BREAKING NEWS
Search

குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் வருமா?

குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் வருமா?

சென்னை: கடந்த ஏப்ரல் – மே மாதங்களில் நடந்த டிஎன்பிஎஸ்ஸி குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான முடிவுகள் முறையாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த முடிவுகள் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் வெளியிடுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போது புதிய தேதியை அறிவித்துள்ளது. ஏற்கெனவே இதுபோல இருமுறை அறிவித்து, தள்ளிப் போட்டுள்ளது.

நகராட்சி ஆணையர், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்கான குரூப் 2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது.

1,225 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 4 லட்சம் பட்டதாரிகள் எழுதியுள்ளனர்.

இதற்கான முடிவுகளை வெளியிடுவது குறித்து இதுவரை உறுதியான எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது தமிழ்நாடு அரசுப் பணி்யாளர் தேர்வாணையம்.  ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகும் என்று அரசு தரப்பில் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் இந்த முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது (அதற்குள் என்னென்ன அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து கொள்ளலாம்!).

வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.), போலீஸ் டி.எஸ்.பி. கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் 61 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த மே மாதம் 2-ந் தேதி குரூப்-1 முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய இந்த 93 ஆயிரம் பட்டதாரிகள் எழுதியுள்ளனர்.

வழக்கமான தேர்வைக் காட்டிலும் இந்த ஆண்டு முதல்நிலை தேர்வு முற்றிலும் புதுமையாக இருந்தது. பொதுவாக கேட்கப்படும் பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்து இல்லாமல் பொதுஅறிவு, அன்றாட நிகழ்வுகள் ஆகியவற்றில் இருந்தே 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டன. எனவே, முதல்நிலை தேர்வில் வெற்றி தோல்வியை உறுதியாக சொல்ல முடியாத நிலைதான் பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்த நிலையில், குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.செல்லமுத்துவிடம் கேட்டபோது, “குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு அக்டோபர் மாத கடைசியிலும், இதேபோல், குரூப்-2 தேர்வு முடிவு நவம்பர் மாதமும் வெளியிடப்படும்” என்று கூறினார்.

இதே செல்லமுத்து கடந்த மாதம் அளித்த பேட்டியொன்றில், குரூப் 1 மற்றும் 2 தேர்வு முடிவுகள் ஆகஸ்டுக்குள் வந்துவிடும் என்று ‘குத்துமதிப்பாக’க் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுக்கான காலி இடங்கள் தற்போது வந்துகொண்டிருப்பதாகவும், தேர்வு பற்றிய அறிவிப்பு நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

-என்வழி




One thought on “குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் வருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *