BREAKING NEWS
Search

கொள்ளையடிக்கப்படும் வன்னி மக்களின் வளங்கள்!

கொள்ளையடிக்கப்படும் வன்னி மக்களின் வளங்கள்!

போர் முடிவுக்கு வந்து விட்டது.

மக்களுக்கும் புலிகளுக்கும் சேர்த்து இராணுவத் தீர்வைக் கொடுத்து விட்ட மகிழ்ச்சியில் அவர்கள் எக்காளமிட்டுச் சிரிக்கிறார்கள். air-attack1

மூன்று லட்சம் மக்களை கால்நடைகளைப் போல நான்கு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆசியப் பிராந்தியத்தின் இடது வலது வல்லரசுகள் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே முடமாக்கிய பெருமையில் திளைக்கின்றன.

மேற்குலகமோ இலங்கையில் பெரும் நாடகத்தனமான பாவனைகளை நடித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இலங்கைத் தீவின் சிறைக்குள்ளும் வெளியிலும் வாழும் தமிழ் மக்கள் பேரினவாதிகளின் பரிகாசப் பொருளாகியிருக்கிறார்கள்.

நாம் புலத்தில் அழுது புலம்புகிறோம். தமிழகத்தில் வெம்மையால் புழுங்கிச் சாகிறோம். ஒரு இனத்தை கால்களை வெட்டியவர்களுக்கு இப்போது பேரம் பேசவும் அம்மக்களின் வளங்களை கொள்ளையடிக்கவும் தோதான சூழல் உருவாகியிருக்கிறது. கேட்பதற்கு நாதியில்லை. குரல் கொடுக்கவோ, உரிமை பேசவோ யாரும் இல்லை. முற்று முழுதாக வாழ்வையும் இழந்து மீண்டும் கூடு திரும்பும் போது தங்களின் காணிகளையும் அவர்கள் இழந்து விடுவார்களோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

நீங்கள் அவர்களை முகாம்களில் இருந்து வெளியில் அனுப்புங்கள் யுத்தமும் இனப் படுகொலையும் ஏற்படுத்திய காயங்களில் இருந்து அவர்கள் மீண்டு வர ஆண்டுகள் சில ஆகலாம். ஆனால் கசப்பிலிருந்தும் இழப்பிலிருந்தும் அவர்கள் மீண்டு வர அவர்களின் பாரம்பரிய நிலங்களில் அவர்கள் குடியமர்த்தப்பட வேண்டும்.

ஆனால் போரின் வெற்றி ஒரு வலிமையான இராணுவத்தை இலங்கை பேரினவாதிகளுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் தமிழ் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி அரசியல் ரீதியிலான தீர்வொன்றை யாரும் இங்கே கேட்கக் கூடாது என்று உணர்த்துகிறது. அத்தோடு ஒட்டு மொத்தமாக இந்தியாவை நம்பியோ, சீனாவை நம்பியோ இனி இராணுவ பலத்தை கட்டமைக்காமல் எவரெல்லாம் இலங்கை வளத்தில் அதன் கேந்திர இருப்பில் ஆர்வமாக இருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் இராணுவ தொழில் தொடர்புகளைப் பேணுவதன் மூலம் நிலவும் முரணை பேரினவாத நலன்களுக்கு ஆதாயமாக மாற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை பேரினவாத அரசு.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் இந்தியா ஐநூறு கோடி ரூபாய் உதவி வழங்க முன் வந்திருக்கிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜபக்சே, ஒரு அலட்சியமான மனோபாவத்தோடு, ‘இது போன்ற ஏராளமான நிதிகளை எம்மால் திரட்ட முடியும்’ என்றிருக்கிறார். இன்று இந்தியாவின் தயவில் காலத்தை நகர்த்த ராஜபக்சே தயாராக இல்லை என்பதும் பெரும் சூதாட்டமாக தென்கிழக்கு அரசியலை லாபகரமாக நடத்தி விட முடியும் என்பதையும் ராஜபக்சே அறிந்து வைத்திருக்கிறான்.

இந்தியாவோ தான் உருவாக்கிய சந்தையின் பெருமளவு லாபமும் முதலீடும் தனக்கே வேண்டும் என்று ஆசைப்படுவது தெரிகிறது. ஆனால் சீனாவையும், ஜப்பானையும், ரஷ்யாவையும் மீறி முற்று முழுதாக இது சாத்தியமில்லை என்ற நிலை வரும் போது ஒரு விதமான அனுசரணை போக்கையே இந்தியா கடைபிடிக்க ஆயத்தமாகிவருகிறது.

மேனன், மன்மோகன், எஸ், எம். கிருஷ்ணாக்களின் நடவடிக்கைகள் முரண்பாடுகளைப் போல தோற்றம் கொண்ட இணக்கப்பாடுதான். தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பினரிடமும் தமிழ் மக்களிடமும் தாங்கள் கரிசனத்தோடு நடந்து கொள்வது போது நடித்து. ஒட்டு மொத்த வடக்கு கிழக்கின் வளங்களையும் இந்திய முதலீடுகளுக்கான சந்தையாக மாற்றுவதிலுமே குறீயாக இருக்கிறது இந்தியா. அது ஒரு போதும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறீத்து கவலைப்படப் போவதில்லை. அப்படி இந்தியாவிற்கு கவலைகள் ஏதும் இருந்திருந்தால் வடக்கு கிழக்கு பிரிப்பை மீண்டும் இணைக்க வலியுறுத்தும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் ஆரம்ப அறிகுறி என்பது இரு மாகாணங்களையும் இணைப்பதில்தான் இருக்கிறது. ஆனால் அதை இலங்கை செய்யத் தயராக இல்லை இந்தியா இலங்கையின் விருப்பத்துக்கு மாறாக இனி எதுவும் செய்யவும் செய்யாது. ஏனென்றால் இந்தியாவுக்கு என்ன வேண்டுமோ அது இலங்கையிடம் இருந்து இந்திய முதலாளிகளுக்கு கிடைக்கும்.

அபிவிருத்தி, மீள்கட்டுமானம், புனரமைப்பு, குடியிருப்பு வசதி என எந்த பெயரைக் கொண்டு இதை அழைத்தாலும் தமிழ் மக்களின் இரத்தத்தில் குளிப்பது இந்திய முதலாளிகளே. அவர்களின் நலனுக்காகத்தான் இன்றைய கால நிலையில் இலங்கையை இந்தியா பார்க்கிறது.

அதன் பல கோணங்களில் ஒன்றுதான் கடந்த திங்கட்கிழமை அன்று நடந்தேறியிருக்கிறது. இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று சொல்லப்படும் இயற்கை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ், சுவாமிநாதன் ராஜபக்சேவை சந்தித்து வடக்கின் விவசாய அபிவிருத்தி குறித்துப் பேசியிருக்கிறார். வளமான வன்னிப் பகுதியை குறி வைத்திருக்கும் இந்த சுவாமிநாதன் வன்னி மக்கள் அவர்களின் வீடுகளுக்கு திரும்பும் முன்ன்ரே அங்குள்ள வளங்களை தன் கட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டிருப்பதும் தெரியவருகிறது.

யார் இந்த சுவாமிநாதன்?
suvaminathan
கலப்பின பயிர்செய்கையை ஒழித்து ஒற்றைப் பயிர் செய்கையை இந்திய விவசாயத்துக்கு அறிமுகப்படுத்தியவர். பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஒழித்து பூச்சிக் கொல்லி ரசாயன உரத்தை அறிமுகப்படுத்தி இந்திய விவாசயத்தை அழித்தவர்.

பாரம்பரீய விவாசாய முறைகளை ஒழித்து செயற்கை விதை உற்பத்தியை அறிமுகப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்தவர்.

விவசாயத்திற்கு அதாவது உழைப்பிற்கு உணவு என்ற திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளை தற்கொலையின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்தியவர்.

இந்த படித்த மேதாவியின் பசுமைப் புரட்சி தோல்வியில் முடிந்து இந்தியா முழுக்க பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள பசுமைப் புரட்சி தோல்வியில் முடிந்தது. இப்போது இவர் எடுத்திருக்கும் அடுத்த ஆயுதம் நச்சுத் தன்மை கொண்ட மரபணு மாற்ற பயிர் உற்பத்தி முறை.

இந்தியாவின் வேட்டையாடி முடித்து, அம்பலப்பட்டுப் போன பிறகு இம்மாதிரி மோசடி விஞ்ஞானிகளுக்காக இப்போது உருவாகியிருப்பதுதான் வன்னிப் பெரு நிலம்.

ஆமாம்… காலம் காலமாய் உழைத்து தலை நிமிர்ந்து நின்ற மக்கள் ஒரு வேளை கஞ்சிக்காக வதை முகாம்களில் ஏங்கி நிற்கிறார்கள். அவர்களின் பாரம்பரீய நிலங்களை பேரினவாதிகளின் இராணுவமும் சிங்களர்களும் ஆக்ரமித்தது போக மீது இந்தியாவுக்கு…

இந்தியா கண்டு பிடித்த இம்மாதிரி வேளாண் விஞ்ஞானிகளுக்கு…

-அ.பொன்னிலா

www.globaltamilnews.net
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *