BREAKING NEWS
Search

கேபி கைதின் பின்னணியில் இந்திய அரசு! – இலங்கை

இந்தியாவால் நீண்ட நாள் தேடப்பட்டு வந்தவர் கேபி! – இலங்கை

விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான kp-new2பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டு தனி விமானம் மூலம் இலங்கை தலைநகர் கொழும்பு கொண்டு செல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலையில் முக்கிய குற்றவாளியான கேபியை இந்திய அரசின் கடும் முயற்சி காரணமாகவே இந்தக் கைது செய்ததாகவும் இலங்கை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டவர், செல்வராசா பத்மநாதன். விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் ஆயுதங்கள் வாங்கி அனுப்புவது, வெளிநாடுகளில் நிதி திரட்டி அனுப்புவது, தனி தமிழ் ஈழம் அமைய வெளிநாடுகளின் ஆதரவை திரட்டுவது ஆகிய பணிகளை இவர் கவனித்து வந்தார்.

இந்த நிலையில், பிரபாகரனுக்குப் பிறகு விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தலைவராக பத்மநாதன் நியமிக்கப்பட்டதாகவும், தனி ஈழம் அமைய அவர் தொடர்ந்து பாடுபடுவார் என்றும் விடுதலைப் புலிகளின் இணைய தளம் அறிவித்தது.

இந்தநிலையில், 54 வயதான பத்மநாதன் நேற்று முன்தினம் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் பத்மநாதனை தாய்லாந்தில் கைது செய்ய வில்லை என்றும், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கைது செய்ததாகவும், தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக அவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் இலங்கை அரசின் ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்கரா கூறினார்.

கேபியை முதலில் பார்த்த இடத்திலேயே சுட்டுக் கொன்று விட வேண்டும் என்பதே இலங்கையின் திட்டம் என்றும் ஆனால் சூழல் அதற்கேற்ப அமையாததால் அவரைக் கைது செய்து இலங்கை கொண்டு வரவேண்டியதாயிற்று என்றும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா கேட்டுக் கொண்டதால் நடந்த கைது!

பத்மநாதன் கைது பற்றி இலங்கை ஜனாதிபதியின் செயலக இணையதளத்தில் வெளியிட்ட தகவல்களில், இந்தியாவின் தொடர் முயற்சி காரணமாகவே, ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியான பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி:

விடுதலைப் புலிகளின் தலைவராக தன்னைத் தானே நியமித்துக் கொண்ட சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்கிற, கே.பி. என்று அழைக்கப்படுகிற குமரன் பத்மநாதன் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டார்.

ஆயுதங்கள் கடத்தியது, 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட மிக மிக முக்கிய பிரமுகர்களை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டியது ஆகியவற்றில் பத்மநாதன் தேடப்பட்டு வந்த குற்றவாளி.

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி, மாதந்தோறும் பல லட்சம் டாலர் (கோடிக் கணக்கான ரூபாய்) சம்பாதித்து வந்தார். வெளிநாடுகளில் அவர் கைது செய்யப்பட்ட போதெல்லாம் தவறான தகவல்களை பரப்பி தப்பித்து வந்தார்.

அவரை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இந்தியா அறிவித்து உள்ளது. அதற்காக சர்வதேச போலீஸ் உதவியையும் இந்தியா கேட்டிருந்தது.

கிரிமினல் சதி செய்தது, ஆயுதங்கள் கடத்தியது, இந்திய பயங்கரவாத சட்டத்தை மீறியது, இந்திய வெடிபொருள் தடை சட்டத்தை மீறியது, ராஜீவ் காந்தி படுகொலை ஆகிய குற்றங்களுக்காக பத்மநாதனை விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்காக அவரை பிடித்துக் கொடுக்கும்படியும் இந்தியா சர்வதேச போலீசின் உதவியை கேட்டு இருந்தது. அதன்பேரில் அவரை சர்வதேச போலீஸும் தேடி வந்தது.

1955-ம் ஆண்டு பிறந்த பத்மநாதனின் சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் உள்ள மைலிட்டி என்ற பகுதி ஆகும். காங்கேசன்துறையில் உள்ள நடேஸ்வரா கல்லூரி, தெல்லிப்பாளையில் உள்ள மகாஜன கல்லூரி ஆகியனவற்றின் முன்னாள் மாணவர் இவர். யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்ட பத்மநாதன், படிப்பை முடித்து பட்டம் பெறவில்லை,” என அந்த இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரபாகரன் பயன்படுத்திய போன்…

முல்லைத்தீவு போரின்போது விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய செயற்கைக் கோள் போன் எனறு கூறி ஒரு செல்போனை ராணுவம் காட்டியது. இந்த போனில் இருந்த நம்பர்களை வைத்தே கேபி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கேபி அடிக்கடி தனது இருப்பிடத்தையும் தொடர்பு எண்களையும் மாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

முகத்தை மூடி…

கைது செய்யப்பட்ட பத்மநாதன் தனி விமானம் மூலம் நேற்று கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய முகத்தை முகமூடியால் மறைத்து இருந்தனர். விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட அவரை, மின்னல் வேகத்தில் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர்.




2 thoughts on “கேபி கைதின் பின்னணியில் இந்திய அரசு! – இலங்கை

  1. Kesava

    அரசியியலிலே இதெல்லாம் சகஜம் அப்பா….என்பதுபோல எமது மக்களாலேயே கட்டி எழுப்பபட்ட உலகிலேயே மிக உன்னதமான உயரியலட்ச்சிய திறமைகள் கொண்ட மாபெரும் விடுதலைப்புலிகள் அமைப்புகுளேயே ஒற்றுமைஇன்மை ஒருவரைஒருவர் காட்டிகொடுப்புக்கள் மற்றும் பதவிஆசை போன்றவை மேதகு தலைவரின் ஒழுங்கமைப்புக்குள் இல்லாமல் போனதால் ஏற்பட்டதன் பிரதிபலிப்புகளே இவை……கடந்தகால ஈழஅரசியலில் எனக்குள்ள அனுபவத்தை வைத்தே கூறுகிறேன்.

    புலம்பெயர் எம்மக்கள் ….இனிமேலும் இங்குள்ள சில வியாபார நோக்கம் கொண்ட பணம்புடின்கிகளிடம் மிகவும் கவனமாக நடந்துகொண்டு ஏமாறாமல் உங்களால் முடிந்த உதவிகளை நேரடியாக அங்கு அல்லுறும் மக்களுக்கு சேரக்கூடிய விதத்தில் செய்யுங்கள் ….மக்கள் சேவையே மகேசன் சேவை……வாழ்க தமிழ் ….வாழிய வாழியவே!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *