BREAKING NEWS
Search

காஷ்மீரில் பெரும் வெள்ளம்… 103 பேர் பலி

காஷ்மீரில் பெரும் வெள்ளம்… 103 பேர் பலி

லேஹ்: கனமழை காரணமாக காஷ்மீரின் லேஹ் பகுதியில் 103 பேர் உயிரிழந்தனர். 370 பேர் பலத்த காயமடைந்தனர். 25 ராணுவத்தினர் உள்பட பலரைக் காணவில்லை.

காஷ்மீர் மாநிலம் இமய மலையை ஓட்டியுள்ள பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக அங்கு பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. லேஹ் பேருந்து நிலையம், தொலைபேசி இணைப்பு மையம், மருத்துவமனை உள்பட பல முக்கிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

லேஹ் விமான நிலைய ஓடு பாதை மூழ்கியது.

இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 103 பேர் பலியானார்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 370 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தினர் உள்பட பலரை காணவில்லை. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் தொலை தொடர்பு முற்றிலும் பாதிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து பகுதிக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவாரணப் பொருள்களை எடுத்துச் சென்ற விமானத்தை மட்டும் கஷ்டப்பட்டு தரையிறக்கினர்.

இந்த மாதிரியான வெள்ளம் ஏற்பட மேக வெடிப்பு (கிளவுட் பர்ஸ்ட்) காரணமாக இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.கிளவுட் பர்ஸ்ட் என்னும் இயற்கை சீற்றம் பொதுவாக பருவமழை காலத்தில்தான் ஏற்படுகிறது. அரபிக்கடல் அல்லது வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டு இருக்கும் மழை மேகங்கள் மேற்கு நோக்கி நகர்ந்து இமாலய பகுதிக்கு மேல் செல்லும்போது வெடித்து பலத்த மழை ஏற்படுகிறது. இப்படி கிளவுட் பர்ஸ்ட் ஏற்படும்போது 1 மணி நேரத்துக்கு 75 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக பெரும் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கமாகும். 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் ஏற்பட்ட கிளவுட் பர்ஸ்ட் காரணமாக 3 மணி நேரத்தில் 250 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது.

தலா ரூ 1 லட்சம் உதவி…

வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்து உள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.




One thought on “காஷ்மீரில் பெரும் வெள்ளம்… 103 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *