BREAKING NEWS
Search

கால்பந்து: உலக சாம்பியனானது ஸ்பெயின்!

கால்பந்து: உலக சாம்பியனானது ஸ்பெயின்!

ஜோஹன்னஸ்பர்க்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஒரு கோல் அடித்து கோப்பையை வென்றது.

சாக்கர் சிட்டியில் நடந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின.

முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான பல வாய்ப்புகள் கிடைத்தும் எதையும் கோலாக்க முடியவில்லை.

முதல் 15 நிமிடங்கள் ஸ்பெயின் வசமே பந்து சுற்றிக்கொண்டிருந்தது. 11-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா அடித்த ஷாட், வலைக்கு வெளியே சென்று ஏமாற்றியது.

இதன் பிறகு நெதர்லாந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. 17-வது நிமிடத்தில் பிரிஹிக் வாய்ப்பில் ஸ்னீடர் கோல் நோக்கி அடித்த ஷாட்டை, ஸ்பெயின் கோல் கீப்பர் கேசில்லாஸ் தடுத்து விட்டார். அதே நேரம் இரு அணியினரும் முரட்டுத்தனமாக மோதிக் கொண்டனர்.

வீரர்கள் ஒருவருக்கொருவர் மிதிப்பதும் தள்ளிவிடுவதுமாக இருந்தனர். நடுவரிடமும் அடிக்கடி வாக்குவாதம் செய்தனர். முதல் பாதி நேரத்தில் கோல் ஏதும் விழாத நிலையில், நெதர்லாந்து தரப்பில் 3 பேரும், ஸ்பெயின் தரப்பில் 2 பேரும் மஞ்சள் அட்டை பெற்றனர்.

2-வது பாதியிலும் இதே நிலையே காணப்பட்டது. குறிப்பாக நெதர்லாந்து அணி வீரர்களே அதிக தவறுகள் செய்து நடுவரால் எச்சரிக்கப்பட்டனர். வெற்றிக்குரிய கோலைப் போட, இரு அணி வீரர்களும் அடிக்கடி எதிரணி கோல் கம்பத்தை முற்றுகையிட்டபடி இருந்தனர்.

வழக்கமான ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் தரப்பட்டது. அதன் முதல் பாதியும் கோல் இல்லாமலேயே முடிந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்கள் இருந்தபோது, ஸ்பெயின் அணியின் இனியெஸ்டா அற்புதமாகக் கோல் அடித்தார். அதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.

இதன்பிறகு இருந்த மிகக் குறைந்த நேரத்தில் நெதர்லாந்து வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

கோலடித்த இனியெஸ்டா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்டம் பரபரப்பாக இருந்தாலும் நீண்ட நேரம் கோல் எதுவும் விழாமல் இருந்ததால் வெறுமை தட்டியது.

ஸ்பெயின் கால்பந்து சாம்பியனானது இதுவே முதல் முறை.

முல்லருக்கு கோல்டன் ஷூ!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தங்க ஷூ விருது ஜெர்மனியின் இளம் வீரரான தாமஸ் முல்லருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தப் போட்டியி்ல் ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின் ஸ்னைடர், உருகுவேயின் ஃபோர்லன் ஆகியோர் 5 கோல் அடித்திருந்தனர்.

உருகுவே – ஜெர்மனி இடையிலான ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக முல்லரும் இவர்களுடன் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வில்லாவும், ஸ்னைடரும் கோல் அடிக்கத் தவறிவிட்டனர். இதனால், மேற்கூறிய 4 பேருமே 5 கோல் அடித்து சமநிலையில் இருந்தனர்.

இதனால், அதிக கோலடிக்க உதவியவர் யார் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி, தனது அணி வீரர்கள் 3 கோல் அடிப்பதற்கு முல்லர் உதவியிருந்தார். மற்றவர்கள் தலா ஒருமுறை மட்டுமே பிறர் கோலடிக்க உதவியிருந்தனர்.

இதையடுத்து கோல்டன் ஷூ விருது முல்லருக்குக் கிடைத்தது. இது தவிர, போட்டியின் சிறந்த இளம் வீரர் விருதும் முல்லருக்குக் கிடைத்திருக்கிறது.

2006-ம் ஆண்டு போட்டியில் ஜெர்மனியின் குளோஸுக்கு கோல்டன் ஷு விருது கிடைத்தது குறிப்பிடத் தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *