BREAKING NEWS
Search

கஸாப் தண்டனை… ஒரு கசப்பான உண்மை!

கஸாப் தண்டனை… ஒரு கசப்பான உண்மை!

மும்பை குண்டு வெடிப்பு பயங்கரத்துக்கு காரணமானவர்களில், உயிருடன் சிக்கிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அஜ்மல் கஸாபுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

இந்த தண்டனை அவனுக்கு உடனே நிறைவேற்றப்படுமா… அல்லது இப்போது அவன், இவன் என்று மீடியாவால் குறிப்பிடப்படுகிற கஸாப், ‘அவர் இவர்’ என்று விளிக்குமளவு உயர்நிலையைப் பெற்றுவிடுவானா… என்பதுதான் இன்றைய கேள்வி.

காரணம், ஏதாவது ஒரு இடுக்கில் புகுந்தாவது குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும் சாத்தியங்களை நமது சட்டம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அதைவிட முக்கியம், இதுபோன்ற எல்லைதாண்டிய பயங்கரவாத நச்சுக்களுக்கு ராஜரீக அந்தஸ்து கிடைத்து, ஏதோ ஒரு விதத்தில் தப்பித்துக் கொள்ளும் சாத்தியங்களும் ஏராளம் உள்ளன. சொல்ல முடியாது… அரசே கூட வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, இந்த கஸாப்பை ராஜ மரியாதையோடு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கக் கூடும்!

இப்போதே அதுகுறித்த பேச்சுக்கள் தொடங்கிவிட்டது கவலை தருவதாக உள்ளது. மனித உரிமை என்ற போர்வையில் இந்த கஸாபைக் காப்பாற்ற சிலர் தங்கள் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். இவனைத் தூக்கிலிட்டால் இந்திய – பாகிஸ்தான் உறவுகள் பாதிக்கப்படும் என்று சில விளக்கெண்ணை நியாயவாதிகளும் பேச ஆரம்பித்துள்ளனர். என்னமோ, இதற்கு முன் இந்தியாவும் பாகிஸ்தானும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருப்பது கெட்டுவிடும் என்பதைப் போலத்தான் இருக்கிறது இவர்கள் பேசுவது.

நாடு புகுந்து பொதுமக்களும் மீடியாவும் பார்க்க, 166 பேரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இந்த மரணங்களுக்கு என்ன பதில்? அங்கே செத்துப் போன மனித உரிமையை யார் மீட்டுத் தருவார்கள்? இன்று தவியாய் தவிக்கும் அவர்களின் குடும்பத்துக்கு என்ன நியாயம் கிடைத்திருக்கிறது?

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதை ஆதரிக்கமுடியாது என்றாலும், இது தனிநபர் மீதான தாக்குதல் அல்லவே… ஒரு தேசத்தின் இறையாண்மையின் மீது விழுந்த அடி.  மீண்டும் இத்தகையதொரு அடி விழ முடியாத அளவுக்கு திருப்பிக் கொடுப்பதே சரியான தீர்வாக இருக்கும். இந்த கஸாப் ஒரு குறியீடுதான். அவன் எந்த மதம், நாடு, அவனுக்கு யார் யார் ஆதரவு என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்காமல், உடனடியாக தூக்கில் போடுவதே சரியான முடிவாக இருக்கும் (இன்னொரு விஷயம், கஸாப்புக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதத்தின் மூலத்தை ஒழிக்க என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை…)

ஆனால் இதனை உடனே நி்றைவேற்றாமல், மேல் முறையீடுகள், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள், அதைப் பரிசீலிக்கிறோம் என்ற பெயரில் காலம் கடத்தும் அரசியல், தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆளில்லை என்ற சப்பைக் கட்டுகளைத் தொடரவே அரசு விரும்புவது தெரிகிறது. பாராளுமன்றத் தாக்குதலை நடத்திய அப்சல் குரு தூக்கு தண்டனை பெற்றும், இன்னும் அரசு விருந்தினருக்கு சமமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடுமை தொடர்கிறது. இதே போன்ற நிலைதான் கஸாப் விஷயத்திலும் தொடரப்போகிறது.

இது நிச்சயம் ராஜதந்திரம் அல்ல… அரசின் கையாலாகாத்தனமே. பாகிஸ்தானுடனான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் இந்த கையாலாகாத்தனம் ஒருபோதும் உதவாது… மேலும் பல கஸாபுகளை இந்திய நகரங்களுக்குள்ளும் ஊடுருவ வைக்கவே இது உதவும்!

அப்ஸல் குருக்கள், கஸாப்களை உடனே தூக்கில் போடுவதோடு, அவர்களின் பின்னால் நி்ன்று இயக்கும் காரணிகளை அழிப்பதில் கவனம் செலுத்துவதுதான் இன்னொரு பாராளுமன்றத் தாக்குதலையோ, மும்பை கொடுமையையோ தடுக்க உதவும்!

-வினோ

என்வழி

5 thoughts on “கஸாப் தண்டனை… ஒரு கசப்பான உண்மை!

 1. யூர்கன் க்ருகியர்

  கசாப்புக்கு தூக்கே மிக குறைந்தபட்ச தண்டனை என்றிருக்கும் போது … இதை பற்றிய மறு ஆய்வு தேவை அற்றது. இதையும் மீறி எவனாவது மனித உரிமை என்று எவனாவது குட்டையை குழப்பினான் என்றால் அவனை சுட்டு கொள்வதே உத்தமம்.

 2. r.v.saravanan

  அரசின் கையாலாகாத்தனமே. பாகிஸ்தானுடனான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் இந்த கையாலாகாத்தனம் ஒருபோதும் உதவாது… மேலும் பல கஸாபுகளை இந்திய நகரங்களுக்குள்ளும் ஊடுருவ வைக்கவே இது உதவும்!

  repeat…………………….

 3. Mahesh

  Vino,
  Spectrum Raja,Kanimozhi pathhi ippa latest a oru audio tape release agi North India fulla odittu irukku. Idlyvadai.blogspot.com la andha headlines video coverage irukku. “enna solla” gra heading.Adha patthi ezudhunga please.

  Rgds,
  Mahesh

 4. palPalani

  இதுவரை கஸாப்பிடம் இருந்து உண்மைகள் பெறப்பட்டன? அதன் அடிப்படையில் என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? இனிமேல் என்ன எடுக்கப்போகிறார்கள்? இது சம்பந்தமா எந்த விசயமும் நமக்கு தெரியவில்லை அல்லது தெரிவிக்கப்படவில்லை.

  இவனை தூக்கிளிடுவதால் மற்ற தீவிரவாதிகள் பயப்படுவார்கள் என்பதோ, இல்லை இவனை விடுவிப்பதால் மற்ற தீவிரவாதிகள் பயப்படமாட்டார்கள் என்பதும் தேவையற்ற விவாதம். அதேபோல் இவனோட உயிரோடு இறந்த இந்திய அதிகாரிகளின் குடும்பத்தோடு ஒப்பிடுவதும் தேவையற்றது! உண்மையில் இவன் மூலமும் மற்ற விசாரணைகளின் மூலமும் கிடத்தி தகவல்கள், அதன் அடிப்படையிலான உண்மைகள் மூலம் நாம் என்ன நடவடிக்கை எடுத்தோம் அல்லது எடுக்கப்போகிறோம் என்பதில்தான் நமது பாதுகாப்பு இருக்கிறது, ஏன் அதுதான் பழிவாங்கலும் கூட.

  இவனை தூக்கிலிடுவதன் மூலம், நாம் நமது வெற்றியை அடைந்துவிட்டோம் என்பது, நெருப்புக்கோழி எதிரியிடம் இருந்து தலைய மறைக்கிற கதைதான்.

 5. Raja

  வினோ,
  இவன் ஒன்றும் இந்திய பிரஜையும் அல்ல. அது மட்டும் அல்லாமல் இவன் கொலை செய்தது தனி மனிதர்களை அல்ல. இந்திய தேசத்தை. இவனை ஒரு சாதரன அடி தடி கொலைகாரனைப் போல் இவ்வளவு நாள் விசாரித்ததே தவறு. நமது சட்டம் இன்றைய கால கட்டத்திற்கு மாற்றப் படவில்லை. எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு என தனி சட்டம், தனி கோர்ட், விரைவான விசாரான எதுவும் இல்லை. இதில் தண்டனை கிடைத்தும் அவனை தூக்கில போட அரசு தயங்குகிறது. உன்மையாக ந்மக்கே வருத்தமாக இருக்கிறதே. பலியான மக்கள் மற்றும் வீரர்களுக்கு எபப்டி இருக்கும்… கசாப் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதிதானே தவிர முஸ்லிம் அல்ல் என்பது எப்போது இந்த அரசியல்வாதிகளுக்கும் அவனை ஆதரிப்பவர்களுக்கும் தெரிய போகிறதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *