக்குத் தேவை வெற்றிகள் மட்டுமே…

ஈழத்தில் தமிழன் செத்தாலும், இங்குள்ளோர் எத்தனையோ பிரச்சினைகளில் தவித்தாலும், தங்கள் இலக்குகளை அடைவதில் மிகத் தெளிவாக உறுதியாக இருக்கிறார்கள். இது ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் நிறுவனத் தலைமைக்கே உரிய மனநிலை.

இன்னொன்று, தார்மீகம் பற்றியெல்லாம் ஜெயலலிதா பேசக் கூடாது. கலைஞர் எதிர்வரிசையில் இருந்திருந்தால் இன்று அவரும் ஜெயலலிதா முடிவை எடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும். 1991-லிருந்து ஜெயலலிதாவின் அரசியலை நாமும் பார்த்து வருகிறோம்.

‘இவருக்கு அவர் பரவாயில்லை… அவருக்கு இவர் தேவலை’ என்று இந்த இருவர் நாடகத்தில் மட்டுமே தமிழர் கவனம் இருக்க வேண்டும் எனத் தெளிவாகத் திட்டமிட்டு தங்கள் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர் திமுக-அதிமுக ‘முதலாளிகள்’.

**********

குப்பை படங்களையெல்லாம் தூக்கி நிறுத்த சன்டிவி பயன்படுத்தும் வியாபார உத்தி, நாளை ‘தலைவர்’ படத்தை பாதிக்காதா?

மணிவண்ணன், powersstar@yahoo.co.in

endhiran-stills1

து ரஜினி – ஷங்கர் படம். அது ஒன்று போதும். சூரியனுக்கு டார்ச் அடிக்க தேவையில்லை என்ற வழக்கமான பழமொழியைத்தான் உங்களுக்கு நானும் சொல்வேன். தங்கள் வர்த்தக உத்திகளைத் தாண்டிய மாபெரும் ஈர்ப்புத் தன்மை இந்தப் படத்துக்கு உண்டு என்பது சன்னுக்கே நன்கு தெரியும்!

**********

தொடர்ந்து தோல்விப்படங்களாகவே வருகின்றனவே… தமிழ் சினிமாவில் அத்தனை கதை / கற்பனை வறட்சியா?

எஸ். சக்திகுமார், shakthi41@hotmail.com

jun06_tamil

விட்டா குடுமி… அடிச்சா மொட்ட… இதுதான் பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்கள் – தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்ததெல்லாம்.

பெரிய கார்ப்பரேட் ரேஞ்சுக்கு திட்டமிட்டு, பெட்டிக்கடை வியாபாரம் நடத்தும் விநோதமானவர்கள் இவர்கள். முதல் படத்திலேயே இருந்த மொத்த சரக்கும் தீர்ந்துபோய், இரண்டாவது படத்துக்கே பர்மா பஜார் டிவிடி கடையின் தயவைத் தேடும் இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

முதல் படத்தில் வெற்றி பெற்ற இயக்குநர் நான்கு படங்கள் வரை கூட இன்றைக்கு தாக்குப் பிடிப்பதில்லை. காரணம் படிப்பதில் நாட்டமின்னை, அனுபவ அறிவு இல்லாமை.

சொல்வதெல்லாம் பொய்… சரியான திட்டமிடல் கிடையாது. மதுவுக்கும் மாதுவுக்கும் செய்யும் செலவை படத்தின் நியாயமான விளம்பரத்துக்குச் செய்ய மாட்டார்கள்.  நாடோடிகளின் வெற்றிக்குக் காரணம் சரியான ஸ்கிரிப்ட் மட்டுமல்ல… அதை சந்தைப்படுத்திய முறையும் கூட.

சில பிஆர்ஓக்களின் தவறான வழிகாட்டுதலில் கடைசி நேரத்தில் இவர்களே தங்கள் படத்துக்கு தூக்குக் கயிறு மாட்டி விடுகிறார்கள். அப்புறம் எங்கே உருப்படும் இவர்கள் எடுக்கும் படங்கள்?

**********

வறாக நினைக்க வேண்டாம். என்னைப் போன்ற பல ரசிகர்களுக்கு உள்ள சந்தேகம் இது. சுல்தான் வெற்றிப் படமாக அமையும் என நம்புகிறீர்களா?

சிவராம், sivarajini@gmail.com

sultan

ந்தப் படம் வழக்கமான படம் அல்ல… ஆனால் ஒரு ரஜினி படத்துக்கான அத்தனை குதூகலமான அம்சங்களும் படத்தில் இருக்கும். படத்தில் வரும் ரஜினியின் உருவம் அனிமேஷன் என்றாலும், நிஜத்தில் அந்தப் பாத்திரமாக ரஜினிதான் நடித்திருக்கிறார்.

இன்னொன்று இன்றைய தலைமுறைக்கு மிகவும் பரிச்சயமான, கடந்த தலைமுறையை ஆச்சர்யப்படுத்தும் தொழில்நுட்பத்தில் இந்தப் படம் தயாராகிறது.

“இந்தியாவில் இதுவரை யாரும் மேற்கொண்டிராத ஒரு வித்தியாசமான, ஆனால் ஜனரஞ்சகமான முயற்சி இது. அப்பாவின் படங்களுக்கே உரிய வெற்றியை நிச்சயம் ஈட்டும்!” என்கிறார் சௌந்தர்யா ரஜினி.

ஒரு ரஜினி ரசிகருக்கு வேறென்ன வேண்டும்… கொண்டாடத் தயாராக வேண்டியதுதானே!

-வினோ
5 thoughts on “சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில் -6

 1. Suresh கிருஷ்ணா

  மிக அருமையான கருத்துக்களை பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே…

  *****மேடைகளிலும், டிவி விவாதங்களிலும், பத்திரிகைப் பக்கங்களிலும் வாய் கிழிய, பேனா முனை மழுங்குமளவுக்கு தமிழுணர்வு என்றும் தமிழ்த் தேசியம் என்றும் முழங்கியவர்கள், ரகசியமாக ஹம்ஸாவின் விருந்தில் கூடிக் குடித்துக் களித்து, கையூட்டோடு வீடு திரும்பும் காலம் நீளும் வரையில், இந்த பிரியாணிக் கலாச்சாரமும் நீளும் என்றே தெரிகிறது.

  ஈழத் தமிழரின் இன விடுதலை தாயகத் தமிழர்களால் நடக்காது. அவர்களே கையையூன்றி கரணம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்!*****

  -இந்த வரிகளில் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள், தமிழர்களின் மனப்போக்கு போன்றவற்றை அம்பலமாக்கிவிட்டீர்கள்.

  *****இவருக்கு அவர் பரவாயில்லை… அவருக்கு இவர் தேவலை’ என்று இந்த இருவர் நாடகத்தில் மட்டுமே தமிழர் கவனம் இருக்க வேண்டும் எனத் தெளிவாகத் திட்டமிட்டு தங்கள் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர் திமுக-அதிமுக ‘முதலாளிகள்’****

  -இந்த வரிகளில் தமிழ்நாட்டு அரசியலையே தோலுரித்து விட்டீர்கள்.

  என் கவலையெல்லாம்… உங்களின் இந்த சிறப்பான எழுத்துக்கள் இன்னும் பரவலான வாசகர்களைச் சேர வேண்டுமே என்பதுதான்.

  -Suresh கிருஷ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *