BREAKING NEWS
Search

குண்டு வெடிப்பும் குற்றச்சாட்டும் ஜோடிக்கப்பட்ட சிறுபிள்ளைத் தனம்!- சீறும் சீமான்

தமிழகத்தில் எழுச்சி கொண்டுள்ள ஈழ ஆதரவை வீழ்த்த ஆட்சியாளர்களி்ன் நாடகமா இந்த குண்டுவெடிப்பு? – சீமான்

சென்னை: விழுப்புரம் அருகே குண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டதன் பின்னணி குறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் சோடிக்கப்பட்ட சிறுபிள்ளைத்தனம். இதன் நிஜ பின்னணியை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று இயக்குநர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடிவைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் ராஜபக்சேவின் வருகைக்கு எதிரான துண்டுப்பிரசுரம் ஒன்று கிடந்ததாகவும் அப்பிரசுரத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாகவும், ஆகவே பிரபாகரனின் ஆதரவாளர்கள் அல்லது ஈழ விடுதலை ஆதரவாளர்கள் இந்த தண்டவாளத் தகர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன.

முரணான தகவல்கள்…

ஆனால் இந்த தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.இதனை தெளிவு படுத்த வேண்டியது அரசின் கடமை.

முதலாவதாக ரயில் தடம் புரள்வதையும், மோதலையும், நூற்றுக்கணக்கான மக்கள் அழிவையும் எதிர்பார்த்து குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு சிறிய காகிதத்தில் எழுதப்பட்ட சில வரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியெல்லாம் தொக்கி நிற்கிறது.

அப்படித்தான் உரிமை கோர வேண்டுமானால், சிறிய காற்றுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத கையால் எழுதப்பட்ட காகிதத் துண்டுதான் அவர்களுக்கு கிடைத்ததா? மின்னியல் யுகத்தில் இவையெல்லாம் சோடிக்கப்பட்ட சிறுபிள்ளத் தனமானவையாகவே தோன்றுகின்றன. இப்படி இருக்கையில் சம்பவ இடத்தில் கிடந்த துண்டுப் பிரசுரத்தின் அடிப்படையில் விசாரணையைக் கொண்டு செல்வதாக போலீசார் கூறும் போது விசாரணை நேர்மையாக நடைபெறுமா? என்கிற அச்சம் எழுகிறது.

விசாரிக்கும் முன்பே தீர்ப்பை எழுதுவதா?

அதே போல மாநிலக் காவல் துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரத்தில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை.

புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.

சம்பவ நடந்த இடத்தில் கிடந்ததாக இவர்களால் சொல்லப்படும் துண்டுக் காகிதத்தை வைத்து இவர்களாகவே ஒரு தீர்ப்பைச் சொலவது எவ்வாறு சரியாகும்?

விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் காவல் துறையினர், முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.

அதே போல முந்தைய சேலம் வண்டியின் டிரைவர் பயங்கர வெடிச் சத்தம்கேட்டவுடன் நிலைய அதிகாரி ருத்ரபாண்டிக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் பேரணிக்கு முந்தைய ரயில் நிலையமான முண்டியம்பாக்கம் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினார் என்றும் அதன் பின்பு திருச்சி வண்டியின் டிரைவர் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.இது நம்ப முடியவில்லை.ஏனென்றால் வெடிச்சத்தம் கேட்டவுடன் ரயிலை நிறுத்துவார்களே தவிர இயக்க மாட்டார்கள்.

இது போன்று பல சந்தேகங்கள் எழுகின்றன.

சித்தணி தண்டவாளத் தகர்ப்பில் உண்மை நிலையை அரசு விளக்க வேண்டும். அதை விட்டு விட்டு பேரினவாத இலங்கை அரசிற்கு எதிராக போராடுகிறவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு முன்கூட்டியே திட்டமிட்டு விசாரணையை முன்னெடுப்பது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் விஷயமாக உள்ளது.

பிரபாகரனின் தம்பிகள் யார் தெரியுமா?

போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போதுகூட தமிழர்கள் தங்களைத் தாங்கள்தான் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார்களே தவிர பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்ததில்லை. தவிரவும் பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதையும் இங்கே அடக்குமுறைச் சக்திகளுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஈழத் தமிழ்மக்கள் மீதான வன்னி யுத்தத்தை பேரினவாத இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்டபோது தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்டு நாமெல்லாம் போராடினோம். தன்மானத் தமிழனும் வீரத் தியாகியுமான முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீர வேங்கைகள் தங்களின் இன்னுயிரை ஈந்தனர். பிரபாகரனின் உண்மையான தம்பியான முத்துக்குமார் நமக்கெல்லாம் விட்டுச் சென்ற பாடம் அதுதான்.

தன்னுயிரைக் கொடுத்து, தன்னை வதைத்து, தன்னை எரித்து பேரினவாதிகளை எதிர்ப்பதுதான் பிரபாகரனின் தம்பிகளின் போராட்ட மரபே தவிற, அடுத்தவர் உயிர்களைப் பறிப்பதல்ல.

பேரெழுச்சியோடு முத்துக்குமாரின் ஊர்வலத்தில் திரண்டு கண்ணீரோடு முத்துக்குமாரை வழியனுப்பிய தாய்மார்களும் பொதுமக்களும் தங்களுக்காக, தங்களின் இனத்துக்காக தன்னுயிர் ஈந்தவன் முத்துக்குமார் என்பதால் அவனை ஒரு மகனாக நினைத்து தமிழ்தாய் வணங்கி நிற்கிறாள். அப்படி தமிழ் தாய்மார்களின் வணக்கத்திற்குரியவர்கள்தான் பிரபாகரனின் தம்பிகள் என்பதை நமது தன்னலமற்ற தியாகத்தால் உலகுக்கிற்கு உணர்த்தியிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

எதிரிக்கும் கருணை காட்டிய தலைவன்!

இதை எல்லாம் விட மிகச் சிறந்த வரலாற்று முன்னுதாரணமாக எம்மினத் தலைவர் அண்ணன் பிரபாகரனும் சான்றாகி நிற்கிறார். எதிரிக்கும் கூட கருணை காட்டு என்கிற விடுதலைப் போர் மரபுத் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஈழ விடுதலைப் போராளிகளே அதற்குச் சான்று.

அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்திற்குள் அப்பாவி தமிழ் மக்களை அழைத்து வந்து லட்சம் லட்சமாக கொன்றொழித்தது பேரினவாத இலங்கை அரசு. தம் கண்ணெதிரே எந்த மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதமேந்தினாரோ அந்த மக்களே கொன்றொழிக்கப்பட்ட போது கூட தங்களிடம் இருந்த கனரக ஆயுதங்களாலோ, நவீன விமானங்களாலோ புலிகள் சிங்களர்களான பொது மக்களைத் தாக்கியதில்லை.

பேரிவனவாத இலங்கை அரசின் பொருளாதார நலன்களையும், இராணுவக் கட்டமைப்பையும் சிதைப்பதாகத்தான் புலிகளின் தாக்குதல் அமைந்தது. ஏழு விமானத் தாக்குதல் நடத்தப்பட்டும் கூட அதில் ஒரு சிங்கள பொதுமகனாவது கொல்லப்பட்டிருப்பானா? எண்ணிப் பாருங்கள்.

போராட்டத்தை ஒடுக்க நாடகம்?

போரை முன்னெடுத்த இலங்கை அரசுக்கும், போருக்கு துணை போன காங்கிரஸ் அரசுக்கும் எதிராக ஜனநாயக ரீதியில் தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கினர்.

ஒரு கொடிய யுத்தக் குற்றவாளிக்கு டில்லியில் சிகப்புக் கமபள வரவேற்போடு, விருந்து கொடுத்து கௌரவித்ததை நினைத்து தமிழ் மக்கள் மனக் கொந்தளிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகமெங்கிலும் பல்லாயிரம் பேர் ராஜபக்சேவின் வருகையைக் கண்டித்து போராடி கைதாகினர். தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது..”

-இவ்வாறு சீமான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

குறிப்பு: இது தொடர்பில் இன்று அதிகாலை நாம் எழுதிய தலையங்கம்:

என்ன அவசரம்… என்ன அவசரம்!

என்ன அவசரம்… என்ன அவசரம்!
7 thoughts on “குண்டு வெடிப்பும் குற்றச்சாட்டும் ஜோடிக்கப்பட்ட சிறுபிள்ளைத் தனம்!- சீறும் சீமான்

 1. Thameez

  அதாவது சினிமாவில் கொலை ஆனவுடன் கதாநாயகன் கத்தி எடுத்த வுடன் போலீஸ் வந்து இவனை அரெஸ்ட் செய்யவும், இவன்தான் அந்த கொலையை செய்தவன் என்று சொல்ற மாதிரி இருக்கு.

 2. karunanithi

  நான் எழதிய நாடகத்தில் காவல்துரைனர் நடிகர்கள் லத்திகா சரண் கதாநாயகி ,சோனியா தயாரிப்பாளர் ,ராஜபக்சே கவுருவ தோற்றம் ,தமிழர்கள் வில்லன்கள் ,,,,, இது
  கலைஞரின் ரயில் சிங்கம்

 3. ss

  மடியில் கனம் இல்லன்னா வழியில் ஏன் பயம்.?

  ரயிலுக்கு குண்டு வைத்தவர்கள் யாராக இருந்தாலும் தூக்கில் போடப்பட வேண்டும்.

 4. raj.s

  போர் நடந்த போது வெடிக்காத குண்டு., மே 18 கு பிறகு வெடிக்காத குண்டு., இப்ப ராஜபக்ஷே ஊருக்கு போனதும் வெடிக்குது.,

 5. saravanaraj .s.p

  மலேசியாவில் புலிகளின் தலைவர்கள் தங்கியிருப்பதாக தகவல்: பொலிஸார்
  [ புதன்கிழமை, 16 யூன் 2010, 04:59.29 AM GMT +05:30 ]
  மலேசியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தங்கியிருப்பது குறித்து தாம் கண்டுபிடித்திருப்பதாக மலேசியப் பொலிஸார் தெரிவித்தனர்.

  இவர்கள் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி கருதி மலேசியாவில் தங்கியிருப்பதாகவும் மலேசியப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

  இதேவேளை, இதனை உறுதிப்படுத்தியுள்ள மலேசிய உள்விவகார அமைச்சர் ஹிஷாமுடின் ஹுஸைன், இஸ்லாமிய மற்றும் ஏனைய போராளிக் குழுக்கள் தமது வன்முறைச் சம்பவங்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மலேசிய நாட்டை பயன்படுத்துவதாகவும் கூறினார்.

  அத்துடன், தகவல் பரிமாற்றம், ஆட்களை இணைத்தல், நிதி விவகாரம் ஆகியவற்றுக்கும் இவர்கள் தென்கிழக்கு ஆசியாவைப் பயன்படுத்தி வருவதாகவும் மலேசிய உள்விவகார அமைச்சர் தெரிவித்தார்.

  இஸ்லாமிய மற்றும் ஏனைய போராளிக் குழுக்களின் ஆட்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் மாணவர்களே இலக்கு வைக்கப்படுவதாகவும் மேலும் அவர் கூறினார்.

 6. Naan Tamilan

  மக்கள் போராட்டத்தை ஒடுக்க செயப்படும் சதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *