BREAKING NEWS
Search

‘கலைந்தாலும், பிரிந்தாலும் கட்சிகளை சேர்க்கும் சக்தி என்னிடம் உள்ளது!’

‘கூட்டணி கலைந்தாலும், பிரிந்தாலும் கட்சிகளை சேர்க்கும் சக்தி என்னிடத்தில் இருக்கிறது!’- முதல்வர்


சென்னை: கூட்டணி கலைந்தாலும் பிரிந்தாலும் சேர்க்கிற சக்தி என்னிடம் உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.

மேலும், செம்மொழி மாநாட்டு நிறைவு நாளில், பட்ஜெட் படிப்பது போல் தமிழின் வளர்ச்சிக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், மாநாட்டுப் பந்தலில் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற சிறப்புக் கருத்தரங்கம் நேற்று மாலை நடந்தது. இந்த கருத்தரங்கத்துக்கு, முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துக்களை அள்ளி, அள்ளி தந்துள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், இதனை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் என் சார்பில் நன்றி.

நிரம்பப் பேசுவேன்…

கடந்த 4 நாள்களாக கோவை திருநகரில் மக்கள் வெள்ளமென திரண்டு எங்கே சென்றாலும் தமிழ் தமிழர் என்று முழக்கமிடும் நிலை ஏற்பட்டு, நாளையும், நாளை மறுநாளும், நடைபெறுகின்ற கருத்தரங்கங்கள், ஆய்வரங்களுக்குப் பிறகு 27-ந் தேதி நடைபெறும் மாநாட்டு நிறைவு விழாவில் நிரம்ப பேச இருக்கின்றேன், இப்படி சொல்வதால் இன்றைக்கு பேசமாட்டேன் என்று பொருளல்ல. பேசுவேன். அளவோடு பேசுவேன்.

ஆணையிட்டுப் பழக்கமில்லை…

இங்கு எனக்கு இடப்பட்ட ஆணைகளை எப்படி நிறைவேற்றுவது என்பதை பற்றி சிந்திக்க நேரம் எடுத்துக் கொண்டு, நிறைவு நாளில் பல்லாயிரக்கணக்கில் பொங்கி வழிகின்ற மக்கள் கூட்டத்தில், மாநாட்டின் வாயிலாக நாம் என்னென்ன காரியங்களில் ஈடுபட இருக்கிறோம், அதற்கு நீங்கள் எப்படி கைகொடுக்க வேண்டும், ஆதரவு வழங்கவேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுக்க இருக்கின்றேன். ஆணையிட்டு பழக்கம் இல்லாததால்.

அதனால், நீங்கள் சொன்ன கருத்துக்களை எடுத்துரைத்த ஆலோசனைகளை தமிழை வாழ வைக்க தமிழுக்கு வலிவும் பொலிவும் சேர்க்க என்னென்ன செயல்களில் ஈடுபடவேண்டுமோ இங்கு வீற்றிருக்கின்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் இட்ட ஆணைகளாக, இங்கே அமர்ந்திருக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களாகிய நீங்கள் தந்துள்ள ஆணையாக ஏற்று பணிபுரிவோம், தொண்டு புரிவோம் என்பதை என்னுடைய பேச்சின் முன்னுரையாக கூறுகிறேன்.

‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’

இன்றைய தினம் இந்த மாநாட்டு கருத்தரங்கின் தலைப்பு, ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்பதாகும். இப்பொழுது எங்கும் தமிழாக இருக்கிறதா? இயங்கும் தமிழாக இருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இங்கு பேசிய தலைவர்கள் பேச்சில் இருந்து இதை நான் கூற வேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ளேன். இங்கு பேசிய 20-க்கும் மேற்பட்ட கட்சிகளை சேர்ந்தோர் அமர்ந்துள்ள காட்சியினரைப் பார்த்து மறுபடியும் பழைய காலத்துக்கு கூட்டணி வந்தது போல் இருக்கிறதே என்று கூட சிலர் வியந்தார்கள்.

பிரிந்தாலும் கலைந்தாலும்…

நான் அவர்களுக்கு சொல்லுகிறேன். கூட்டணி கலைந்தாலும், பிரிந்தாலும் கட்சிகளை சேர்க்கும் சக்தி என்னிடத்தில் இருக்கிறது. அது மந்திர சக்தி அல்ல. மாயசக்தி அல்ல. அந்த சக்திதான் நான் கற்ற, நான் பால் குடித்த தமிழ் என்னும் சக்தி.

அதை நீங்களும் உணர்ந்திருக்கின்ற காரணத்தினால்தான் இங்கே கடந்த சில நாள்களாக, மேலும் சில நாள்களுக்கு இருக்கும் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு, தமிழை வாழ வைக்க, தமிழுக்கு காப்பளிக்க என்னென்ன வழிமுறைகள் கூறப்படும் என்பதை கேட்டு, அவ்வாறு நடப்போம் என்று காத்திருக்கின்றீர்கள்.

அறப் போராட்டம்

எனக்கு இந்த மாநாட்டில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வது மாத்திரமல்ல, கலந்து கொள்வார்களா, மாட்டார்களா? என்ற எண்ணத்தோடு டெல்லியில் உள்ள சி.பி.ஐ., சி.பி.எம். கட்சித் தலைவர்கள் வருவார்களா என்று எண்ணியபோது, தட்டியவுடன் திறக்கும் கதவைப் போல், கேட்டவுடன் நம்முடைய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராஜாவும், பழைய நண்பரும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரான யெச்சூரியும், மிகுந்த சிரமங்களுக்கிடையே இங்கே கலந்து கொண்டிருக்கிறார்கள்.

2 பேர் மாத்திரமா? நாங்கள் வரவில்லையா என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் கேள்விக்குறியாக இருந்த இரு கட்சிகளின் தலைவர்கள் இங்கே வந்தார்கள் என்றால், நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. இன்று மேடையில் உங்களுடைய தமிழ்த் தாய்க்கு, தமிழுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மொழி உணர்வோடு, மொழி குடும்பத்தை சேர்ந்தவர்களாகிய நாம் அந்த குடும்பத்தை சேர்ந்த மொழிகளுக்கு தரவேண்டிய தகுதிகளை தமிழகத்திலும் சரி, டெல்லியிலும் சரி தரப்பட்டாக வேண்டும். அதற்கான அறப்போராட்டத்தை அமைதியாக நடத்தவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாடு.

கோரிக்கை வைக்க வேண்டிய இடம் டெல்லி….

தமிழக காங்கிரஸ் தலைவர் பேசும்போது 10 கோரிக்கைகளை வைத்தார். எனக்கு சந்தேகம். அது நான்தானா என்று என்னை நான் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். என்ன என்றால், தமிழக காங்கிரஸ் தலைவர் கோரிக்கை வைக்கின்ற இடத்தை விட்டுவிட்டு இங்கு வைக்கிறார்.

நான் வேடிக்கைக்காக சொல்லவில்லை. உண்மையிலேயே வட புலத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், நாட்டை ஆளும் சக்தி படைத்தவர்கள். அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள், தொல்லைகள் உள்ள காலகட்டத்தில் நம் பிரச்சினைகளை உடனடியாக நிறைவேற்றுவது இயலாத காரியம்தான்.

இந்தியாவில் எத்தனையோ மக்கள், மாநிலங்கள், அவற்றின் நிர்வாகங்கள் அதில் உள்ள பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு நாம் சொன்ன உடனே மறுநாள் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்று தந்தி கொடுத்தால் மறுநாளே எடுத்துக் கொள் என்று தருவதற்கு தயாராக இல்லாததற்கு அவர்களுக்கு மனம் இல்லை என்று பொருள் அல்ல. அந்த அளவுக்கு அலுவல்கள், நெருக்கடி, அவற்றை தாண்டித்தான் நம்மை கவனிக்க வேண்டும், அப்படி தாண்டி இங்கு வரும் கஷ்டத்தை போக்குவதற்காகத்தான் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இங்கே இந்த மாநாட்டில் என்னிடத்தில் உணர்த்தி, தமிழ்நாடு அரசு இதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றால் என்ன பொருள்? மத்திய அரசு செய்ய முடியாதவற்றை செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கும். அவர்களுக்கு நாங்களும் துணையாக இருப்போம் என்று குறிப்பிடுகின்ற நிலையில்தான் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். தமிழுக்காக என்றால் 10 கோரிக்கைகள் அல்ல. 10 கட்டளைகளை நிறைவேற்றக் கூடியவர்கள் நாம்.

உயிர் தமிழுக்கு உடல் தமிழுக்கு…

உயிர் தமிழுக்கு உடல் தமிழுக்கு என்று முழங்கிய தலைவர்கள் வழிவந்தவர்கள் நாம். செய்து காட்டியவர்கள் நாம். அந்த வீரவரலாறுக்கு உரியவர்கள் நாம். அதனால்தான் தமிழகத்தில் ஏற்படவேண்டிய மறுமலர்ச்சி, ஊர்வலத்தால், மாநாட்டால், தெருக்கூட்டத்தால், அரங்குகளால் அந்த அரங்குகளில் நிகழும் அமர்வுகளில், அதில் கிடைக்கும் ஆய்வுரைகளால் முடிந்து விடக்கூடியதல்ல.

நாம் ஒவ்வொருவரும் மொழிக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். அதற்கு முதல்கட்டமாக, இங்கே பேசிய தலைவர்கள் குறிப்பிட்டதை போல் இந்த மாநாட்டில் கூடியிருக்கின்ற நீங்கள்தான் பயிற்சி பெறவேண்டும். அந்த பயிற்சியை பெறுவதற்கு நீங்கள் ஆயத்தமாக வேண்டும்.

செம்மொழி அந்தஸ்து…

தமிழிலேதான் ஒருவருக்கு ஒருவர் முடிவெடுக்க வேண்டும். அதை நான் எடுத்துக் கொண்டால் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், எனக்கு தமிழை தவிர வேறு மொழிகளில் அந்த அளவுக்கு பயிற்சி இல்லை. அவருக்கு ஆங்கிலம் தெரியாது,

அதனால்தான் தமிழில் பேசவேண்டும் என்று சுருக்கமாக கூறிவிட்டு போவார்கள். ஆனால் என்னை விட அதிகம் ஆங்கிலம் பயின்ற, தமிழை தாய்மொழியாக கொண்டு, பிற மொழி புலமை பெற்றவர்களான திரு.வி.க. போன்றவர்கள் எல்லாம் ஆங்கிலம் பயின்றவர்கள்தான். தமிழின் வளர்ச்சிக்கு, தமிழில் பேச வேண்டும், தமிழில் பயிற்சி பெறவேண்டும், வீட்டில் குழந்தை தவழ்ந்தால் மட்டும் போதாது. தமிழும் தவழவேண்டும் என்றார்கள். தமிழர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.

மூவேந்தர் காலத்தில் தமிழ் சிறந்து விளங்கியது. இடைப்பட்ட காலத்தில் களப்பிரர்கள் ஆட்சியில் தமிழுக்கு இருண்டகாலம் ஆனது. 6,7,8-ம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழிக்கு பல்லவர்கள் ஆதரவு தந்தார்கள். அதன்பிறகு இடைக்கால சோழர், பாண்டியர் ஆட்சியில் தமிழ் சிறப்பாக இருந்தது. 14 முதல் நூற்றாண்டு வரை தமிழ் சீரழிந்து போயிற்று.

இந்த நிலையை மாற்றத்தான் பரிதிமாற் கலைஞர் போன்றோர் எப்படியாவது தமிழுக்கு செம்மொழி தகுதி பெற வேண்டும் என்று எண்ணினார்கள். அவரைப் போன்ற தமிழறிஞர்கள் குரல் கொடுத்ததால் நாம் ஆட்சி பொறுப்பை ஏற்று, மத்தியில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்லி செம்மொழி தகுதியை பெற்றுள்ளோம். சோனியா எழுதிய கடிதத்தை பற்றி தங்கபாலு சொன்னார். நான் திருச்சி மாநாட்டில் அந்த கடிதத்தை காட்டி, இது என் தாத்தா காலத்தில் வைக்கப்பட்ட செப்பேடு என்று கொள்ளு பேரன், பேத்திகள் சொல்லவேண்டும் என்று கூறினேன்.

அறிவிப்பு வெளியாகும்…

அதன்பிறகு, செம்மொழிக்கான அலுவலகத்தை மைசூரில் இருந்து, சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று, சென்னை மாநகருக்கு அந்த அலுவலகம் மாற்றப்பட்டது. அது சிறிய வாடகை இடத்தில் இயங்கி வருகிறது.

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பழைய கோட்டை இருந்த அலுவலகத்துக்கு இந்த செம்மொழி அலுவலகத்தை மாற்ற முடிவுசெய்துள்ளோம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான் இனி செம்மொழி தலைமை அலுவலகம். அந்த அலுவலகத்தில் செம்மொழி ஆய்வுக்கான பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் சென்னை திரும்புவதற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதற்கான வேலைகள் வேகமாக நடக்கிறது. அங்குள்ள முதல்வர் அலுவலகம், இனி செம்மொழி தலைமை அலுவலகம் என்றழைக்கப்படும்.

செம்மொழிக்கு எந்த அளவுக்கு பொலிவு சேர்க்கப்படுமோ அதைச் சேர்ப்போம். இங்கு நடைபெறும் ஆய்வரங்கம், கருத்தரங்கில், இங்கு பேசிய தலைவர்கள் பேசியதை, தந்த அறிவுரைகளை கட்டளைகளை பற்றி யோசித்து நல்ல அறிவிப்புகள் இறுதிநாள் நிகழ்ச்சியில், உள்துறை மற்றும் நிதித்துறை மந்திரி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பல அறிவிப்புகளை வெளியிடுவேன். அதில் பட்ஜெட் படிப்பது போன்ற பல செய்திகளை சொல்ல இருக்கின்றேன்…,” என்றார்.




8 thoughts on “‘கலைந்தாலும், பிரிந்தாலும் கட்சிகளை சேர்க்கும் சக்தி என்னிடம் உள்ளது!’

  1. Thoma

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது அந்நாள், கூட்டணி வைத்து சொத்து வளர்ப்பது இந்நாள் .
    மேடையில் பாருங்கோ, ஸ்ரீதர் வாண்டையார், பூவை மூர்த்தி போன்ற தமிழ் வளர்த்த அண்ணல்களின் அணிவகுப்பை !!!!!

  2. sakthivel

    //நிரம்பப் பேசுவேன்…// – இப்ப மட்டும் குறைவாக பேசுவதாக நினைப்பு.
    //ஆணையிட்டுப் பழக்கமில்லை…// – ஒழித்துகட்டிதான் பழக்கம்.
    //எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’//- எங்கும்/எதிலும் தன் குடும்பம்.
    //பிரிந்தாலும் கலைந்தாலும்…// – புதிய துணைவியாரை தேடிகொள்வது..
    //அறப் போராட்டம்//- மூன்றே மணிநேரத்தில் வெற்றி
    //கோரிக்கை வைக்க வேண்டிய இடம் டெல்லி….//- இனி சோனியாவா.. கட்காரியவா????

    //உயிர் தமிழுக்கு உடல் தமிழுக்கு…// – முட்டாள் தமிழர்கள் ஏமாற இது போதும்….

  3. Mariappan

    சூப்பர் சத்திவேல். ஆனால் இந்த கிழம் தன் போக்கை மாற்றி கொள்ளவா போகிறது?

  4. குமரன்

    கருணாநிதிக்கு தற்போது ஜால்ரா அடிக்காத டாக்டர் கிருஷ்ணசாமி சரியாக சொல்லியிருக்கிறார்.
    http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1006/23/1100623045_2.htm

    ///ஈழத்தில் நம் இனத்தை அழித்த போரை நிறுத்த நாம் எப்படியெல்லாமோ போராடினோம், ஆனால் போர் நிற்கவில்லை. நமது போராட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. 6 கோடி பேர் தமிழ்நாட்டில் இருந்தும் நம்மால் ஈழத்தில் நம் இனத்தைக் காக்க முடியாமல் போனதற்கு நாம் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையாக போராடததே காரணம் ஆகும்.

    ஒரு பக்கம் திராவிடம் என்ற அடையாளம், மறுபக்கம் சாதியம் என்கிற நம்மை பிரிக்கும் சமூக அடையாளம். ஈழ விடுதலைக்கு எதிராக நடந்த துரோகத்திற்கு திராவிடமும் ஒரு காரணம். நாம் எப்படி திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம்?//

    கருணாநிதி இப்படித்தான் திராவிடன் தமிழன் என்றெல்லாம் சமயத்துக்கு ஏற்றது போலப் பசப்பி தனது குடும்பத்தை வளர்ப்பதற்கும், வலப்படுத்திக்கொள்ளவும் பயன்படுத்திக்கொளகிறார்.

    இன்றைய செய்தி கலாநிதி மாறன் spice jet விமானக் கம்பனியில் தனது பங்கை 17 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக மேலும் பங்குகளை கிட்டத்ததட்ட ரூபாய் 800 கோடிக்கு வாங்கி உயர்த்தியிருக்கிராராம். நான் சாமானியன் என்றும் சூத்திரன் என்றும் சொல்லிக் கொள்ளும் கருணாநிதியின் குடும்பத்தின் வாங்கும் திறத்தைப் பார்த்தீர்களா? தமிழனோ ஈழத்தில் கம்பிவேலிக்குள்ளே, வானமே கூரையாக, அடுத்தவேளைக்கு கஞ்சிக்கும் வழியில்லாமல், மருத்துவ வசதியில்லாமல் சுதந்திரமில்லாமல் சிங்களனுக்கு அடிமையாய் இருக்கிறான். கருணாநிதி வெறுமே மத்திய அரசை வலியுருத்தித் தீர்மானம் போட்டுவிட்டு தன்னைப் பற்றிய புகழ் மாலைகளைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு திரிகிறார். அவரது துரோகத்தைப் பற்றி யாருமே வாயைத் திறந்து பேசமாட்டேன் என்கிறார்கள்.

    கிருஷ்ணசாமி போன்றோர் உண்மையை உள்ளபடிக் கூறினாலும் கருணாநிதியின் துரோகத்தை வெளிப்படையாகப் பேசவில்லை.

  5. M.S.Vasan

    ‘ CUT & PASTE கலைஞர் ‘ பட்டத்தை
    அளித்துவிடலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *