BREAKING NEWS
Search

குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீர்ந்ததாக அறிவிப்பு!

முடிந்தது பிரிவினை… குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீர்ந்ததாக அறிவிப்பு!

சென்னை: குமுதம் குழுமத்தில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக தீர்ந்துவிட்டதாகவும், இதற்கு வழிகோலிய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமுதம் குழுமத்தை ஆரம்பித்த எஸ் ஏ பி அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அந்தக் குழுமத்தின் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருந்தார் அவரது மகன் டாக்டர் எஸ் ஏ பி ஜவஹர் பழனியப்பன். அமெரிக்காவில் மருத்துவராகவும் பணியாற்றுகிறார் இவர்.

குமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி வி பார்த்தசாரதியின் மகனான என் வரதராஜனுக்கு நிர்வாக இயக்குநர் பதவி அளித்து, நிறுவனத்தை அவரது பொறுப்பில் விட்டிருந்தார் ஜவஹர். அவருக்கு சம்பளமாக ரூ 6.25 லட்சம் அளித்து வந்தார்.

ஆனால் குமுதம் நிர்வாகத்திலும், ஆசிரியர் குழு விவகாரங்களிலும் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குமுதம் குழுமப் பத்திரியில் பணியாற்றும் லோகநாயகி என்பவர் வரதராஜனுக்கு சாதகமாக செயல்பட்டார். குமுதம் தலைமை நிருபர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். உடனே பதிலுக்கு ஒரு புகாரைப் பதிவு செய்த தலைமை நிருபர், குமுதத்தில் வரதராஜன் செய்து வந்த மோசடிகள், அவரது தூண்டுதலால் லோகநாயகி கொடுத்த புகார் போன்றவற்றை அம்பலப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து குமுதம் உரிமையாளரான டாக்டர் ஜவஹர் பழனியப்பனும் கமிஷனர் அலுவலகத்தில் வரதராஜன் மீது புகார் கொடுத்தார். அதில் குமுதம் அலுவலகத்தில் வரதராஜன் பெரும் நிதி மோசடி செய்து விட்டதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட ரூ 6.25 லட்சம் சம்பளத்தைத் திருத்தி ரூ 10 லட்சமாக மோசடி செய்து பெற்று வந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து வரதராஜன் கைது செய்யப்பட்டார். ஆனால் முதல்வர் கருணாநிதியின் தலையீட்டின்பேரில், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீரவேண்டும் என்பதற்காகவே வரதராஜனை பிணையில் விடுவிக்கச் சொன்னதாகக் கூறினார்.

இதற்கிடையே குமுதம் விவகாரத்தில் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சி அரசின் ஆதரவுடன் தொடங்கியது. கடந்த நான்கு மாதங்களாக இந்த முயற்சி நடந்துவந்தது.

இருவருக்கும் பொது நண்பரான இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என் ராமின் இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இறுதிச் சுற்று சமரசப் பேச்சு நடந்தது. இதில் ஜவஹர் மற்றும் வரதராஜன் ஆகிய இருவருமே கலந்து கொண்டனர்.

இதன் முடிவில் இரு தரப்புக்கும் சுமூகமான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதில் இருவரும் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டனர்.

இதன்படி குமுதம் குழுமத்தின் இரு இதழ்கள் வரதராஜன் மற்றும் டாக்டர் பி. ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கும், மீதம் உள்ள ஏழு இதழ்களின் உரிமை டாக்டர் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் கோதை அண்ணாமலை ஆகியோருக்கும் என முடிவு செய்யப்பட்டது.

குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து என் ராம் ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதில், குமுதம் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், இந்த விவகாரத்தை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தது மட்டுமின்றி, அதற்கான தீர்வுக்கு வழியமைத்துத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
4 thoughts on “குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீர்ந்ததாக அறிவிப்பு!

 1. kumar

  edhaellam ஒரு பிரச்சன்னை,எதுக்கு ஒரு க.ம மதியச்தம்,என்னொரு ந.ராம் மதியச்தம்.ஏன்டா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா.அவன் அவன் பட்டினியல கழ்டபற்றன் எது ஒரு சாதனை,இத அச்செம்ப்லி ல சொல்லனுமா.எவளோ பணம் டா vangineenga??

 2. P.G.R

  இது சட்டசபையில் விவாதிக்கிற அளவுக்கு ரொம்ப முக்கியமான மக்கள் பிரச்சனையா?? இதுக்கெல்லாம் முதல்வருக்கு நேரம் இருக்கு மீனவருக்கு ஒரு பிரச்சனைனா கடிதம் எழுதிட்டு பாராட்டுவிழாக்கு போய்டுவார்!!!!!!! என்ன கொடுமை சாமி இது !!!!!!!!!!!
  எல்லாம் தமிழ்நாட்டின் சாபக்கேடு… மக்களே திருந்துங்கோ…

 3. Kumar

  தமிழக மக்கள் திருந்த மாட்டார்கள். நிறைய பிரிவினை இருக்கிறது தமிழ்நாட்டில். அதனால் தமிழன் அடிமை ஆக தான் வாழ்வான். வேற நாட்டுக்காரன் என்ன சொனாலும் அப்படியே கேட்பான் தமிழன். சக தமிழன் நல்லது சொன்னா கேக்கவே மாட்டான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *