BREAKING NEWS
Search

கோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்!


கோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்!

eelanaduகோத்தபயா ராஜபக்சேவுடன் இணைந்து மோசடி நாடகத்தை அரங்கேற்றுகிறார் புலிகளின் முன்னாள் தளபதி ராம். இந்த நாடகத்தில் தலைமை எருமையாக கோத்தபயாவும், சூர்ய காந்தியாக ராமும் சிறப்பாக நடித்து எருமைக்கூட்டத்தின் விருதுகளை தட்டிக் கொண்டாலும் தமிழர்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளப் போவதில்லை என ஈழநாடு பத்திரிகை கூறியுள்ளது.

மாவீரர் நாளில், விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் கொள்கை விளக்க உரை அளித்தது. தலைவர் பிரபாகரன் வழிகாட்டலில் தொடர்ந்து போராட்டம் என்றது அந்த அறிக்கை.

ஆனால் தலைவர் பிரபாகரன் இனி இல்லை என்றும், அவரது இடத்தில் இனி தாமே இருந்து போராட்டத்தை நடத்தப் போவதாகக் கூறி மாவீரர் அறிக்கை வாசித்தவர் முன்னாள் புலி தளபதி ராம். இலங்கை அரசின் கைப்பாவையாக இவர் மாறி வருவதாகவும், பனகொட முகாமில் சகல வசதிகளுடனும் தனக்கு சாதகமான சில முன்னாள் தளபதிகளுடனும் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலை ஒரு சொற்சித்தர வடிவில் வெளியிட்டுள்ளது ஈழநாடு பத்திரிகை.

‘கோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்!’ என்ற நாடக வடிவில் சமீபத்தில் ஈழநாடு வெளியிட்டுள்ள அந்த சொற்சித்திரம்:

சூரிய தேவனின் வரவினால் சூரியகாந்திப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. சூரிய தேவனை வாழ்த்தித் துதித்தன.

சூரிய தேவனே! தங்களது வாழ்தலுக்கான உயிர் சக்தி எனத் தொழுதன. நண்பகல் பொழுது நெருங்க நெருங்க சூரிய தேவனின் ஒளிக் கதிர்களின் வெப்பம் அதிகரித்துச் சென்ற போதும், அதனையும் சுகமாகவே மகிழ்ந்து அனுபவித்தன சூரியகாந்திப் பூக்கள்.

மாலைப் பொழுது நெருங்கி வந்து கொண்டிருந்த வேளையில், காட்டெருமைக் கூட்டம் ஒன்று இந்தத் தோட்டத்தினுள் நுழைந்து அத்தனை செடிகளையும் நாசம் பண்ணின. சூரிய காந்திகள் குய்யோ முறையோ என்று ஓலமிட்டன. ஆனாலும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட முடியாததாகி விட்டது.

அந்த மூத்த சூரியகாந்தி இந்த அழிவுகளிலிருந்து தான் மட்டுமாவது தப்பிவிடலாம் என்று முயற்சி செய்தது. எருமைக் கூட்டத்தின் தலைமை எருதுடன் சமரசம் பேசியது. ‘என்னை விட்டுவிடு! என்னை மட்டும் விட்டுவிடு! உனக்கு என்ன வேண்டுமோ, அத்தனைக்கும் நான் உனக்கு உதவுகின்றேன்’ என்று ஓலம் போட்டது.

‘உங்கள் இனம் சூரிய தேவனைக் கடவுளாக வழிபடுகின்றது. நிலத்தில் வாழும் எங்களது சக்தியை உணரவில்லை. நாங்கள் நினைத்தால் எங்களால் உங்களை அழித்து விட முடியும்… எங்கள் சக்திக்கு மேற்பட்டவனா இந்த சூரிய தேவன்…?

எங்களைத் தொழுது… உங்களை வாழவிடும் தெய்வங்களாக எங்களை ஏற்றுக்கொண்டால் உன்னையும் உனது குடும்பத்தினரையும் விட்டு விடுகிறேன். உன்னை எங்கள் பட்டித்தொழுவத்தில் இராஜ மரியாதையுடன் வாழ வைக்கிறேன்’ என்றது.

அந்த சூரியகாந்திக்கு வேறு தெரிவு கிடைக்கவில்லை. எருமை கூறிய அத்தனைக்கும் ஒப்புக்கொண்டு, அந்த எருமையுடன் புறப்பட்டது.

போகும் பாதையில் அந்த எருமை கேட்டது… ‘உண்மையாகவே… உங்கள் இனம் எங்களைக் கடவுளாக ஏற்றுக்கொள்வார்களா…?’ சந்தேகத்துடன் கேட்டது.

சூரிய காந்தி எதிர்பார்த்திராத கேள்வி அது. எருமையின் வாயில் அதன் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது.

வேறு வழியின்றித் தவித்த அந்த சூரியகாந்தி ‘அது உடனடியாகச் சாத்தியப்படாது… சாத்தியப்படாது. நான் முதலில் என்னை சூரிய தேவனாக ஏற்றுக்கொள்ளச் செய்கின்றேன். அதன் பின்னர் எங்கள் இனத்தை உங்கள் விருப்பப்படியே எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளச் செய்ய என்னால் முடியும். தயவு செய்து எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிவிடாதே’ என்று கெஞ்சியது.

‘நீ என்ன செய்வாயோ… ஏது செய்வாயோ… எங்களைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளச் செய்யாவிட்டால் உன் எதிர்காலத்தையே சிதைத்து விடுவோம்’ என்று மிரட்டியது.

அதற்குச் சம்மதித்த அந்தச் சூரியகாந்தியை அதன் கூட்டத்திடம் தொடர்பு கொள்ள அனுமதித்தது.

மாலை… சூரிய தேவன் மறைந்த தருணத்தில் சூரியகாந்தி தன் கூட்டத்துடன் பேசியது.

‘அன்பான சூரியகாந்திச் செடிகளே! சூரிய தேவன் மறைந்துவிட்டான். இனி அவன் மீண்டும் வருவதற்குச் சாத்தியமே இல்லை. அவன் மறையும் முன்னதாக எனக்கு ஒரு ஆணை இட்டுள்ளான்.

சூரிய தேவன் இல்லாத உங்கள் குறையை என்மூலம் தீர்க்கும் தனது முடிவை எனக்குத் தெரிவித்துவிட்டே மறைந்தான். எனவே நான்தான் இனி உங்கள் சூரிய தேவன். என்னையே நீங்கள் கூரிய தேவனாக ஏற்றுக்கொண்டு தொழ வேண்டும்’ என்றது.

சூரியகாந்திகள் மனதுக்குள் சிரித்துக்கொண்டன. எருமையின் வாயில் அகப்பட்டுக்கொண்ட தனது நண்பனுக்காக அவை வருந்தின. எருமையின் திட்டத்தை அந்த சூரியகாந்தி நிறைவேற்றத் துடிக்கும் அதன் அவலத்தைப் புரிந்து கொண்டன.

இந்த உருவக நாடகத்தில் பாவப்பட்ட சூரியகாந்தியாக தளபதி ராம் அவர்களும், தலைமை எருமையாக கோத்தபாய ராஜபக்சேவும் திறமையாக நடித்து எருமைக் கூட்டத்தின் பல விருதுகளைத் தட்டிக்கொண்டாலும் சூரியகாந்திகள் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை.

‘பாவம்… அந்த சூரியகாந்தி…’ என்ற வருத்தத்துடன்… விடியும் பொழுதில் சூரிய தேவன் மீண்டும் வருவான்’ என்ற நம்பிக்கையுடன் அடுத்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தன.

நன்றி: ஈழநாடு, பாரிஸ்
One thought on “கோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்!

  1. Manoharan

    Excellent article. The story and the moral behind is amazing. Yes we are waiting for the Sun to rise.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *