குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவை தூக்கி எறியவும் தயங்க மாட்டோம்! – கருணாநிதி
சென்னை: 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஆ ராசா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரைக் கட்சியிலிருந்து தூக்கி எறிவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு தொடங்கிய காலங்களில் அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்கிற விசாரணையை நடத்தத் தயாராக இருந்தால், நாங்களும் தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
டெல்லி, சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் 14 வீடுகள் மற்றும் அலுவலகங்களில்புதன்கிழமை சி.பி.ஐ. சோதனை நடந்தது. இதுகுறித்து, உடனடியாக திமுக மேலிடம் ஆலோசனை செய்தது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
இன்றைய தினம் நாடு முழுக்க, டெல்லி, சென்னை, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் உள்ள ராசாவின் இல்லங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றுள்ளதே?
சி.பி.ஐ. சோதனைகள் நடைபெறுவது ஒன்றும் பெரிதாகப் பேசப்படுகின்ற விஷயம் இல்லை.
சி.பி.ஐ. சோதனை நடைபெற்றதை அவமானமாகக் கருதுகிறீர்களா?
அப்படி நினைக்கவில்லை, ஆனால் அவமானத்திலேயே ஊறியவர்கள் சிலர் நாட்டிலே இருக்கிறார்கள்.
கட்சியில் இருந்து ராசா ஓரங்கட்டப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?
அவருடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு அவரைத் தூக்கி எறிவோம். தயங்கமாட்டோம். அதுவரையில் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என திமுக நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகிற வரையில் நாங்கள் ராசாவைக் கைவிடத் தயாராகவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்பதைப் பற்றி?
அதைப்பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பாஜக ஆட்சிக் காலத்தில் இருந்தே அலைக்கற்றை பிரச்னை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு கூட்டுக்குழு வேண்டுமென்று கோருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதில் என்ன?
ஒரு கட்சி தலைவராக நீங்கள் அதற்குத் தயாராக இருக்கிறீர்களா?
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடங்கியது முதல் அதற்குப் பிறகு நடைபெற்ற ஆட்சிக் காலங்களில் அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்று விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சியை நீங்கள் பிளாக்-மெயில் செய்வதாக சொல்லியிருக்கிறாரே?
பிளாக்-மெயில் செய்கின்ற கலை எல்லாம் ஜெயலலிதாவுக்குத்தான் மிகவும் அத்துப்படியான விஷயம்.
மேலும் ஜெயலலிதா அறிக்கையில் சி.பி.ஐ. விசாரணையை விரிவாக்கி அதுபற்றி தோண்டினால் மேலும் விவரம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறாரே?
அந்த அம்மையாரிடம் கூட சி.பி.ஐ. விசாரித்தால் எவ்வளவோ கிடைக்கும். ஏற்கனவே கிடைத்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியுடன் ராசா பேச முனைந்ததாக ஒரு வழக்கிலே கூறப்பட்டதைப்பற்றி?
அவர் மீதான அந்த குற்றச்சாட்டை, ராசாவே மறுத்திருக்கிறார்; அவ்வளவுதான் எனக்கு தெரியும், என்றார் முதல்வர் கருணாநிதி.
///அவருடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு அவரைத் தூக்கி எறிவோம். தயங்கமாட்டோம். ///
//இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு //
தனது இரண்டாம் தலைமுறைக்குக் கலைஞர் செய்த அரசியல் அதிகார ஒதுக்கீடுதான் அவரது எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை உணரவேண்டும்.
மக்கள் இவரைப் போல இல்லை. குற்றத்தை கைது, பெயில், நீதிமன்றம், வழக்கு, வாய்தா, விசாரணை, சாட்சிகள் களைப்பு என்றெல்லாம் இவரது மனுநீதி வழங்கும் முறை மீது உள்ள நம்பிக்கை காரணமாகத் தேர்தலில் திமுகவைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.
இனியாவது கலைஞர் தனது போக்கை மாற்றிக் கொண்டு, குடும்பத்திடமிருந்து கட்சியைக் காப்பாற்றி (அதாவது பிரித்து) ஊழலைத் தண்டித்து அல்லது உண்மையான நீதிக்குத் தலை வணங்கி அரசியல் செய்யவேண்டும். செய்வார் என்று நம்பிக்கை இல்லை.